மிக பெரிய சாதனையாளராக வர பகவத் கீதை சொல்லும் வழி
இந்த உலகம் அழகான ஒரு பாடசாலையாகும். அப்படியாக வாழ்க்கை என்பது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக அமைவது இல்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்திலும், வெவ்வேறு சூழலிலும் பிறந்து வளர்கின்ற நிலை இருக்கிறது.
அப்படியாக மனிதன் எத்தனை பெரிய கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கையை வாழ்பவராக இருந்தாலும் சரி, எத்தனை பெரிய மாட மாளிகைகளில் வாழும் நிலைகளாக இருந்தாலும் சரி, பிரபஞ்சம் அனைவருக்கும் சம நிலையில் பல வாய்ப்புகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
அதாவது மனிதனுக்கு அவன் என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கின்றானோ அதற்கான வாய்ப்புகளை பிரபஞ்சம் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.அதை அவன் உதாசீனம் செய்யாமல் பயன்படுத்த வேண்டியது அவன் கடமை ஆகும்.
இங்கு பலரும் நான் நினைத்தது நடக்கவில்லை என்று புலம்புவதை கவனிக்க முடியும் . ஆனால் உண்மையில் ஒருவர் ஒரு விஷயம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று தீர்க்கமாக எண்ணி செயல் படத்தொடங்கினார்கள் என்றால் கட்டாயமாக இந்த பிரபஞ்சம் அவர்களுக்கான வழியை கொடுத்து கொண்டே இருக்கிறது.
அவ்வாறு பிரபஞ்சம் கொடுத்த வழியை எவர் ஒருவர் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான் இன்று மிகப்பெரிய சாதனையாளர்களாகவும் உலகம் போற்றும் மனிதர்களாகவும் இருக்கிறார்கள். இதைத்தான் பகவத் கீதையில் கிருஷ்ணர் அனைத்து இடங்களிலும் "கடமையைச் செய் பலனை எதிர்பாராதே" என்று சொல்கிறார்.
அதாவது உன்னுடைய எண்ணம் ஆசை குறிக்கோள் எல்லாம் சரியாக இருந்து அதற்கான அனைத்து முயற்சிகளும் நீ செய்து கொண்டே இருந்தால் உன்னுடைய முயற்சிக்கு ஏற்ற பலனை கட்டாயமாக நீ பெறுவாய் அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்பதை அவர் உணர்த்துகிறார். ஆக நாம்நினைத்தது நடக்க இந்த பிரபஞ்சம் கொடுக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்த வேண்டும்.
எப்பொழுதும் விழிப்புணர்வோடு இருப்பதை தாண்டி மனதில் வஞ்சகம், பொறாமை, அழுக்கு போன்றவற்றை கொண்டு நிரம்பி இல்லாமல் இருக்க வேண்டும். இவ்வாறு எதிர்மறை ஆற்றல் கொண்டு நிறைந்து இருக்கும் மனதில் தெய்வம் வாசம் செய்வதில்லை. அதோடு நம்முடைய அறிவும் பல இடங்களில் செயல் பட முடியாமல் போய்விடுகிறது.
ஆதலால் சரியான பாதையை தேர்ந்தெடுப்போம் நல்ல சிந்தனைகளை நமக்குள் விதைப்போம். கடவுள் மீது அளவு கடந்த அன்பும் நம்பிக்கையும் கொள்வோம். என்றோ ஒருநாள் இன்று போடுகின்ற உழைப்புக்கு மிகப்பெரிய அளவில் ஒரு பாராட்டுக்களும் அங்கீகாரமும் இந்த பிரபஞ்சம் நமக்கு கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
மேலும் இன்றைய சாதனையாளர்கள் எல்லோரும் அன்று ஒரு நாள் நடந்த கஷ்டங்களை தாங்கிக் கொண்டு முயற்சிகளைக் கைவிடாமல் பொறுமையாக கடந்து வந்தவர்கள் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. பொறுமைக்கும் விடாமுயற்சிக்கும் நிச்சயம் இந்த பிரபஞ்சம் பாராட்டுகளை தெரிவிக்கும்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







