சீதாதேவியின் தந்தை ஏன் இப்படி ஒரு செயலை செய்தார் தெரியுமா?
நாம் அனைவரும் புராணங்களில் ஜனக மகாராஜா என்ற ஒரு பெயரை கேட்டிருப்போம். அவர் வேறு யாருமில்லை. ஸ்ரீ ராமபிரான் அவருடைய மாமனார், சீதாபிராட்டி அவருடைய தந்தை. சீதாபிராட்டி ஜனகரின் மகள் என்ற ஒரு காரணத்திற்காக சீதாப்பிராட்டியாருக்கு ஜானகி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு.
அப்படியாக ஜனக மகாராஜா வெறும் அரசராக மட்டும் வாழவில்லை. அவர் கல்வியில் சிறந்து விளங்கினார், ஞானத்தில் உயர்ந்து நின்றார், தவத்தை வலிமையோடு மேற்கொண்டார்.
வாழ்நாள் முழுவதும் புண்ணிய காரியங்கள் செய்வதில் அதிக ஆர்வமும் சிந்தனையும் கொண்டிருந்தார். ஒருவர் வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று நிறைவாழ்வு வாழ்ந்த பெருமை இந்த ஜனக மகாராஜாவுக்கு உண்டு.
அப்படியாக அவருக்கும் மனிதர்களைப் போல் ஒரு நாள் மரணம் நிகழ்கிறது. ஜனக மகாராஜா வாழும் காலங்களில் நிறைய புண்ணியங்கள் செய்து வாழ்ந்த பெருமான் என்பதால் சாமானிய மனிதர்களைப் போல பூத உடல் அவரை விட்டு விலகினாலும் அவர் தெய்வீக உடலை பெற்றார்.

அப்படியாக மகான்களும் மகரிஷிகளும் புண்ணிய செல்வத்தை சேர்த்த பெருமை உடையவர்கள் வாழும் மோட்சலோகத்திற்கு ஜனக மகாராஜாவை அழைத்து செல்ல பொன் விமானம் ஒன்று மண்ணுலகத்திற்கு வருகிறது. ஜனக மகாராஜாவும் அந்த பொன் விமானத்தில் ஏறி மோட்சலோகத்திற்கு பயணம் செல்ல புறப்படுகிறார்.
இவ்வாறாக வானுலகத்தை நோக்கி விமானத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது ஓர் இடத்தில் பெரும் கூச்சல் இவர் காதுகளில் விழுகிறது. அங்கு ஒருவர் அழுவதை இவர் காதுகளால் கேட்க முடிகிறது. உடனே சாரதியை நோக்கி அவர் சென்று கொண்டிருக்கின்ற விமானத்தை சற்று நிறுத்த சொல்கிறார்.
பிறகு ஜனக மகாராஜா எங்கிருந்து அந்த அழுகை சத்தம் வருகிறதோ அந்த இடத்தை உற்று பார்க்கிறார். அவ்வாறு அழுகை சத்தம் வருகின்ற இடம் நரகலோகம்.
நிறைய பாவங்கள் செய்த காரணத்தினால் பாவிகள் ஆகிவிட்ட ஜீவன்கள் நரக லோகத்தில் எமன் கொடுக்கின்ற தண்டனையை தாங்கிக் கொள்ள முடியாமல் அலறிக் கொண்டிருப்பதை அவர் அறிந்து கொள்கிறார்.
அந்த காட்சி ஜனக மகாராஜா அவருடைய மனதை மிகவும் பாதித்து விடுகிறது. பாவங்கள் செய்த பாவிகளுக்கு அங்கு எமதர்மனும் அவருடைய தூதர்களும் கொடுக்கின்ற தண்டனையால் அங்கு நரகலோகத்தில் நரகவாசிகள் அழுவதை கண்டு ஜனக மகாராஜாவும் சற்று கண் கலங்கி விடுகிறார்.
அதோடு அவர் நிறுத்தாமல் சாரதியைப் பார்த்து சரி நம்முடைய ரதத்தை நரக லோகத்தை நோக்கி செலுத்து நான் நரக லோகத்திலேயே தங்கி பரிதாபத்திற்குரிய பாவங்கள் செய்தவர்களுக்கு மோட்சம் அளிப்பதற்கான செயல்களை செய்ய உழைக்கப் போகிறேன் என்கிறார். இதைக் கேட்டு சாரதி திகைத்து விட்டார்.

உலகத்தில் உயர்ந்த இடமான அனைவரும் சென்று வாழு வேண்டுமென்று விரும்பக்கூடிய மோட்சலோகத்தை வேண்டாம் என்று தவிர்த்து விட்டு நரக லோகத்திற்கு செல்ல விரும்பும் ஒருவரை இதற்கு முன் சாரதி வாழ்நாளில் பார்த்ததே இல்லை. இப்படியும் ஒருவர் இருப்பாரா என்று அவருக்குள் ஆயிரம் கேள்விகள் வியப்புகள் என்றாலும் ஜனக மகாராஜா விரும்பியது போல் அவர் நரக லோகத்திற்கு கூட்டி செல்லும் அதிகாரம் சாரதிக்கு இல்லை.
ஆதலால் அவர் ஜனகர் சொன்ன தகவலை தன்னுடைய எஜமான் எமதர்மராஜாவிற்கு அறிவிக்கிறார். இந்த கதையை கேட்ட எமதர்மராஜா ஓடோடி வருகிறார். ஜனக மகாராஜாவை பார்த்து அவர் காலில் விழுந்து வணங்குகிறார். எமதர்மராஜா, தர்ம பிரபு தர்மத்தின் உறைவிடமான நீங்கள் பாவிகள் வாழும் நரகத்திற்கு செல்வது எந்த விதத்தில் தகுதியாகும்.
புண்ணிய உலகம் உங்களுடைய வருகைக்காக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது என்றார் எமதர்மராஜா. ஜனக மகாராஜா எமதர்மராஜாவை மிகவும் கலக்கத்துடன், கால தேவரே! நரக லோகத்தில் பாவங்கள் செய்து தவித்துக் கொண்டிருக்கும் அந்த பாவிகளுடைய அலறல் சத்தத்தையும் துடிப்பையும் கேட்டுவிட்டு நான் எவ்வாறு மோட்ச லோகத்தில் நிம்மதியோடு இருக்க முடியும்.
இதற்கு எமதர்மராஜா கவலையோடு சொல்கிறார், தர்ம பிரபுவே தாங்கள் பாவிகள் வாழும் அந்த நரக லோகத்திற்கு உங்களுடைய காலடிகளை எடுத்து வைத்தால் உங்களுடைய புண்ணியம் அரைப்பாகம் உங்களை விட்டு சென்று விடும் என்கிறார். அதற்கு ஜனக மகாராஜா நான் அதை பற்றி கவலைப்படவில்லை, என்னுடைய அரைப்பாகம் புண்ணியம் எங்கு செல்லும் என்று அவர் கேட்கிறார்.
அதற்கு எமதர்மன் சொல்கிறார் உங்களுடைய புண்ணியம் பாவிகளை சென்றடையும் என்று அவர் கூறுகிறார். அதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்த ஜனக மகாராஜா எமதர்மராஜனிடம், அப்படியாக என்னுடைய அரைப்பாகம் புண்ணியம் அவர்களை சென்றடைகிறது என்றால் அதனுடைய விளைவு என்ன என்று ஒரு கேள்வியை எழுப்புகிறார்?

இவ்வாறு அவர்களுக்கு உங்களுடைய புண்ணியம் அவர்களை சேர்ந்தால் நான் கொடுக்கக்கூடிய தண்டனையில் பாதி அளவு குறையும் என்கிறார் எமன். அப்படி என்றால் என்னுடைய புண்ணியங்கள் அனைத்தையும் நான் பாவிகளுக்கு தருகிறேன் என்கிறார் ஜனக மகாராஜா. அதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு கொடுக்கக் கூடிய தண்டனையிலிருந்து விலக்கு அளியுங்கள்.
நானும் நரகலோகத்திலேயே தங்கி பகவானின் கருணையை அவர்களுக்கு உபதேசம் செய்து அவர்கள் பாவங்களுக்கு விமோசனம் தேடுகிறேன் என்றார் ஜனக மகாராஜா. அதாவது மண்ணுலகத்தை விட்டு பிரிந்து விண்ணுலகம் செல்லும் வேளையிலும் தர்மத்தை செய்ய வேண்டும் என்று எண்ணும் இவருடைய துடிப்பைக் கண்டு கால தேவர் வியந்து நிற்கிறார்.
மிகவும் பெரும் மூச்சுடன் கால தேவர் அவருடைய சாரதிக்கு கண்ணை காட்டுகிறார், மோட்சலோகம் நோக்கி சென்று கொண்டு இருந்த பொன் விமானம் ஜனக பெருந்தகையுடன் நரக லோகம் நோக்கி புறப்பட்டது.
அந்த நேரத்தில் எமதர்மராஜாவின் மனதில் எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் எப்பேர்பட்ட சூழ்நிலைகளும் பெருமைக்குரிய பேராண்மையாளர்கள் பெருமைக்குரிய செயலை மட்டும் தான் செய்வார்கள் என்று மனதில் எண்ணியவாறு ஜனக மகாராஜா சென்ற திசை நோக்கி தலை தாழ்த்தி வணங்கினார் எமதர்மராஜா.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். | 
 
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
    
     
                 
                 
                                             
         
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        