இராமாயணம் பெருமை பேசும் இடம் ஏங்கு இருக்கிறது தெரியுமா?
இராமாயணத்தை எழுதிய மாமுனிவர் வால்மீகி. இவர் ஆரம்பத்தில் வழிப்பறிக் கொள்ளையராக இருந்தார். பிறகு நாரதருடனான சந்திப்பிற்குப் பின்னர் ஞானம் வரப்பெற்று முனிவரானார்.
தன் மீது எறும்புப் புற்று வளர்ந்திருப்பதைக் கூட அறியாத அளவிற்கு கடும் தவத்தில் இருந்தார். எறும்பு புற்றிலிருந்து வந்தவர் என்பதை வடமொழியில் குறிக்கும் சொல்தான் வால்மீகி.
இவருக்குப் பிறகுதான் துளசி தாசர் ஹிந்தி மொழியில் இராமாயணத்தை எழுதினார். தமிழில் கம்பர் எழுதினார். உலகில் உள்ள பெரும்பாலான மொழிகளில் இராமாயணம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
வால்மீகி முனிவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பவன்தான் வால்மீகி பவன். வால்மீகி பவன் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான தலம். இது ராஜஸ்தானிலிருந்து வரவழைக்கப்பட்ட வெள்ளை பளிங்கு மற்றும் சிவப்பு கற்களால் கட்டப்பட்ட ஒரு அற்புதமான கட்டுமானமாகும்.
நுழைவாயிலே கட்டடத்தின் பிரம்மாண்டத்தை சொல்கிறது. இந்த பிரம்மாண்டமான கட்டடத்தில் ஒரே நேரத்தில் 5000 பேர் தங்க முடியும். தரைத் தளம் மிகவும் பெரியது. மேல் தளம் உள்ளது. அனைத்தும் மார்பிள் கற்களால் கட்டப்பட்டவை.
இதிகாச இராமாயணத்தின் 24,000 பாடல்களும் பவனின் நான்கு பக்க சுவர்களில் முக்கியமான சம்பவங்களைச் சொல்லும் படங்களுடன் ஹிந்தி மொழியில் பொறிக்கப்பட்டுள்ளன.
பல சிறந்த அறிஞர்களும் ஆன்மிகப் பெரியோர்களும் காலங்காலமாக இந்த இடத்திற்கு வந்துள்ளனர்.
இந்தக் கட்டடத்தில் ஒரு பெரிய நூலகம் உள்ளது. ஒவ்வொரு மொழியிலும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் மற்றும் இராமாயணத்தின் அனைத்து மொழிபெயர்ப்புகளும் இதில் உள்ளன.
இந்த நூலகத்துக்கு வரக்கூடிய பார்வையாளர்கள் இந்த நூலகத்தை இங்கு இருந்தபடி உபயோகித்துக் கொள்ளலாம். மண்டபத்தின் மையத்தில் வால்மீகி முனிவர் சிலை வடிவில் காட்சி தருகிறார். பக்தியுடன் மக்கள் அவரை தரிசிக்கின்றனர்.
இந்த பவனின் தொடர்ச்சியாக இராமாயணம் குறித்த சொற்பொழிவுகள் நடக்கும். இவ்வளவு சிறப்பு வாய்ந்த வால்மீகி பவன் அயோத்தியில் உள்ளது. பல வீட்டில் பெரியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்கார்ந்து எழுதும் ஸ்ரீ ராம ஜெயம் நோட்டுப் புத்தகங்கள் அனைத்தும் இந்தக் கோயிலில்தான் கடைசியில் வந்து சேரும்.
இப்படி அன்றாடம் வரும் நோட்டுப் புத்தகங்கள் அனைத்தையும் சரயு நதியில் கலந்து விடுவார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |