நாளை(08-08-2025) பெண்கள் எவ்வாறு வரலட்சுமி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்
இந்து மதத்தில் பல்வேறு விரதங்கள் இருந்தாலும் பெண்களால் அதிகம் அனுஷ்டிக்கப்படும் விரதமாக வரலட்சுமி விரதம் இருக்கிறது. இந்த நாளில் பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம், கல்வி, பொருளாதாரம் இவை எல்லாம் சிறப்பாக அமைய மஹாலட்சுமி தாயாரை விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக, இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் பௌர்ணமி அம்சத்தோடு சேர்த்து நாளை (08-08-2025) வரவுள்ளது. இந்நிலையில் பெண்கள் தங்கள் திருமண வாழ்வு சிறப்பாக அமையவும், திருமணம் ஆகாத பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டியும் எவ்வாறு விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.
வரலட்சுமி விரத தினத்தன்று சிலர் வீடுகளில் கவசம் வைத்து வழிபாடு செய்வார்கள். அதாவது, ஒரு தேங்காய் எடுத்துக்கொண்டு அதில் அம்மனின் முக கவசத்தை வைத்து அலங்காரம் செய்து வழிபாடு செய்வார்கள். முடியாதவர்கள் மஹாலட்சுமி தாயாரின் திருஉருவ படத்தை வைத்து வழிபாடு மேற்கொள்வார்கள்.
மேலும், நாளை விரதம் இருப்பர்வகள் பால், பழம் சாப்பிட்டு விரதம் இருக்கலாம. உடல் உபாதைகள் உள்ளவர்கள் உணவு எடுத்துக்கொண்டும் தங்களின் வழிபாட்டை செய்யலாம்.
அதோடு, வரலட்சுமி தினத்தன்று மூன்று அம்மன் வழிபாட்டை காலை, மதியம், இரவு என்று தொடர்ந்து செய்தால் நமக்கு சிறப்பான பலன் கிடைக்கும் என்று சொல்கிறார்கள். இவ்வாறு வழிபாடு செய்பவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையில் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை.
மிக முக்கியமாக நீண்ட நாட்களாக திருமண தடை சந்திப்பவர்கள், திருமண தோஷம் உள்ளவர்கள், பிரிந்த கணவன் மனைவி இவர்கள் வரலட்சுமி விரத நாளில் கோயில்களில் நடக்கும் பள்ளியறை பூஜையில் கலந்துக் கொண்டால் வாழ்க்கையில் மகிழ்ச்சியான மாற்றங்களை காணமுடியும்.
மேலும், நாளை கீரை வகை உணவுகள் எடுத்துக் கொள்வதை நாம் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக பொருளாதார சிக்கலில் உள்ளவர்கள் சேலை, வளையல், குங்குமம், வாசனைப் பூக்கள் தானம் செய்யலாம். அது அவர்களுக்கு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் கொடுக்கும்.
இவ்வாறாக நாளை சிறிய விஷயங்களை பின்பற்றி விரதம் இருந்து வழிபாடு செய்ய மஹாலட்சுமி தாயாரின் அருளால் வீடுகளில் சுபிட்சம் உண்டாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







