திருமணமும் பிள்ளைப்பேறும் புத்திக்கூர்மையும் வழங்கும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் என்ற மலை அமைந்துள்ளது. இம்மலையைத் திருமலை என்றும் அழைக்கின்றனர். இம்மலையின் உச்சியில் வேதகிரிஸ்வரர் என்ற பெயரில் சிவன் கோவிலும் மலை அடிவாரத்தில் திரிபுரசுந்தரிக்குத் தனிக் கோவிலும் உள்ளது.
திரிபுரசுந்தரி கோவிலில் நான்கு கோபுரங்கள் உள்ளன. மலை மேல் இருக்கும் சொக்கம்மா அல்லது சொக்க நாயகிக்கு பெண்ணின் நல்லாள் அம்மை என்ற பெயரும் வழங்குகின்றது.சிவபெருமானின் கருவறை கஜபிருஷ்ட அமைப்பில் உள்ளது.
வேத கிரி
மூன்று வேதங்களே மூன்று மலை குன்றுகளாக உள்ளன. திருக்கழுக்குன்றம் மலையே வேத வடிவாக விளங்குகின்றது. ரிக் வேதம் அதன் வேராகவும் யஜூர் வேதம் அதன் கீழ்ப் பகுதியாகவும் சாம வேதம் அதன் மேல் பகுதியாகவும் அதர்வண வேதம் இம்மலையின் சிகரமாகவும் விளங்குகின்றது.
தேவாரத் திருத்தலம்
வேதகிரீஸ்வரர் மணிவாசகருக்கு குரு வடிவாக வடிவில் காட்சியளித்த தலம் இத்திருத்தலமாகும். இதனை அவர் தன் திருவாசகத்தில் எடுத்துரைக்கின்றார். இத்தலம் அப்பர் சம்பந்தர் மற்றும் சுந்தரரால் பாடப்பட்ட தேவார திருத்தலமாகும். அருணகிரிநாதரும் தம் திருப்புகழில் திருக்கழுக்குன்றம் பற்றி பல பாடல்களை இயற்றியுள்ளார். இத்திருத்தலத்திற்கு அந்தகக் கவி வீரராகவப் புலவர் ஒரு தல புராணம் இயற்றியுள்ளார்.
உபசந்நிதிகள்
திருச்சுற்றுச் தெய்வங்களில் ஒன்றான பைரவருக்கு இக்கோவிலில் வாகனம் கிடையாது. இக்கோவிலில் நந்தி தேவர் காணப்படவில்லை. சாமி சன்னதியை சுற்றியுள்ள கோஷ்டத்தில் காணப்படும் துர்க்கை எட்டு கைகளுடன் கூடிய அஷ்டபுஜ துர்க்கை ஆவாள். இதே திருச்சிற்றில் ஆத்மநாதர் சன்னதி என்ற பெயரில் வெறும் பீடம் மட்டும் உள்ளது. லிங்க பாணம் இல்லை. இதற்கு எதிரே மாணிக்கவாசகருக்குத் தனிச் சன்னதி உள்ளது.
பட்சி தீர்த்தம்
திருக்கழுக்குன்றத்தைப் பட்சி தீர்த்தம் என்று வடநாட்டவர் அழைக்கின்றனர். இங்கே இரண்டு கழுகுகள் வந்து தினமும் சர்க்கரை பொங்கல் பிரசாதத்தை உண்ணும். அவை முனிவர்கள் என்று மக்கள் நம்பினர்.
வேதகிரியின் வேறு பெயர்கள்
திருக்கழுக்குன்றம் முன்பு பௌத்த ஸ்தலமாக இருந்ததால் இந்திரபுரி, பிரம் பூரி என்று அழைக்கப்பட்டது. பின்னர் இதன் பெயர் ருத்ர புரி நந்திபுரி,, நாராயணபுரி,, தினகரபுரி, முனிகனபுரி என்று பலவாயிற்று.
கல்வெட்டுகள் தரும் தகவல்கள்
சோழர், பாண்டி யார், விஜய நகர மன்னர்கள் வேதகிரிக்கு நிவந்தங்கள் அளித்த தகவல்கள் கல்வெட்டுக்களில் உள்ளன. சோழர் காலக் கல்வெட்டு இவ்வூரை உலகளந்த சோழபுரம் என்று அழைக்கின்றது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் கால கல்வெட்டு முதல் பின்னர் வந்த சோழர் பாண்டியர் ராஷ்டக்கூடர் காலத்து கல்வெட்டுகளும் இங்குக் கிடைத்துள்ளன.
ஜடாவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி வீரபாண்டிய தேவன் காலத்தில் இவ்வூரை திருக்கழுக்குன்றம் என்று அழைத்துள்ளனர். இங்கு எழுந்தருளி இருக்கும் இறைவனை திருக்கழுக்குன்றம் உடைய நாயனார் என்று கல்வெட்டு குறிப்பிடுகின்றது. விநாயகரை சண்முகப் பிள்ளையார் என்று கல்வெட்டு ஒன்று குறிக்கின்றது.
மலை அடிவாரத்தில் உள்ள பக்தவத்சலக் கோயிலைப் பழுது பார்க்க விஜயநகர மன்னன் பிரதாப் புக்க ராயர் நிலம் வழங்கி உள்ளார். மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி வீரபாண்டியத் தேவன் காலத்தில் சண்முக பிள்ளையார் சன்னதியில் விளக்கேற்ற நெய் வழங்குவதற்காக பசுக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. விஜய நகர மன்னன் வீர விஜய பூபதிராயன் ஆட்சியில் நாகேஸ்வரமுடையான் விழாவுக்காக மன்னர் வரியைத் தள்ளுபடி செய்துள்ளார்.
கதை ஒன்று
பரத்வாஜ முனிவர் வேதங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட போது சிவபெருமான் வேதங்களை கற்றுக்கொள்ள ஆயுள் போதாது என்று கூறி 'இம்மலைகளுக்குச் செல், இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வேதத்தை உனக்குக் கற்றுக் கொடுக்கும்' என்றார். சிவபெருமான் உருவாக்கிய மூன்று மலைகளும் ரிக் யஜூர் சாமம் என்ற வேதங்களைக் குறிப்பனவாகும்.
திருமலை சொக்கம்மா வேதகிரீஸ்வரரின் அம்மனான திரிபுரசுந்தரிக்கு மலையடிவாரத்தில் கோவில் இருந்தாலும் கூட வேதகிரீஸ்வரரை காதலித்து அவரை அடைந்த சொக்கம்மாவுக்கு மலைமேல் தனிச் சன்னதி கட்டப்பட்டுள்ளது. சொக்கம்மா சிவ பக்தர்களான தாய் தந்தையருக்கு பிறந்தவள். இவளது பெற்றோர்கள் இறைவனை வணங்கித் தங்களுக்கு ஒரு தெய்வ குழந்தை பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டு வந்த பின்பு அதிகாலையில் தம் அருகே ஒரு அழகான பெண் குழந்தை இருப்பதைக் கண்டனர்.
அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தபோது சொக்கம்மா என்ற அசரீரி கேட்டதும் அவளுடைய அழகை கண்டு சொக்கிதான் ஆண்டவன் அப் பெயரை அவளுக்குச் சூட்டுகிறான் என்று மகிழ்ந்த பெற்றோர் சொக்கம்மா என்றை அவளை அழைத்தனர்.
சொக்கம்மா பருவம் எழுதியதும் பெற்றோர் அவளுக்குத் திருமண ஏற்பாடுகளைத் தொடங்கினர் அப்போது அவள் தன் தந்தையாரிடம் 'அப்பா கோவிலை ஒரு முறை சுற்றி வந்த பின்பு திருமணப் பேச்சுக்களைத் தொடங்கலாம்' என்றாள்.அதற்குச் சம்மதித்த அவள் தந்தையார் அவளை அழைத்துக் கொண்டு திருமலையைச் சுற்றி வந்தார்.
அப்படி வந்து கொண்டிருந்தபோது திடீரென்று பெண்ணைக் காணவில்லை, திரும்பிப் போய்த் தேடிப்பார்த்த போது அவள் மலை மீது வேதகிரிஸ்வரருடன் காட்சி அளித்தாள். 'இறைவா என் பெண்ணை எனக்குத் திருப்பிக் கொடு' என்று அவர் கேட்டபோது வேதகிரீஸ்வரர் 'உன் ஆசைக்காக பரமேஸ்வரி தெய்வ மனித குழந்தையாகப் பிறந்து உன்னோடு சில ஆண்டுகள் இருந்தாள்.
இனி அவள் என்னுடையவள். நீ வேண்டும் வரம் கேள்' என்றார். சொக்கம்மாளின் தந்தை 'இத்தலத்திற்கு வந்தவர்களுக்கு திருமணத்தடை நீங்கி குழந்தைப் பேறு தடை நீங்கி அவர்கள் எல்லா செல்வமும் பெற்று வாழவேண்டும் இறைவா' என்று பொதுநலம் சார்ந்த ஒரு வரத்தை வேண்டினார்.
எனவே இத்திருத்தலத்துக்கு வந்து இறைவனை வணங்குவோருக்கு எல்லாத் தடைகளும் விலகும். தேவகிரீஸ்வரரையும் சொக்கம்மாளையும் வணங்கி வருபவருக்கு எந்தக் குறையும் வாழ்க்கையில் ஏற்படாது.
தீர்த்தங்கள்
திருமலையில் சங்கு தீர்த்தம் மிகவும் விசேஷமானது. தனிச்சிறப்புடையது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இதில் சங்கு கிடைக்கும். திருமலையை சுற்றி எங்கும் கண்டாலும் தீர்த்தங்கள் தான் உள்ளன. மொத்தம் 12 தீர்த்தங்கள் இம்மலையில் உள்ளன.
அவை இந்திர தீர்த்தம், சம்பு தீர்த்தம், ருத்ர தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், மெய்ஞ்ஞான தீர்த்தம், அகஸ்தியர் தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், கௌஷிக தீர்த்தம், வருண தீர்த்தம், அகலிகை தீர்த்தம், பட்சி தீர்த்தம் ஆகியன.
திருமலைக்கு வந்து இறைவனை வழிபட்ட வசிஷ்டர், அகஸ்தியர், மார்க்கண்டேயர், வருணன் ஆகியோரின் பெயர்களால் தீர்த்தங்கள் அமைந்துள்ளன இவர்கள் ஆளுக்கு ஒரு தீர்த்தத்தில் குளித்து இங்கிருந்து இறைவனை நோக்கி கடும் தவம் புரிந்து தாங்கள் வேண்டியதை பெற்றனர். இங்கு வழிபட்டவர்களில் மிகவும் முக்கியமானவர்கள் மார்க்கண்டேயர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் சேரமான் பெருமாள் நாயனார், சேக்கிழார் ஆவார்.
கழுகுக்குன்றம்
தினமும் இரண்டு எகிப்திய கழுகுகள் இம்மலைக்கு வந்து கோவில் பூசாரி வைக்கும் சர்க்கரைப் பொங்கலை உண்ணும். ன்றுஇந்நிகழ்ச்சி சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தினமும் நடந்தது. பின்பு அவை வரவில்லை. அவை முதல் யுகத்தில் சந்தன் பிரசண்டன் என்ற பெயரிலும் இரண்டாம் யுகத்தில் சம்பாதி ஜடாயு என்ற பெயரிலும் மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்ற பெயரிலும் தோன்றிய கழுகுகள் ஆகும்.
அவை கலியுகத்திலும் தொடர்ந்து சில ஆண்டுகள் வந்து உணவருந்திச் சென்றன. இவை இங்கு வருவதற்கு முன்பு இராமேஸ்வரம் சென்று கடலில் குளித்த பின்பு இக்குன்றத்திற்கு வந்து உணவருந்தி பின்பு மாலையில் காசிக்குப் சென்றுவிடுமாம். 500 அடி உயரமுள்ள மலைக்கு தினமும் வந்து கழுகுகள் உணவு பெற்று சென்றதனால் இம்மலை இதனை பட்சி தீர்த்தம் என்றும அழைத்தனர்.
இந்திர பூஜை
திருக்கழுக்குன்றத்தில் உள்ள சிவன் கோவிலுக்குள் வந்து இந்திரன் பூஜை செய்கிறான் என்ற ஒரு நம்பிக்கை இங்கும் உண்டு. பொதுவாக பௌத்தக் கோவிலாக இருந்து இந்திர விகார பின்னர் சிவன் சன்னதியாக மாற்றப்பட்ட இடங்களில் இந்திரனின் புகழைக் குலைக்க இந்திரன் வந்து வழிபடும் ஸ்தலம் என்ற கதை வழங்குகின்றது.
அதுபோல இத்தலத்திலும் சிவன் சன்னதியில் இருக்கும் ஒரு துவாரத்தின் வழியாக இடி ரூபத்தில் இந்திரன் உள்ளே வருவான். வந்து பூஜை செய்துவிட்டு போய்விடுவான். அந்த இடியினால் கோவிலுக்கு எவ்வித சேதமும் ஏற்பட்டதில்லை என்று புராணக்கதை கூறுகின்றது.
தாழக்கோவில்
தாழமங்கை என்றால் இந்திராணி. தாழக்கோயில் என்றால் இந்திராணிக்குரிய கோயில் ஆகும். இங்குத் தாழ்வாக இருக்கும் குகைக் கோவில் தாழ கோவில் என்கின்றனர். இக்கோயிலில் எழுந்தருளி இருக்கும் திரிபுரசுந்தரி பழைய இந்திராணியாக இருக்க வாய்ப்புண்டு. இக்கோவிலுக்கு எதிரே சங்கு தீர்த்தம் உள்ளது.
சங்குத் தீர்த்த வரலாறு
மார்க்கண்டேயர் சிவபெருமானுக்கு அபிஷேகத் தண்ணீர் கொண்டு வர பாத்திரம் இல்லையே என்று நினைத்து கலங்கிய போது இங்கிருந்த தீர்த்தத்தில் ஒரு சங்கு மிதந்து வந்தது. அவர் அந்தச் சங்கைக் கொண்டு தண்ணீர் எடுத்து வந்து சங்காபிஷேகம் செய்தார்.
சங்குத் தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நுரை கிளம்பும். அவ்வாறு நுரை கிளம்பினால் சங்கு மேலே மிதந்து வரப்போகிறது என்று புரிந்து கொள்ளலாம். அன்று கோவில் பூசாரிகள் படிக்கட்டில் வந்து அமர்வார்கள். மெல்ல சங்கு தண்ணீரின் மேலே மிதந்து கரைக்கு வரும்.
அவ்வாறு கரைக்கு வந்ததும் அவர்கள் சங்கை எடுக்க கை நீட்டுவார்கள். பூசாரியின் கைபட்டதும் சஙகில் இருந்த சங்குப் பூச்சி நழுவி தீர்தத்ததிற்குள் நீந்தி மறைந்துவிடும். சங்கு மட்டுமே பூசாரியின் கைகளுக்குக் கிட்டும்.
உலக அதிசயம்
புதிய சங்கு கிடைத்ததும் ஏற்கனவே இருந்து வந்த பழைய சங்கை கோயிலின் ஆபரண அறையில் வைத்து விடுவார்கள். சென்ற ஆண்டு (2024) மார்ச் மாதம் ஏழாம் நாள் புதிய சங்கு மிதந்து வந்தது. பொதுவாக சங்கு உப்பு நீரில் அல்லது கடல் நீரில் தோன்றும்.
ஆனால் நன்னீர் குளத்தில் தோன்றுவது இங்கு மட்டுமே என்பதால் இத்தீர்த்தக் குளம் உலக அதிசயம் ஆகும். 1939 1952 1976 1988 1999 ஆம் ஆண்டுகளில் இக்குளத்தில் சங்குகள் தோன்றின. அவை ஆபரண அறையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
1008 சங்குகளில் தீர்த்தச் சங்கு 12
கார்த்திகை மாதம் இக்கோவிலில் நடக்கும் 1008 சங்காபிஷேகம் உற்சவத்தில் சாமி அபிஷேகத்துக்கு ஆபரண அறையிலிருந்த தீர்த்தச் சங்குகளும் பயன்படுத்தப்படும். இவ்வாறு இதுவரை 12 சங்குகள் இக்கோயிலில் உள்ளன.
சித்தப்பிரமை விலகும்
சங்கு தீர்த்தம் மருந்து தீர்த்தம் என்பதனால் புத்தீஸ்வாதீனம் இல்லாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து இறைவனை வணங்கி மண்டல பூஜை செய்தால் சித்தப் பிரமை நீங்கும். சங்கு தீர்த்தத்தில் தினந்தோறும் குளித்து 48 நாட்கள் தொடர்ந்து சிவத் தியானம் செய்தால் தீராத நோய்களும் தீரும். குடி நோயாளிகளும் நலம் அடைவர்.
கிரிவலம்
பௌத்தக் கோயில்கள் இருந்த மலைகளில் கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் சந்திரத் தியானம் அல்லது சந்திரக் குளியலுக்காக துறவிகள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராக வளையமாக மலையை வலம் வந்தனர். திபெத்தில் கைலாய மலையை வட்டமாக பௌத்த துறவிகள் சுற்றி நின்று 32 மைல் தொலைவு சுற்றி வருவர்.
கைலாயத்தை அவர்கள் புத்தரின் இருப்பிடம் (சக்ராசம்வாரா) என்பர். அவர்கள் வெளியேறிய பின்பும் மலை வலம் வரும் பழக்கம் தொடர்ந்தது. திருக்கழுக்குன்றம் மலையின் சுற்றளவு 4 கிலோமீட்டர் ஆகும். இங்க கிரிவலம் வருவது மிகச் சிறப்பானதாக கருதப்படுகின்றது.
திரிபுரசுந்தரி மகிமை
வேதகிரீஸ்வரரும் சொக்கம்மாளும் மலை மேல் சன்னதி கொண்டுள்ளனர். கீழே தாழ்வான குகையில் உற்சவர் ஆன பக்தவத்சலேஸ்வரரும் திரிபுரசுந்தரியும் காணப்படுகின்றனர். திரிபுரசுந்தரியின் மார்பில் ஸ்ரீ சக்கரம் பதக்கமாக சேர்க்கப்பட்டுள்ளது.
திரிபுரசுந்தரிக்கு ஆண்டுக்கு மூன்று முறை மட்டுமே அபிஷேகம் உண்டு. அவை ஆடிப்பூரம் பங்குனி உத்திரம் நவராத்திரியில் நவமி திதி ஆகும். மலையின் கீழே இருக்கும் தாழ்வரைக் கோவில் மகாபலிபுரத்தை ஆண்ட சுரகுரு சக்கரவர்த்தியால் புதுப்பிக்கப்பட்டது.
திருமலையின் சிறப்பு
திருமலையின் கருவறைநாதரான சிவபெருமான் ஜோதி ரூபமாக விளங்குகின்றார் என்பதால் இம்மலையை மலைக்கொழுந்து என்றும் சிவக்கொழுந்து என்றும் அழைக்கின்றனர். மலையின் கருவறையில் சிவபெருமான் தவிர த்டசினாமூர்த்தி, ஜோதிலிங்கம், போல் இன்னும் பல தெய்வங்கள் புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மலையின் 500 அடி உயரத்தில் உள்ள வேதகிரீச்வரரர் கோயிலில் ராஜகோபுரமும் ஒரே ஒரு பிரகாரமும் அமைந்துள்ளது. மலையின் மீது ஏறிச் செல்ல 558 படிக்கட்டுகள் உள்ளன.
சித்திரை சிவன் உலா
சித்திரை மாதத் திருவிழாவின் போது மூன்றாம் நாள் அதிக அதிகாலை அதிகார நந்தி சேவை நடைபெறுகின்றது. அப்போது எம்பெருமான் பஞ்சமூர்த்திகளோடும் 63 நாயன்மார்களோடும் மலையை வலம் வருவது சிறப்பான காட்சியாகும். ஐந்தாம் நாள் விழா அன்று இரவில் சாமி பஞ்சமூர்த்தி களோடு மலையை வலம் வருகின்றார்
லட்சதீபம்
திருமலைக் கோவிலில் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கன்னி ராசிக்கு குரு பெயர்ச்சி ஆகும்போது மாலையிலும் அடிவாரத்தில் உள்ள ஊரிலும் இலட்ச தீபம் ஏற்றப்படுகிறது. அந்நாளில் இவ்வூரில் இருக்கும் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டு வாசலில் தீபங்கள் ஏற்றுவார்கள். இவ்விழாவிற்கு புஷ்கர மேளா என்று பெயர். ருத்ரன் கோவில் திருக்கழுக்குன்றம் மலையின் தென்கிழக்கு மூலையில் ருத்ரன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ருத்ர கோடியர் சிவலிங்கம் பிரதி செய்து பூஜித்தனர்.
பல அசுரர்களைக் கொன்ற பாவத்தை நீக்க ருத்ரகோடியும் பிருகுமுனிவரின் மனைவியரைக் கொன்ற பாவத்தைத் தீர்க்க நாராயணப் பெருமாளும் சாவித்திரியின் சாபத்தைப் போக்க பிரம்மதேவனும் இறைவனுக்குக் கீழ்ப்படியாத காரணத்தினால் நந்தி தேவரும் அஷ்டவசுக்களும் மற்ற தேவாதி தேவர்களும் முனிவர்களும் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டனர்.அத்தகைய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்ட இடம் இந்த ருத்ரன் கோவில் ஆகும்.
கதலி வனம்
திருமலை கோவிலின் தலவிருட்சம் கதலி அல்லது வாழை மரமாகும். கோவிலுக்கு பின்புறத்தில் கதலி வனம் காணப்படுகின்றது. ஒன்பது விநாயகர்கள் திருக்கழுக்குன்றம் மலையில் காணுமிடம் எல்லாம் விநாயகர் கோயில்கள் இருப்பதைப் பார்க்கலாம்.
ஒன்பது விநாயகர்கள்
உள்ளனர். வேதகிரீச்வரரர் கோயிலுக்குள் வண்டு வன விநாயகர் சந்நிதியும் வெளியே மலையில் சித்தார்த்த விநாயகர் சந்நிதியும் உள்ளது. இவை இரண்டும் இம்மலை முன்பு பௌத்தர் வசம் இருந்ததை உறுதி செய்கின்றது.
சித்தார்த்த விநாயகர்
திருக்கழுக்குன்றத்தில் தினமும் அன்னதானம் செய்த யோகியால் கட்டப்பட்டதால் அன்னச் சாவடி விநாயகர் ஆலயம் உள்ளது. இரட்டை விநாயகர் திருக்கோவில் ஒன்றும் அமைந்துள்ளது. அரசடி விநாயகர் கோவிலில் உள்ளது.
வன்னியடி விநாயகர் கோவில், வலம்புரி விநாயகர் கோயில், வல்லப விநாயகர் கோயில், வேத விநாயகர் கோயில், லட்சுமி விநாயகர் கோயில் என்று பல விநாயகர் கோவில்கள் திருக்கழுக்குன்றத்தில் உள்ளன. பௌத்த மடங்கள் இருந்த மலைகளில் கௌதம் புத்தருக்கு விநாயகர் (இங்கே சித்தார்த்த விநாயகர்) என்ற பெயரில் தனிக் கோயில்கள் கட்டப்பட்டன.
பௌத்த மதம் காலாவதியான பின்பும் இக்கோயில்களில் மக்கள் தொடர்ந்து வழிபாடு நிகழ்த்தினர். வழிபாட்டின் பலன் திருக்கழுக்குன்றம் கோவில் புதன் தோஷம் உடையவர்களுக்கான பரிகார ஸ்தலமாகவ்வும் விளங்குகின்றது.
கன்னி ராசி புதனுக்குரிய ராசி என்பதனாலும் இந்த ராசிக்குள் குரு பிரவேசிக்கும் நாளில் இங்கு தீபத்திருநாள் கொண்டாடப்படுவதாலும் ஜாதகத்தில் புதன் நீசம் புதன் பாவ கிரக சேர்க்கை உள்ளவர்கள் தங்களின் புதன் தோஷம் நீங்க இக்கோவிலுக்கு தொடர்ந்து வரலாம் வருவது நல்ல பலனைத் தரும். கல்வியில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், நினைவாற்றல் குறைந்தவர்கள் இக்கோவிலுக்கு வருவது கல்வியில் மேன்மை பெற உதவும்.
ஜாதகத்தில் வியாழன் பாவ கிரகங்களுடன் சேர்ந்து குரு சண்டாள யோகம் பெற்றிருந்தாலும் அல்லது வியாழன் கெட்டுப் போயிருந்தாலும் நீசம் அஸ்தங்கம் ஆகியிருந்தாலும் அவர்களுக்குத் தெய்வ பலம் குன்றும். குரு அருளளும் திருவருளும் குறையும். போக சக்தி இராது. தாம்பத்தியத்தில் ஈடுபட இயலாது. குழந்தைப் பேறு சிக்கலாகும்.
கருமுட்டை உற்பத்தியாவதில் பிரச்சனை, கருப்பையில் நீர் கட்டிகள், கர்ப்பம் தங்காமல் கருச்சிதைவு ஏற்படுதல், குழந்தைகள் ஊனமாக பிறத்தல் போன்றவற்றிலிருந்து விடுபட தம்பதி சமேதராய் இத்திருத்தலத்திற்கு வந்து கீழே திரிபுரசுந்தரியையும் மேலே மலைக்குப் போய் சொக்கம்மாவையும் சேர்த்து வழிபட இவர்களின் தோஷங்கள் நீங்கி நல்ல ஆரோக்கியமான ஆயுள்பலம் உடைய அறிவுக் குழந்தை பிறக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |