இழந்த செல்வதை மீண்டும் குபேரன் பெற்ற சக்தி வாய்ந்த தலம்
1.அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில்,திருவாலங்காடு
நோய்களை தீர்க்கும் வடாரண்யேஸ்வரர் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ள புகழ்பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றாகும்.
சங்க காலத்திற்கு முற்பட்டது என்று கருதப்படும் வடாரண்யேஸ்வரர் கோவில், தொண்டை நாட்டுத் தலங்களில் 15வது தலமாக விளங்குகிறது. திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூன்று தமிழ் சைவ நாயன்மார்களால் பாடல் பெற்ற தேவாரத் தலங்களில் ஒன்றாகும். முன்னோரு காலத்தில் பல்லவ, சோழ, விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, சோழ மன்னன் இராஜராஜ சோழன் இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்துள்ளார். இந்த கோவிலின் மூலவர் வடாரண்யேஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இறைவியின் பெயர் சமீசீனாம்பிகை. அம்பாள் சமீசீனாம்பிகை மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார்.
இக்கோவிலில் வள்ளுவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, விஷ்ணு, சண்டிகேஸ்வரி ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. கோவிலின் வளாகத்தில் பல சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
மேலும்,இக்கோவில் உடல்நல பிரச்சனைகள், மனநல பாதிப்புகள் போன்ற நோய்களை தீர்க்கும் சிறப்பு தலமாகவும் விளங்குகிறது.
இடம்
அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு - 631210, திருவள்ளூர் மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6.00 மணி முதல் இரவு 7.45 வரை
2. அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் திருநின்றவூர்
இக்கோயில் 108 திவ்யா தேசங்களில் ஒன்றாகும்.இக்கோயிலின் அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் இறைவன் திருநாமம் பக்தவத்சலப்பெருமாள் இறைவின் திருப்பெயர் என்னைப்பெற்ற தாயார் என்ற சுதாவல்லி ஆகும்.
ஒரு முறை குபேரன் தன் நிதியை இழந்து வாடியபோது என்னைப்பெற்ற தாயாரை வழிபட்டு மீண்டும் தன்னுடைய நிதியை பெற்றான் என்கிறது புராணம். இங்கு தாயார் சகலசவுபாக்கியங்களையும் தரும் வைபவலட்சுமியாக உள்ளார்.
ஆதிசேஷனுக்கென சன்னதி உள்ளது தனி சிறப்பு. இந்த சன்னதியை புதன் கிழமைகளில் அர்ச்சனை செய்து நெய்விளக்கிட்டு பால் பாயாசம் படைத்தால் ராகு-கேது மற்றும் சர்ப்ப தோஷம் விலகும் என்பதும் மாங்கல்ய பலன் உண்டாகும் என்பதும் நம்பிக்கை.
திருமங்கை ஆழ்வார் பல திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்து கொண்டு வரும் போது இத்தலம் வழியாக வந்தார் ஆனால், இத்தலத்தை எந்த பாசுரமும் பாடவில்லை. இதைக்கண்ட தாயார் பெருமாளிடம், உடனே சென்று ஒரு பாசுரம் பெற்று வருமாறு சொன்னார்.
அதற்குள் ஆழ்வார் மாமல்லபுரம் அருகே உள்ள திருக்கடன் மல்லை கோயிலுக்கு போய் விட்டார். அங்கு சென்ற பெருமாள் ஆழ்வாரிடம் பாசுரம் ஒன்றைக் கேட்டார். "நீண்ட வத்தக் கருமுகிலை எம்மான் தன்னை நின்றவூர் நித்திலத் தொத்தூர் சோலை காண்டவத்தைக் கனலெரிவாய் பெய்வித்தானைக் கண்டது நான் கடல் மலலை தலசயனத்தே' என்று பாடினார் ஆழ்வார்:
இப்பாடலின் பொருள் என்னவென்றால் "எம்பெருமான் என் பாடல் கேட்டு வந்து நின்றதை நான் கண்டது கடன் மல்லையாகிய மாமல்லபுர திருத்தலத்தில்' என்பது தான். இப்படி, இந்த உலகையே காக்கும் பெருமாளே, பக்தனின் பெருமையை உலகுக்கு உணர்த்த இவ்வாறு பாடல் வாங்கிச்சென்றார்.
பாடல் பெற்று வந்த பெருமாளைப்பார்த்த தாயார்,என்ன இது! எல்லா தலங்களுக்கும் பத்து பாடல்களுக்கு மேலிருக்க இத்தலத்திற்கு மட்டும் ஒரு பாட்டு மட்டும் தானா?'' என கேட்க. இதைக்கேட்ட பெருமாள் மீண்டும் ஆழ்வாரிடம் பாடல் பெற சென்றார்.
அதற்குள் ஆழ்வார் திருவாரூர் அருகே உள்ள திருக்கண்ணமங்கை வந்துவிட்டார். அங்கே கண்ணமங்கை பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது திருநின்றவூர் பெருமாள் வந்து நிற்பதை தன் ஓரக்கண்ணால் கண்ட திருமங்கை ஆழ்வார் அவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்தார் என்பது வரலாறு
இடம்
அருள்மிகு பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில், திருநின்றவூர் -602 024 திருவள்ளூர் மாவட்டம்
வழிபாட்டு நேரம்
காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
3.அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில்,புட்லூர்
நாம் அனைவரும் அறிந்தது அம்மன்களில் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் அங்காளபரமேஸ்வரி அம்மன் தான்.அப்படியாக புட்லூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலுக்கு சென்றால் நம்முடைய உடம்பில் ஒரு வித சிலிர்ப்பு ஏற்படும்.மேலும் கோயில் உள் சென்றவுடன் மஞ்சள் குங்குமம் வாசம் அதிகம் நம்மால் நுகர முடியும்.
ஒருமுறை பொன்மேனி என்னும் விவசாயி வறுமை காரணமாகத் தன் நிலத்தை மகிசுரன் என்பவனிடம் அடமானம் வைத்திருக்கிறார்.பிறகு அதே நிலத்திலேயே வேலை பார்த்து குடும்பத்தை காப்பாற்றி வந்து இருக்கிறார்.
ஆனால் இந்த மகிசுரன் மிகவும் மோசமான குணம் படைத்தவன். ஊர் மக்கள் அனைவரிடமும் இப்படி நிலத்தை அடமானம் வாங்கி கொண்டு, வட்டி மேல் வட்டி போட்டு சொத்தை அபகரித்து வந்தான். பொன்மேனியாலும் கடனை திரும்ப செலுத்த முடியவில்லை.
கோபம் கொண்ட மகிசுரன் பொன்மேனியை அடித்து உதைத்தான். ஊரார் முன்னிலையில்,”நீ ஊருக்கு வெளியே இருக்கும் பூங்காவனத்தை சிவராத்திரி ஒரு நாள் இரவில் உழுது, விதைத்து, நீர்பாய்ச்சி பொழுது விடிவதற்குள் முடிக்கவேண்டும். இல்லையெனில் தொலைத்து விடுவேன்,” என எச்சரித்துச் சென்றான்.
பூங்காவனம் என்பது தீய சக்திகள் நடமாடும் இடம் ஆகும்.பொன்மேனி மனதில் தினம் தினம் அடிவாங்கி சாவதை விட, ஒரே நாளில் செத்து விடலாம் எனத் தீர்மானித்த சிவராத்திரி இரவில் பூங்காவனத்தை அடைந்தான்.
அங்கு தன் விருப்ப தெய்வமான கருமாரியை வணங்கி நிலத்தை உழ ஆரம்பித்தான். அப்போது ஒரு முதியவரும், மூதாட்டியும் அங்குள்ள மரத்தின் கீழ் அமர்ந்தார்கள். பாட்டி தாகத்தில் தவித்தாள். உழுது கொண்டிருந்த பொன்மேனி இதைக் கண்டு பரிதாபப்பட்டு, பெரியவரை அழைத்துக் கொண்டு தண்ணீர் கொண்டு வரச் சென்றான்.
திரும்பி வந்து பார்த்த போது மூதாட்டியைக் காணவில்லை. அவன் அதிர்ச்சியுடன் முதியவரின் பக்கம் திரும்பிய போது அவரும் அங்கு இல்லை. பின்னர் மீண்டும் உழுதான் பொன்மேனி. அப்போது கலப்பை எதன் மீதோ பட்டு ரத்தம் பீறிட்டது. இதைக்கண்ட பொன்மேனி அதிர்ச்சி அடைந்தான். அப்போது ஒரு அசரீரி,”பயப்படாதே. நான் அங்காள பரமேஸ்வரி.
சிவனுடன் முதியவள் வடிவத்தில் வந்த நான், மண்புற்றாக மாறிவிட்டேன். ஏர் முனை என்னை குத்தியதால் ரத்தம் பீறிட்டது. வறுமையில் வாடிய நீ என்னை வேண்டியதால் ஈசனுடன் இங்கு வந்தேன். நிலத்தை உழுது, நான் இங்கு இருப்பதை உலகிற்கு எடுத்துக்காட்டிய நீ, இனிமேல் எப்போதும் என்னையும் சிவனையும் பூசிக்கும் பேறு பெற்றாய்,”எனக் கூறியது.
சிறிது நேரத்தில் அங்கிருந்த மண்ணெல்லாம் விலகிப் புற்று தெரிந்தது. அதில் அம்மன் மல்லாந்து படுத்த நிலையில் இருந்தாள்
. பூங்காவனத்தில் தோன்றியவள் என்பதால் “பூங்காவனத்தம்மன்‘ என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்மன் கால் நீட்டி, மல்லாந்த நிலையில் வாய்திறந்து பிரசவ காலத்தில் துடிக்கும் பெண்ணைப் போல காட்சியளிக்கிறாள்.
அம்மனுக்கு பின்புறம் கருவறையில் விநாயகர், தாண்டவராயன் என்ற பெயரில் நடராஜர், அங்காள பரமேசுவரி ஆகியோர் உள்ளனர். எதிரில் நந்தி வாகனம் உள்ளது.
இடம்
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோயில், ராமாபுரம் (புட்லூர்)- 602025, திருவள்ளூர் மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 2 மணி முதல் இரவு 7.30 மணி வரை
4.அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில் திருவேற்காடு
கருமாரியம்மன், மூலஸ்தானத்தில் சுயம்பு வடிவில் காட்சி தருகிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், பராசக்தி அம்சத்தில் தங்க விமானத்தின் கீழ் இருக்கிறாள். இக்கோயிலில் மரத்தால் செய்யப்பட்ட சிலை வடிவில் கருமாரியம்மனுக்கு தனிச்சன்னதி இருக்கிறது. இவளை "மரச்சிலை அம்மன்' என்றே பக்தர்கள் அழைக்கின்றனர்.
இந்த அம்மனிடம் மனதில் நினைத்ததை வேண்டிக்கொண்டால் வீட்டிற்கும், குடும்பத்திற்கும் பாதுகாப்பாக இருப்பாள் என்பது நம்பிக்கை. எனவே பக்தர்கள் இந்த அம்மனிடம் வேண்டி அருகிலுள்ள உண்டியலில் பூட்டு வைத்து வழிபடும் வித்தியாசமான வழக்கம் இருக்கிறது.
முன்பு இத்தலத்தில் புற்றிற்குள் இருந்த நாகம், கோயில் கட்டும்போது கோயிலைவிட்டு வெளியேறியது. இந்த நாகம் ராஜகோபுரத்திற்கு இடப்புறம் ஒரு மரத்தின் கீழ் தங்கியது. இவ்விடத்தில் பெரிய புற்று உள்ளது. நாக தோஷம் உள்ளவர்கள் இப்புற்றில் மஞ்சள், குங்குமம் வைத்து வேண்டிக்கொள்கிறார்கள்.
தினமும் மாலை பிரதோஷ வேளையில் அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்யப்படுகிறது. அம்பாள் சன்னதியில் விளக்கு ஒன்று உள்ளது. இதனை பதி விளக்கு என்கின்றனர். இந்த விளக்கைச் சுற்றி விநாயகர், முருகன், எதிரெதிரே சூரியன், சந்திரன் ஆகியோர் இருப்பது விசேஷமான அமைப்பு.
மயில், நாகம் மற்றும் சிம்ம வாகனங்களும் இருக்கிறது. இதில் சிம்மத்தின் மீது அம்பிகை அமர்ந்திருக்கிறாள். இந்த விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது.
பக்தர்கள் அம்பிகையையும், இந்த விளக்கையும் தரிசித்தால் குடும்பத்தில் என்றும் குறையில்லாத நிலை இருக்கும் என்பது நம்பிக்கை.
இடம்
அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077, சென்னை. திருவள்ளூர் மாவட்டம்.
வழிபாட்டு நேரம்
காலை 5மணி முதல் இரவு 9மணி வரை
5.அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்,சிறுவாபுரி
முருகன் கோயில்களில் மிகவும் விஷேசமான கோயில் சிறுவாபுரி பாலா சுப்பிரமணி சுவாமி கோயில்.இங்கு மரகதக்கல்லால் ஆன மயில் இங்கு விசேஷம். மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதியம் உள்ளது. முருகனைத் தவிர அனைத்து தெய்வச்சிலைகளும் மரகதக்கல்லால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. முருகனுக்கு வலதுபக்கம் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்பாள் சன்னதி இருக்கிறது.
இவர்களுக்கு நடுவில் வள்ளியும் முருகப் பெருமானும் கைகோர்த்து நின்ற நிலையில் திருமணக்கோலத்துடன் அருள்பாலிப்பது மிகவும் சிறப்பு. இத்தகைய திருக்கோலத்தினை காண்பது அரிது. இந்த வள்ளிமணவாளனை பூச நட்சத்திரத்தில் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.
ஏனெனில், வள்ளி முருகன் திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம் நடத்துகின்றனர்.
இடம்
அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் சிறுவாபுரி,திருவள்ளூர் மாவட்டம்
வழிபாட்டு நேரம்
காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |