தினம் ஒரு திருவாசகம்
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
திருப்பெருந்துறையுறை சிவபெருமானே!
என்னையும் ஆண்டுகொண்டு இன்னருள் புரியும்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.
விளக்கம்
வீணை, யாழ் போன்ற இனிய இசையை தரும் இசைக்கருவிகளை கையில் ஏந்தி, உன்னை இசையால் துதித்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். மந்திரங்கள், வேதங்கள் சொல்லி உன்னை போற்றி பாடுபவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.
பலவிதமான வாசனை மலர்களைக் கொண்டு உன்னை பூஜித்து வணங்குபவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். உன் மீது கொண்ட பக்தியின் மிகுதியால் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வடிந்து ஓட விட்டு காத்திருப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.
பக்தி பரவசத்தில் மெய் சிலிர்த்து உன்னை வணங்குபவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள். தங்களின் தலைக்கு மேல் கைகளை கூப்பி, பலவிதமான பெயர்களை சொல்லி உன்னை அழைப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கிறார்கள்.
திருப்பெருந்துறை என்னும் தலத்தில் வீற்றிருந்து அருள் செய்யம் சிவ பெருமானே, உன்னுடைய அடியவர்கள் அனைவருக்கும் உன்னுடைய அருளை தந்து காப்பதுடன் என்னையும் ஆட்கொண்டு எனக்கும் உன்னுடைய இனிமையான அருளை தர வேண்டும். அதற்காக துயில் எழ வேண்டும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |