நோய்களை தீர்க்கும் திருச்செந்தூர் கோயிலின் பன்னீர் இலை விபூதி பிரசாதம்
திருச்செந்தூர் கோயிலின் பன்னீர் இலை விபூதி பிரசாதத்தின் மகிமை மற்றும் சிறப்புகளை பற்றி பார்க்கலாம்.
பன்னீர் இலை விபூதி பிரசாதம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வழங்கப்படும் பன்னீர் இலை விபூதி பிரசாதத்திற்கு என்று தனித்துவமான மகிமையும் சிறப்புகளும் உண்டு. சூரபத்மனை போரில் வென்ற பின் மயிலாகவும் சேவலாகவும் தன்னுடன் வைத்துக் கொண்டவர் தான் முருகர்.
தினமும் காலையில் விஸ்வரூப தரிசனத்தில் சுவாமியின் பாதத்தில் வைத்து பூஜை செய்து பக்தர்களுக்கு திருச்செந்தூர் பன்னீர் இலை விபூதி பிரசாதம் வழங்கப்படுகிறது.
அதாவது, பன்னீர் இலையை நேராக வைத்து பார்த்தால் முருகரின் வேல் போன்று தெரியும். அதோடு, பன்னீர் இலையில் விபூதியை வைப்பது செல்வதை சேமிப்பது போன்றதாகும்.
முருகனுக்கு ஒரு பக்கத்துக்கு ஆறு கரங்கள் என 12 கரங்கள் உள்ளது போல பன்னீர் மரத்தின் இலையில் 12 நரம்புகள் உள்ளன. பன்னீரு இலை என்பது தான் நாளடைவில் பன்னீர் இலை என மாறியது.
பன்னீர் மர இலைகள்
முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்த பிறகு காயங்கள் ஆற வேண்டும் என்பதற்காக 12 கரங்களினால் விபூதி பிரசாதம் வழங்கினார் என்பது தல புராணமாகும்.
மேலும், சூர சம்ஹாரம் முடிந்தவுடன் அசுரர்களை எதிர்த்து போர் புரிந்த முப்பத்து முக்கோடி தேவர்களும் பன்னீர் மரங்களாக உள்ளனர் என்பதும் ஒரு ஐதீகம். பன்னீர் மர இலைகள் வேத மந்திர சக்தி உடையவை என்றும், அதில் பத்திரப்படுத்தப்படும் விபூதியிலும் வேத மந்திர சக்திகள் உள்ளது என்றும் புராணங்கள் கூறுகின்றன.
இந்த விபூதியை திருமண தடை உள்ளவர்கள், குழந்தை இல்லாதவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முருகப்பெருமானை வேண்டிக்கொண்டு நெற்றியில் வைத்துக்கொண்டால் தீராத தடையும் அகலும் என்பது நம்பிக்கை.
வலிப்பு, குஷ்டம், ஷயம், நீரிழிவு, குன்மம் போன்ற வியாதியால் பாதிப்படைந்தவர்கள் இந்த விபூதியை பூசிக்கொண்டு பின் மறைந்துவிடும் என்கிறது ஆதிசங்கரர் அருளிய சுப்ரமணிய புஜங்கத்தின் ஸ்லோகம்.