தீராத நோய்களையும் தீர்க்கும் வலங்கைமான் மாரியம்மன்
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகளை குணப்படுத்தும் அதி சக்தி வாய்ந்த கோயிலை பற்றி உங்களுக்கு தெரியுமா?. இத்தகு சிறப்புமிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வலங்கைமான் மாரியம்மன் கோயிலின் சிறப்புகளையும் பெருமைகளையும் தெரிந்துகொள்ளலாம்.
தல வரலாறு:
வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்னர் காதக் கவுண்டர் என்பவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர் கோவிந்தம்மாள். இருவரும் இறைபக்தி மிக்கவர்கள். காதக் கவுண்டர் விவசாய வேலை செய்து வந்தார்.
அவர் மனைவி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று தின்பண்டங்கள் விற்கும் அங்காடி வியாபாரம் செய்து வந்தார். வியாபாரத்திற்காகப் புங்கஞ்சேரிக்கு கோவிந்தம்மாள் சென்றிருந்தார். அன்று வெள்ளிக்கிழமை, நல்ல வியாபாரம் நடந்தது நெல்லும், காசும், நிறையக் கிடைத்தன. எல்லாம் இறையருள் என்றெண்ணிக்கொண்டு மகிழ்ச்சியாக, அங்குள்ள ஒரு குளத்திற்கு குளிக்கச் சென்றார்.
அப்போது, ஒரு பிராமணரும் அவரது மனைவியும் குழந்தையுடன் அங்கிருந்த அடைக்கலங்காத்த அய்யனார்கோவில் பக்கம் போவதைப் பார்த்தார். குளித்துவிட்டுக் கரையேறிய பின் அய்யனார்கோவில் பக்கமிருந்து குழந்தை அழும் குரலைக் கேட்டார் கோவிந்தம்மாள்.
அங்கே விரைந்து சென்ற கோவிந்தம்மாள், பெண் குழந்தை ஒன்று அங்கே அழுது கொண்டு இருப்பதைக் கண்டாள். தெருக்காரர்கள் ஓடி வந்தனர், குழந்தையைக் கொண்டு வந்து விட்டவர்களைத் தேடிப் பார்த்தனர்.
அங்கு யாரும் தென்படவில்லை. அழுதுகொண்டிருந்த அந்தக் குழந்தையைக் கோவிந்தம்மாள் தூக்கினாள். குழந்தை அழுவதை மறந்து அழகாகச் சிரித்தது. அந்தக் குழந்தையின் அழகில் மயங்கிய அத்தெருவாசிகள் அனைவரும் அக்குழந்தையைத் தாமே வளர்க்க வேண்டுமென்று போட்டியிட்டனர்.
கடைசியாக அந்தத் தெரு நாட்டாண்மைக்காரர் வளர்ப்பார் என்ற முடிவுக்கு வந்தனர். தனக்கு குழந்தை கிடைக்கவில்லையே என்று கோவிந்தம்மாளுக்கு வருத்தம். புங்கஞ் சேரியில் கோழிகளும், ஆடு, மாடுகளும் திடீரென இறக்கத் தொடங்கின பலருக்கு அம்மை நோய் தாக்கியது.
அய்யனார் கோவிலில் கிடைக்கப்பெற்ற அந்தப் பெண் குழந்தைக்கும் அம்மை வார்த்து விட்டது, ஊரே பெரும் துயரம் அடைந்தது. இந்நிலையில் ஒருவர் ஆவேசம் வந்து, அந்தப் பெண் குழந்தையைக் கோவிந்தம்மாளிடம் கொடுத்துவிட வேண்டும்.
அப்போதுதான் இந்த ஊர் நலம் பெறும் என்று கூறினார். உடனே கோவிந்தம்மாளை அழைத்து அக்குழந்தையைக் கொடுத்துவிட்டனர். குழந்தையை எடுத்து வந்து சீதளா எனப் பெயரிட்டுக் கோவிந்தம்மாள் வளர்க்கத் தொடங்கினாள்.
ஆனால் கடுமையான அம்மையால் மூன்றாம் நாள் அக்குழந்தையின் உயிர் பிரிந்து விட்டது. ஆறாத்துயரம் அடைந்த கோவிந்தம்மாளும் அவர் கணவரும், குழந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்குகளைச் செய்து தம் வீட்டு கொல்லையில் அடக்கம் செய்து விட்டனர். (சிலர் அக்குழந்தை ஏழரை ஆண்டுகள் கோவிந்தம்மாள் வீட்டில் வளர்ந்து பல அற்புதங்களைச் செய்து, பின்னரே இறந்ததாகவும் கூறுகிறார்கள்).
பின்னர், குடமுருட்டி ஆற்றில் நீராடிவிட்டு வருவோரில் சிலர், கோவிந்தம்மாள் வீட்டுக் கொல்லைப்புறம் வந்த போது ஆவேசமாக வந்து ஆடினர். அவர்கள் நான்தான் மாரியம்மன் குழந்தை வடிவில் இங்கு வந்தேன். என்னை வழிபடுவோருக்கு அருள் புரிவேன் என்று கூறினார்.
அந்தபடி குழந்தையைச் சமாதி செய்த இடத்தில் கீற்று கொட்டகை போடப்பட்டது மக்கள் வந்து வழிபடத் தொடங்கினர் பின்னர் அவ்விடத்தில் கோவிலும் எழுப்பப் பெற்றது சீதளாதேவி மகாமாரியம்மன் கோவிலாகப் பெயர் பூண்டு வரந்தரும் தெய்வமாக அன்னை பராசக்தி அங்கே விளங்கலானாள். அதுவே வலங்கைமான் மாரியம்மன் கோவில் தோன்றி வளர்ந்த வரலாறாக கூறப்படுகிறது.
கோயில் அமைப்பு:
இந்த கோயிலில் முன் மண்டபம், மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை, திருச்சுற்று ஆகிய அமைப்புகளுடன் உள்ளது. மகா மண்டபத்தின் தென் பகுதியில் விநாயகர் சிலையும், வட பகுதியின் கீழ்ப்புறம் இருளன், பேச்சியம்மன், வீரன், வீரனுடைய தேவியர் ஆகியோரின் சுதைச் சிற்பங்கள் உள்ளன. அர்த்தமண்டபத்தில் உற்சவத் தருமேனிகள் உள்ளன. கருவறை சதுர வடிவில் உள்ளது. இதன்மேல் விமானம் உள்ளது. கோயிலின் தெற்கில் குளம் உள்ளது.
மூலவர்:
கோயிலின் மூலவராக சீதளாதேவி மகாமாரியம்மன் அமர்ந்த நிலையில் நாற்கரங்களுடன் உள்ளார். வலது மேற்கரத்தில் உடுக்கையும், இடது மேற்கரத்தில் சூலமும் உள்ளது. வலது கீழ்க்கரத்தில் கத்தியும், இடது கீழ்க்கரத்தில் கபாலமும் உள்ளது.
இடது காலை மடித்து, வலது காலை தொங்கவிட்டு வீரசிம்மாசனத்தில் உள்ளார். இரு தோள்களின் மீதும் இரு நாகங்கள் உள்ளன. அவர் பாடைகட்டி மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறார்.
தல சிறப்பு:
மருத்துவர்களால் கைவிடப்பட்ட நோயாளிகள் இந்த அம்பாளை வேண்டிக்கொள்வர். நோய் குணமானவுடன், 'பாடைக்காவடி' எடுத்து பிரார்த்தனையை நிறைவேற்றுவர். பக்தர்கள், "தன் உடல் நலமடைந்தால் உற்சவ காலத்தில் பாடை மீது படுத்து ஆலயத்தை வலம் வருவதாக வேண்டிக் கொள்வர்".
பங்குனி மாதம் நடைபெறும் உற்சவத்தின் போது ஆயிரக்கணக்கான பாடை வழிபாடுகள் நடைபெறும். உடல் நலம் பாதிக்கப்பட்டவர்கள் பாடை மீது படுக்க, கயிறால் கட்டுவர். பிறகு சுமந்து வருவர். கொள்ளிச் சட்டி எடுக்க வேண்டிய முறை உள்ளவர் அதனை எடுத்துக் கொண்டு முன்னால் வருவார்.
இவர்கள் ஆலயத்தை வலம் வந்ததும் பாடை பிரிக்கப்படும். பிரித்ததும் மஞ்சள் நீரைத் தெளிக்க, படுக்கும் போது மயக்கமுற்றவர் தெளிந்தெழுவார். வேண்டுதல் நிறைவேற்றப்பட்டதும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புவார்கள். இப்படிப்பட்ட பாடைக் காவடி வழிபாடுகளை ஏற்பதுதான் இந்த மாரியம்மனுக்குச் சிறப்பாகும்.
திருவிழாக்கள்:
ஆவணி, பங்குனி ஆகிய இரு மாதங்களிலும் மாரியம்மனுக்கு திருவிழா நடைபெறுகின்றது. ஏழு நாட்கள் விழா நடைபெறும். எட்டாம் நாள் புகழ் பெற்ற பாடைத் திருவிழாவும், ஒன்பதாம் நாள் புஷ்பப் பல்லக்கும் சிறப்பாக ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விழா நடைபெறுகிறது. ஆவணி மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. பங்குனித்திருவிழா பங்குனி முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி நடைபெறும்.
மீன் திருவிழா:
வலங்கைமானின் தனிச்சிறப்பாக, 9 ஆம் நாளான மஞ்சள் நீராட்டு விழா அன்று இரவு வீடு தோறும் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்களுக்கும் அன்று மீன் உணவு வழங்கப்படும். இதனை மீன் திருவிழா என்கின்றனர்.
பாடைக்காவடி:
நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மனிடம் வேண்டி தம் நோய் குணமடைந்ததும் இக்கோயிலுக்கு பாடைக்காவடி எடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். பங்குனி பெருந்திருவிழாவின் 8-ஆம் நாள் பாடைக் காவடித் திருவிழாவின்போது பக்தர்கள் பாடைக்காவடி எடுத்து வந்து தங்களுடைய நோத்திக்கடனை செலுத்தி நிறைவேற்றுவர்.
அப்போது நோயிலிருந்து குணமடைந்தவர்களை ஆற்றில் குளிக்க வைப்பர். பின்னர் அவர்களுடைய நெற்றியில் திருநீறு பூசி பச்சைப் பாடையில் படுக்க வைத்து உறவினர்கள் நான்கு பேர் சுமந்து வருவர். ஒருவர் முன்னால் தீச்சட்டி ஏந்திவர வலங்கைமான் நகரின் முக்கியமான வீதிகளின் வழியாக பாடைக்காவடி கோயிலை வந்து சேரும்.
அதனைத் தொடர்ந்து கோயிலை பாடைக்காவடி மூன்று முறை வலம் வரும். பிறகு கொடிமரத்தின் முன்பாக பாடைக்காவடி இறக்கி வைக்கப்படும். பூசாரி பாடையில் படுத்திருப்பவருக்கு திருநீறு பூசி அவரை எழச்செய்வார்.
இதைத்தொடர்ந்து பாடைக்காவடி எடுத்தவர் அம்மனுக்கு அர்ச்சனை செய்து தன் நோத்திக்கடனை நிறைவேற்றுவார். இவ்விழாவின்போது நூற்றுக்கணக்கானோர் பாடைக்காவடி எடுப்பர். குழந்தைகள் தொட்டில் காவடியில் சுமந்து வரப்படுவர்.
இத்திருவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொள்வர். நூற்றுக்கணக்கானோர் பாடைக்காவடி எடுத்து தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துவர். இதனால் பாடைக்காவடித்திருவிழா என்று இவ்விழாவினை அழைப்பர்.
பாடைக்காவடியுடன் ரதக்காவடிகள், அலகுக்காவடிகள், பக்கஅலகுக் காவடிகள், பால் அலகுக்காவடிகள் எனப் பலவகையான காவடிகள் காலை முதல் வந்துகொண்டே இருக்கும். இதே நாளில் செடில் சுற்றும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குடமுழுக்கு:
மூன்று நாட்களாக யாகசாலை பூஜைகள் நடந்து நிறைவு பெற்றன. தொடர்ந்து தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் மற்றும் செப்பு கலசங்கள் முக்கிய வீதிகளில் வழியே ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, அம்மன் சன்னதியில் வைக்கப்பட்டன.
யாகசாலை பூசைகளைத் தொடர்ந்து 12 பிப்ரவரி 2020 புதன் கிழமை அன்று இக்கோயிலின் குடமுழுக்கு நடைபெற்றது.
வழிபாட்டு நேரம்:
காலை 5.30 மணி முதல் பிற்பகல் 1.00 வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் நடைசாத்தப்படுவது இல்லை. ஞாயிற்றுக் கிழமைகளில் இரவு 11.00 மணி வரை நடைதிறந்து இருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |