எம பயத்தினை போக்கி நீண்ட ஆயுளுடன் வாழ வாலீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்யுங்க!
காண்போரை வியப்பில் ஆழ்த்தி பல நூற்றாண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சியளிக்கும் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில் பற்றி உங்களுக்கு தெரியுமா? ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வாலீஸ்வரர் கோயிலின் வரலாற்றினையும் சிறப்புகளையும் அதனால் பக்தர்கள் அடையும் நன்மைகளையும் இப்போது விரிவாக தெரிந்துகொள்ளலாம்.
தல அமைவிடம்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் ஊராட்சியின் வாலிகண்டபுரத்தில் வாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
இரஞ்சன்குடி கோட்டைக்கு 7 கிமீ தொலைவிலும், பெரம்பலூரில் இருந்து 11 கிமீ தொலைவிலும், தொழுதூரில் இருந்து 18 கிமீ தொலைவிலும், சிறுவாச்சூரிலிருந்து 17 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.
பல்வேறு சரித்திர சிறப்புக்களை பெற்றுள்ள இந்தக் கோயில், சோழர் ஆட்சி காலத்தில் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு இங்கு குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளதாக தல வரலாறு தெரிவிக்கிறது.
தல பெயர்க்காரணம்:
இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தில் வானரத் தலைவனான வாலி, சிவப்பெருமானை(ஈஸ்வரனை) வழிபட்ட இடம் ‘வாலீஸ்வரம்’ என்றும், ராமர் சீதையை தேடி இலங்கை நோக்கி சென்ற வழியில் வாலியை கண்ட இடம் ‘வாலிகண்டபுரம்’ என்றும் பெயர் பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தனக்குப் பதிலாக கிட்கிந்தையை ஆட்சி செய்த தம்பி சுக்ரீவனை வீழ்த்தப் போர் வியூகம் அமைத்தான் அண்ணன் வாலி. அப்போது வனவாசத்தில் இருந்த ராமபிரானின் உதவியை நாடினான் சுக்ரீவன்.
வாலியோ, `தன்னை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களின் பலத்தில் பாதி எனக்குக் கிடைக்க வேண்டும்’ என சிவபெருமானிடமே வரம் பெற்றவன். இந்த உண்மை தெரியாமல், தனது பரிவாரங்களை சுக்ரீவனுக்கு அளித்து வாலியோடு போரிடுவதற்கு அனுப்பினார் ராமபிரான்.
சிவபெருமான் தந்த வரத்தால் தம்பியின் பலத்தில் பாதியைப் பெற்ற வாலி, சுக்ரீவனை அசுரபலம் கொண்டு துரத்தினான். சிவபெருமானிடம் பெற்ற வரத்தால்தான் வாலியை நேருக்கு நேராய் வீழ்த்த முடியவில்லை என்பதை அறிந்த ராமபிரான், மீண்டும் சுக்ரீவனை வாலியோடு போரிட அனுப்பிவிட்டு, நேருக்கு நேர் செல்லாமல், மரத்தின் பின்னால் மறைந்திருந்து அம்பை எய்து வாலியை வீழ்த்தினார்.
அவ்வாறு கிட்கிந்தை வனத்தில் வாலி, சிவபெருமானை வழிபட்ட இடம்தான் இப்போது வாலிகண்டபுரமாக விளங்குகிறது. இங்கே, வாலி வழிபட்ட சிவபெருமான் வாலீஸ்வரராகவும் அம்பாள் வாலாம்பிகையாகவும் வீற்றிருக்கிறார்கள். சிவன் இங்கே சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார்.
தல அமைப்பு:
வாலீஸ்வரர் கோயிலின் ஏழுநிலை ராஜகோபுரத்துடன் அழகுற காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்தின் வடக்கு பகுதியில் கட்டப்பட்டுள்ள அலங்கார மண்டபம் மற்றும் அவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் காண்போரை வியக்க வைக்கின்றன. ராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி எதிர்படுகிறார்.
வாலீஸ்வரர் கோயிலில் ராஜகோபுரத்திற்கு தாழ்வான நிலையில் கோயில் கருவறை மற்றும் இதர சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. ராஜகோபுரத்தின் வழியாக கோயில் உள்ளே நுழைந்தவுடன் வலதுபக்கம் அழகுற வடிவமைக்கப்பட்ட குளம் உள்ளது. மன்னர் வந்தால் நீராடி இறைவனை வழிபடுவதற்காக 1761-ல் மதுரையை ஆட்சிபுரிந்த கிருஷ்ண கோனாரால் இந்த குளமும், தர்பார் மண்டபமும் கேரள கலை அம்சத்துடன் கட்டமைக்கப்பட்டது. கோயிலில் நுழைந்தவுடன் வலதுபுறம் வாலாம்பிகை தெற்கு நோக்கி காட்சி அளிக்கிறார்.
வாலாம்பிகை சன்னதியின் எதிரே உள்ள பகுதியில், சிதைந்துபோன நிலையில் சில சிற்பங்கள் காட்சி அளிக்கின்றன. கி.பி. 18-ம் நூற்றாண்டில் ஆற்காடு நவாப்கள் வாலிகண்டபுரத்தை மையமாக வைத்து போர் புரிவதற்காக ரஞ்சன்குடியில் கோட்டையை எழுப்பினர். அப்போது வாலீஸ்வரர் கோவிலில் இருந்த சிற்பங்கள் சிதைக்கப்பட்டதாக வரலாற்று செய்திகள் மூலமாக தெரிய வருகிறது. வாலாம்பிகை சன்னதியை கடந்து உள்ளே சென்றால், வாலீஸ்வரர் கருவறை அமைந்துள்ளது. இதில் லிங்க வடிவில் வாலீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
வாலீஸ்வரர் கருவறைக்கு வெளிப்பிரகாரத்தில் வடக்கு நோக்கி தண்டத்துடன் காட்சி அளிக்கும் சுமார் 9 அடி உயர தண்டாயுதபாணி சிலை உள்ளது. பிரகாரத்தில் வாலீஸ்வரருக்கு வலது பக்கமாய் ஒரே கல்லில் 1008 லிங்கங்கள் வடிக்கப்பட்ட பெரிய லிங்கம் ஒன்றும் உள்ளது.
இந்த லிங்கத்தை வழிபட்டால் 1008 சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டதற்கான பலனை அடையலாம் என்பது நம்பிக்கை. பைரவர் இத்திருத்தலத்தில் மண்டை ஓட்டு மாலை அணிந்து கபால பைரவராக காட்சி தருகிறார். கோயிலில் 134 கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சரவண தீர்த்தம் கோயில் தீர்த்தமாகவும் மாவிலிங்கை மரம் தல விருட்சமாகவும் உள்ளன.
தல சிறப்புகள்:
இந்த தலத்தில் சேஷ்டா தேவி என்றொரு அம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த அம்மனைத் தங்களின் குலதெய்வமாக வழிபட்ட சோழ மன்னர்கள், போருக்குப் போகும் முன் இந்த அம்மனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பயபக்தியுடன் வழிபட்டால் எதிரிகளை மந்தமாக்கி வெற்றிகளைத் தருவாள் சேஷ்டா தேவி என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவுகிறது.
ஆடிப்பூர திருநாளின்போது அம்மனுக்கு வளையல் காப்பு சாற்றி அந்த வளையல்களை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த வைபவத்தில் வாலாம்பிகையை தரிசித்து, வளையல்களைப் பெற்றுச் சென்றால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தேய்பிறை அஷ்டமியில் கபால பைரவருக்கு வேப்ப எண்ணெய் தீபம், மிளகு தீபம் போட்டால் பில்லி - சூனியம், திருஷ்டிகள் கழியும் என்பதும் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மூன்று நந்திகள்: பொதுவாக சிவபெருமானுக்கு எதிரே ஒரு நந்திதான் இருக்கும். ஆனால் இங்கே, பால நந்தி, யவன நந்தி, விருத்த நந்தி என மூன்று நந்திகள் இருப்பது சிறப்பு.
எதிரிகளை வீழ்த்த வாலிக்கு வரம் தந்த வாலீஸ்வரரை வணங்கினால் சத்ரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தல விழாக்கள்:
கோயிலில் உள்ள தண்டபாணிக்கு, கிருத்திகை விழா கமிட்டி சார்பில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை விழாவும், திருக்கார்த்திகை விழாவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 1996-ல் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடத்தப்பட்டது. பிரதோஷ காலத்தில் வாலிகண்டபுரம் வாலீஸ்வரரை வழிபட்டால், சங்கடங்கள் விலகி மனதிற்கு வலிமை சேர்க்கும் என்பது மக்களின் நீண்டகால நம்பிக்கையாக உள்ளது.
தலத்தினை பாடியோர்கள்:
இந்த கோயிலில் உள்ள இறைவனை அருணகிரி நாதர், ஸ்ரீமத்பாம்பன் சுவாமிகள், குமரகுருபரர், தண்டபாணி சுவாமிகள், சிதம்பர சுவாமிகள், ராமலிங்க அடிகளார், திருமுருக கிருபானந்த வாரியார் ஆகியோர் பாடியுள்ளனர்.
வழிபாட்டு நேரம்:
தினமும் காலை 6.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் வழிபாட்டிற்காக கோயில் திறந்து வைக்கப்படுகிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |