பாவம் தீர்க்கும் திருவிடைக்கழி முருகன்
ஒவ்வொரு முருகன் கோயிலும் மிகவும் பிரசித்தி பெற்ற கோயிலாகும்.அப்படியாக நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அருகிலுள்ள திருவிடைக்கழி முருகன்,சிவபூஜை செய்த நிலையில் பாவ விமோசன சுவாமியாக அருள்பாலித்து வருகிறார்.
இவரை தரிசித்தால் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்த் பாவம் நீங்கும். சூரபத்மனை முருகன் கொன்றார்.அப்பொழுது சூரபத்மனின் மகனான இரண்யாசுரன்,முருகப்பெருமானுக்கு அஞ்சி தரங்கம்பாடி கடலுக்குள் ஒளிந்தான்.
சிவபக்தனான அவனையும்,பராசக்தியின் அருளால் முருகன் கொன்றார். அசுரனாக இருந்தாலும்,சிவபக்தனைக் கொன்றதால் முருகனுக்கு பாவம் உண்டானது.
அதைப் போக்க இங்குள்ள குரா மரத்தின் அடியில் தவமிருந்தார்.இதனால் 'திருக்குராவடி' என இத்தலத்திற்கு பெயர் வந்தது. இவரை தரிசித்தால் பாவம் நீங்கும்.
இங்கே உள்ள முருகன் ஆறடி உயரத்தில் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் இருக்கிறார்.சுவாமியின் வலது கை அபயம் தரும் விதத்திலும்,இடது கை தொடையில் வைத்தபடியும் உள்ளன.
கருவறையில் ஒரு சிவலிங்கம் உட்புறத்திலும்,மற்றொரு லிங்கம்,முருகனின் முன்புறமும் உள்ளன. தினமும் அர்த்தஜாம பூஜையின் போது,முருகன் பூஜித்த பத்ரலிங்கத்திற்கு முதலில் பூஜை நடக்கும். குரா மரத்தின் அடியில் தியானம் செய்ய மனத் தெளிவு,அறிவுக்கூர்மை உண்டாகும்.
சரவண தீர்த்தம்,கங்கை கிணறு என இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.ஏழு நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் உள்ளது. முருகப்பெருமான் சிவனை வழிபட்ட குரா மரத்தடியில் அமர்ந்து,ராகு பகவான் முருகப்பெருமானை வழிபட்டிருக்கிறார்.
இதனால் ராகு தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமணம் நடந்தேறும்.தம்பதியரிடையே ஒற்றுமை பலப்படும். முருகனை மணம் செய்ய விரும்பிய தெய்வானை,தவம் செய்த தலம் இது.
இங்கு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.தெய்வானையின் முகம்,வெட்கத்தால் சற்று சாய்ந்தது போல் உள்ளது. திருமணத் தடை அகல இவரை வெள்ளிக்கிழமையில் வழிபடலாம்.
முதல் படைவீடான திருப்பரங்குன்றம் செல்ல தெய்வானை விடைபெற்றதாலும்,முருகனுக்கு இரண்யாசுரனைக் கொன்ற பழி கழிந்ததாலும் இத்தலம் 'விடைக்கழி' எனப்படுகிறது. மேலும் திருமணத் தடை நீங்க வைகாசி,புரட்டாசியில் பக்தர்கள் நடைப் பயணம் வருகின்றனர்.
நவக்கிரகங்கள் இல்லாத இந்த ஆலயத்தில் முருகப்பெருமானே நவ நாயகர்களாக இருந்து அருள்பாலிப்பதாக ஐதீகம்.இத்தல முருகனை வழிபட்டாலேயே அனைத்து விதமான நவக்கிரக தோஷங்களும் விலகி விடும் என்கிறார்கள்.
இத்திருத்தலத்தில் ‘சர்வமும் சுப்ரமணியம்’ என்ற வகையில் பிரதோஷ நாயகர்,சந்திரசேகரர்,சோமாஸ்கந்தர் என அனைத்து மூர்த்திகளும்,வலது திருக்கரத்தில் வஜ்ரவேலுடன் சுப்ரமணிய சுவாமி சொரூபமாகவே காட்சிஅளிக்கின்றனர்.
சண்டிகேஸ்வரர் சன்னிதியில் உள்ள சிவசண்டிகேஸ்வரரும்,குக சண்டிகேஸ்வரரும் தங்கள் திருக்கரத்தில் மழுவை ஏந்தாமல்,வஜ்ர வேலை ஏந்திக் காட்சி தருவது குறிப்பிடத்தக்கது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |