திருவஹிந்திரபுரம் தேவநாதப் பெருமாள் மலைக் கோவில் சிறப்புக்கள்
திருவந்திபுரம் என்றும் திருவஹிந்திரபுரம் என்றும் அழைக்கப்படும் இம்மலைக் கோயில் சென்னையிலிருந்து 108 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கடலூருக்கு அருகில் உள்ளது. இத்தலம் 108 வைணவ திவ்யதேசங்களில் 41வது திவ்ய தேசம் ஆகும்.
இம்மலை பிரம்மனுக்கு உரியது என்ற என்பதால் இதன் பெயர் பிரம்மாச்சலம் ஆகும். மருந்து மலை என்ற பெயரும் உண்டு.இக் கோவிலில் வடகலை மரபுப்படி பூசைகள் நடைபெறுகின்றன.
பெருமாளின் சிறப்பு
தேவநாதன் என்றும் தெய்வ நாயகன் என்றும் கருவறை நாதர் அழைக்கப்படுகின்றார். இங்குப் பெருமாள் மும்மூர்த்தியின் அம்சங்களும் இணைந்த ஒரே ரூபமாகக் காட்சி அளிக்கின்றார். சிவபெருமானுக்குரிய நெற்றிக்கண்ணும் பிரம்ம தேவனின் தாமரை மலரையும் இவர் கொண்டிருக்கிறார்.
நின்ற கோலத்தில் த்ரீ மூர்த்தியாக காட்சி தருகின்றார். பெருமாளை தாச சத்யன், அச்சுதன், ஸ்திர ஜோதிஷன், அனக ஜோதிஷன் என்று பல பெயர்களில் புராணங்கள் அழைக்கின்றன.
பல மொழி பிரார்த்தனை நூல்கள்
திருமங்கையாழ்வார் பத்து பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருத்தலம். மணவாள மாமுனிகள் இத்தலத்தின் சிறப்புகளை நூலாகப் பாடியுள்ளார். வேதாந்த தேசிகர் தேவநாதப் பெருமாள் குறித்து மும்மணி கோவை என்னும் நூலை இயற்றியுள்ளார்.
வடமொழியில் தேவநாயக பஞ்சாசத்து என்ற நூலும் பிராகிருத மொழியில் அச்சுத சதகம் என்ற நூலும் மூலவரான தேவ நாயகர் மீதும் உற்சவரான அச்சுத மூர்த்தி மீதும் பாடப்பட்டுள்ளன. திருவந்திபுரம் பற்றி பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம், பிருகாரததீய புராணம் போன்றவற்றிலும் கதைகள் காணப்படுகின்றன.
தாயாரின் மகத்துவம்
திருவந்திபுரம் மலைக்கோயிலில் தாயார் ஹேமாம்புஜவல்லி என்றும் வடமொழியிலும் செங்கமலம் என்று தமிழிலும் அழைக்கப்படுகின்றார். ஹேமா என்றால் தங்கம், அம்புஜம் என்றால் தாமரை. இவர் தங்கத் தாமரைக் கொடியாக விளங்குகின்றாள். பார்க்கவி என்ற பெயரும் இவளுக்கு உண்டு.
உப சன்னதிகள்
திருவந்திபுரத்தில் பெரிய திருவடி சிறிய திருவடிக்கு தனித்தனியே சன்னதிகள் உள்ளன. ஆனால் அவர்களில் எவரும் மற்ற கோவில்களில் இருப்பதைப் போல கைகளைக் கூப்பி வணங்கி நிற்கும் கோலத்தில் காணப்படவில்லை.
அனஞ்சலி கோலத்தில் உள்ளனர். ஆண்டாளுக்கும் இராமருக்கும் தனி சன்னதிகள் உண்டு. வேறு எந்த மலையிலும் இல்லாத தனிச்சிறப்பு இந்த மலையில் ஹயக்ரீவர் தனி சன்னதி கொண்டு இருப்பதாகும். இக் கோவிலில் ஆதி கேசவப் பெருமாளுக்கு தனி சன்னதி உள்ளது.
மற்ற கோயில்களில் நரசிம்மர் லட்சுமியைத் தனது இடது தொடையில் இருத்தி இருப்பார். ஆனால் இங்கு லட்சுமி நரசிம்மர் லட்சுமித்தாயாரை தனது வலது தொடையின் மீது அமர்த்தி உள்ளார். சிவபெருமான் கோவில்களில் தலவிருட்சமாக விளங்கும் வில்வ மரம் இங்கு தல விருட்சமாக இருக்கின்றது.
தீர்த்தம்
திருவந்திபுரத்தில் தீர்த்தத்தின் பெயர் கருட தீர்த்தம் ஆகும். போரில் ஈடுபட்டு அசுரரை வதைத்த அனந்தசயனப் பெருமாளுக்கு தாகம் எடுத்தது. அவரது தாகத்தைத் தீர்க்க ஆதிசேஷன் தன் வாளால் பூமியை ஓங்கி அடித்தது. பூமி பிளந்து உள்ளே இருந்து ஊற்றுப் பொங்கியது.
இதுவே இங்குள்ள தீர்த்தக் கிணறு ஆகும். இத்தீர்த்தத்தை சேஷ தீர்த்தம் என்றும் நாக தீர்த்தம் என்றும் அழைக்கின்றனர்.இவ் ஊரின் அருகே ஓடும் கெடில ஆறு தெற்கிலிருந்து வடக்கு நோக்கி பாய்வதால் உத்தரவாகினி என்று அழைக்கப்படுகின்றது.
மறு, பால் பரு, தேமல் போன்ற தோல் நோய்ப் பாதிப்பால் அவதிப்படுவோர் இத்திருத்தலத்திற்கு வந்து நாக தீர்த்தத்தில் உப்பு, மிளகு, வெல்லம் தூவுகின்றனர். உப்பும் வெல்லமும் நீரில் கரைவது போல தமது தோல் நோயும் கரைந்துவிடும் என்று நம்புகின்றனர்.
சிவப்பு தண்ணீர் ஓடும் கருடநதி
கெடில ஆறு என்று தமிழில் அழைக்கப்படும் ஆறு இத்தலத்தில் வேறு பெயர் பெறுகின்றது. கெடில ஆற்று நாகரிகம் பழந்தமிழர் நாரிகங்களில் குறிப்பிடத்தக்க சிறப்புடையது. கருடன் கொண்டு வந்த நதி என்பதால் இங்கு பாயும் நதிக்கு கருட நதி என்றும் பெயர் உண்டு.
வடக்கு நோக்கிப் பாயும் இந்நதியில் குளிப்பதால் கங்கையில் குளித்த புண்ணியம் உண்டாகும். ரிஷி ஒருவரின் சாபத்தின் காரணமாக கருட நதி மழைக்காலத்தில் செம்மண் நதி போல சிவந்த நிறத்தில் காணப்படும்.
கதை 1
தேவாசுர யுத்தம்
திருவந்திபுரம் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்த திருத்தலமாகும். அசுரர்களுக்கு ஆதரவாக சிவபெருமானும் தேவர்களுக்கு ஆதரவாக திருமாலும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட தலம் இதுவே. ஒரு சமயம் அசுரர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றுமாறு தேவர்கள் பெருமாளை வேண்டிக் கொண்டனர்.
பெருமாள் தங்களை அழித்து விடுவார் என்று அஞ்சிய அசுரர்கள் பிரம்மதேவனிடம் போய் யோசனை கேட்டனர். அவர் சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். அவர் உங்களுக்கு வேண்டும் வரம் அருள்வார் என்றார். அசுரர்களும் சிவபெருமானை நோக்கிக் கடும் தவம் செய்து போரில் தங்களுக்கு உதவியாக இருந்து தேவர்களை அழிக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றனர்.
இரு தரப்பினருக்கும் இடையே தேவாசுரப் போர் தொடங்கியது. தேவர்களின் பக்கம் பெருமாளும் அசுரர்களின் பக்கம் சிவபெருமானும் படை நடத்தி வந்தனர். பெருமாள் தன் சக்ராயுதத்தை ஏவி அசுரர்களைப் பஸ்பம் ஆக்கினார். பெருமாளின் பராக்கிரமத்தை நேரில் கண்ட சிவபெருமானும் பிரம்ம தேவனும் அவரோடு வந்து ஐக்கியம் ஆகிவிட்டனர்.
இதனால் இத்திருத்தலத்தில் பிரம்மதேவனின் தாமரை மலரைக் கையில் ஏந்தி சிவபெருமானின் நெற்றிக் கண்ணை முகத்தில் வாங்கி மும்மூர்த்தி அம்சமாக திருமால் காட்சியளிக்கின்றார். தேவர்களுக்காகப் போரிட்ட எம்பெருமான் தேவநாதனாக பக்தர்களுக்கு இங்கு அருள் பாலிக்கின்றார்.
கதை 2
இந்திரன் விருத்தாசுரன் போர்
விருத்தாசுரன் தன்னுடைய தவ வலிமையால் தேவலோகத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைக்க விரும்பினான். அதனால் தேவர்களின் தலைவன் இந்திரனைச் சிறை பிடிக்க சென்றான். இந்திரன் அசுரனுக்குப் பயந்து இத்திருத்தலத்திற்கு வந்து இங்கு மலர்ந்துள்ள ஒரு தாமரை மலரின் தண்டிற்குள் போய் ஒளிந்து கொண்டான்.
இந்திரனைக் காணாத தேவர்கள் திருமாலிடம் வந்து வணங்கி நின்று இந்திரனைக் கண்டுபிடித்துத் தரும்படி வேண்டினர். திருமால் வா என்று அழைக்கவும் இந்திரன் வெளிப்பட்டான். இந்திரன் தேவர்களுக்குக் காட்சியளித்த இடம் இத்திருத்தலம் என்பதால் இத்தலம் திருவஹிந்திரபுரம் எனப்படுகிறது.
இத்திருத்தலத்தில் இந்திரனுக்கு ஒரு புதிய வஜ்ராயதத்தையும் தேவநாதப் பெருமாள் வழங்கினார். புதிய வஜ்ராயுதத்தைக் கொண்டு தேவேந்திரன் விருத்தாசுரனைக் கொன்றான். மீண்டும் தேவலோகம் சென்று தேவர்களின் தலைவனாக அதிகாரம் செலுத்தத் தொடங்கினான்.
கதை 3
தெய்வத் திருமணத்
தலம் பெருமாளை மணக்க விரும்பிய செங்கமலவல்லி நாச்சியார் இத்திருத்தலத்துக்கு வந்து வைகுண்ட வாசனாகிய தேவ நாதனை மணமகனாக அடைய வேண்டும் என்று தவம் இருந்தார். தவத்தின் பலனாக எம்பெருமான் இலட்சுமியை மணமுடித்தார்.
எனவே இத்தலம் திருமணத் திருத்தலம் எனப் பெயர் பெற்றது. இங்கு திருமணம் நடந்தால் யோகம் என்று இப்பகுதி மக்கள் நம்புவதால் மூர்த்த நாட்களில் அதிகமான மணமக்கள் இங்குத் திருமணம் செய்து கொள்கின்றனர்.
கோயில் நிர்வாகம் ஒரு கல்யாண மூர்த்தத்துக்கு 50 ஜோடிகள் வரை அனுமதிக்கின்றது. திருமணத் தடை உள்ளவர்கள் இத்தலத்தில் வந்து இறைவனை வேண்டினால் தடை விலகி திருமணம் சுபிட்சமாக நடக்கும்.
கதை 4
மருத்துவா மலை
திருவந்திபுரம் என்னும் இத்திருத்தலம் மருந்து மலை (ஒளஷத மலை) என்றும் அழைக்கப்படுகின்றது. காரணம் அனுமன் நாக பாசத்தால் கட்டுண்ட லட்சுமணரை விடுவிக்க சஞ்சீவி மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் வழியில் ஆங்காங்கே மலைத் துண்டுகள் சிதறின.
இம்மலை அவ்வாறு சிதறிய மலைப்பகுதிகளில் ஒன்று என்பதால் சஞ்சீவி மூலிகை நிறைந்த மலை என்ற பொருளில் மருந்து மலை (மருத்துவா மலை) என்று அழைக்கப்படுகின்றது. இதே கதை ராஜபாளையம் சஞ்சீவி மலைக்கும் நாகர்கோவில் மருத்துவமலைக்கும் சொல்லப்படுகின்றது.
இக்கதை சற்று மாற்றப்பட்டு கோவை மாவட்டத்தில் மேரு மலையிலிருந்து உதிர்ந்தவை என்று அப்பகுதியில் இருக்கும் மலைகளை கூறுகின்ற மரபும் உள்ளது.
விழாக்கள்
ஆண்டின் தொடக்கத்தில் சித்திரை மாதம் நடக்கும் 12 நாட்கள் பிரம்மோற்சவத்தில் . ஐந்தாம் நாள் அன்று இரவில் கருட சேவை நடைபெறும்.ஒன்பதாம் நாள் தேர் திருவிழா தீர்த்தவாரி விடையாற்றி நடைபெறும். அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் தேர் பார்க்கக் கூடுவார்கள்.
வைகாசி மாதம் விசாகத் திருநாளில் நம்மாழ்வார் சாத்துமுறை 10 நாட்கள் நடைபெறும். வசந்தோற்சவம் 10 நாட்கள் நடக்கும். பௌர்ணமி சாத்துமுறை உண்டு. ஆடி மாதம் நரசிம்ம ஜெயந்தி கொண்டாடப்படும். ஆடிப்பூரத்தன்று தாயாருக்கு உற்சவம் நடைபெறும்.
ஆவணி மாதம் பவித்திர உற்சவம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவும் புரட்டாசியில் மகாதேசிகன் பிரம்மோற்சவமும் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஐப்பசி மாதத்தில் முதல் ஆழ்வார்கள் மூவர் உற்சவம் நடக்கும். தொடர்ந்து கார்த்திகையில் திருக்கார்த்திகை உற்சவம் நடைபெறும்.
மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, போகி, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படும். மார்கழியில் பத்து நாள் திருவிழா நடைபெறும். பொங்கல் அன்று சங்கராந்தி வழிபாடுகள் சிறப்பிடம் பெறும். பங்குனியில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் நடைபெறும். பங்குனி மகோத்சவம் உண்டு.
வழிபாட்டின் பலன்
திருவந்திபுரம் கோவிலுக்கு வந்து தேவநாதப் பெருமாளை வணங்கி பெருமாளுக்கு திருமஞ்சனம் நடத்திப் பார்ப்பவருக்குத் திருமண தடை விலகும். தீர்க்க ஆயுளும் தேக சுக ஆரோக்கியமும் கிட்டும். வியாபாரத்தில் நல்ல லாபமும் பதவி உயர்வும் சகல நன்மைகளும் மேன்மைகளும் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |