விநாயகரின் அறுபடை வீடு எங்கிருக்கு தெரியுமா?
முருகனுக்கு மட்டும்தான் அறுபடை வீடிருக்கும் என்று தான் நாம் அனைவரும் நினைத்திருப்போம்.
ஆனால் விநாயகருக்கும் அறுபடை வீடு உள்ளது என்பது பலருக்கும் தெரியாத ஒன்று.
விநாயகரின் அறுபடை வீடுகளுக்கும் சென்று அவரை தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.
அந்தவகையில், இந்த பதிவில் விநாயக பெருமானின் அறுபடை வீடு குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதல் வீடு- அல்லல் போம் விநாயகர்
திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்குள்ளே தான் இந்த அல்லல்போம் விநாயகர் இருக்கிறார். "அல்லல்போம் வல்வினைப்போம்" என்று ஔவையார் பாடியதை வைத்தே இந்த பிள்ளையாரின் சிறப்பை புரிந்துக்கொள்ள முடியும்.
இரண்டாவது வீடு- ஆழத்து விநாயகர்
விருதாச்சலத்தில் எழுந்தருளி அருள்புரிகிறார் இந்த ஆழத்து விநாயகர். விருதகிரீஸ்வரர் என்று சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கோவிலில் தான் இந்த விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கினால் ஞானத்தையும், செல்வத்தையும், கல்வியையும் சேர்த்து தருவார்.
மூன்றாவது வீடு- திருக்கடவூர் விநாயகர்
திருக்கடவூரில் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் இந்த பிள்ளையார் காட்சித்தருகிறார். இந்த விநாயகரின் பெயர் கல்ல வாரண விநாயகர். இவரை வணங்குவதால் ஆயுள் பலம் அதிகரிக்கிறது.
நான்காவது வீடு- சித்தி விநாயகர்
மதுரையில் மீனாட்சி அம்மன் சன்னதிக்குள் நுழையும் போதே வழியிலேயே காட்சித்தருகிறார் இந்த சித்தி விநாகர். இந்த சித்தி விநாயகரை வணங்கினால் காரியங்களில் சித்தி கிடைக்கும்.
ஐந்தாவது வீடு- துண்டிராஜா கணபதி, கற்பக விநாயகர்
ஐந்தாவது படைவீட்டில் இரண்டு கோவில்கள் உள்ளது, காசியில் அமைத்திருக்கும் துண்டிராஜா கணபதி, இன்னொன்று பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பகவிநாயகர். கற்பக விநாயகரை வணங்கினால் நினைத்தது நடக்கும், ஞானமும் கிடைக்கும்.
ஆறாவது வீடு- திருநாரையூர்
திருநாரையூரில் சௌந்தரேஸ்வரர் என்னும் ஆலயத்திலேயே பொள்ளாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கிறார். இவர் சுயம்புவாக தோன்றிய பிள்ளையார் ஆவார். புதிதாக காரியம் செய்ய துவங்கும் முன் இந்த பொள்ளாப்பிள்ளையாரை வணங்கினால் அந்த காரியம் கைக்கூடும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |