ஏன் ஒவ்வொரு கோவிலிலும் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது? இதன் பின்னால் இருக்கும் தெய்வீக காரணம் என்ன?
நாம் எல்லோருமே பிரம்மோற்சவம் என்ற வார்த்தையை கேள்விபட்டிருப்போம். ஆனால், பிரம்மோற்சவம் என்றால் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
``ஸவ’’ என்றால் வடமொழியில் "உலக கவலைகள் அல்லது பிறவித்துயர் என்ற பொருள் கொண்டது. "உத்" என்றால் மேல் நோக்கி உயர்த்துவது, அதாவது துன்பங்களிலிருந்து நீங்குவது என்பது அர்த்தமாகும். மனிதர்கள் உலகியல் வாழ்க்கையில் கவலைகள் மற்றும் துக்கத்திலிருந்து விடுவித்து அவர்களுடைய மனதை ஆன்மீக பாதையில் அழைத்து செல்வதற்கு நடைபெறும் உன்னதமான நிகழ்வே உற்சவம் ஆகும்.

அப்படியாக, ஒவ்வொரு ஆலயங்களிலும் ஒவ்வொரு விதமான உற்சவங்கள் நடக்கும். அதில் ஆண்டுக்கு ஒரு முறை பெரிய உற்சவமாக நடத்தக்கூடிய உற்சவத்தை தான் நாம் பிரம்மோற்சவம் என்று அழைக்கின்றோம். "பிரம்ம" என்ற சொல்லுக்கு பெரிய அல்லது முதன்மையான என்பது பொருளாகும்.
ஒரு ஆலயத்தில் நடைபெறுகின்ற அனைத்து திருவிழாக்களிலும் தலைசிறந்த மிகப்பெரிய உற்சவத்தை குறிக்கக்கூடிய பெயர் இந்த பிரம்மோற்சவ ஆகும். இறைவனுக்கு பிரம்மம் என்ற ஒரு பெயரும் உண்டு. இந்த பிரம்மத்தை தெரிந்து கொள்வதற்கான உற்சவம் என்றே நாம் சொல்லலாம்.
புராணங்களின் அடிப்படையில் உலக நன்மைக்காகவும் மனிதர்களின் பாவங்களை போக்குவதற்காகவும் பிரம்மதேவன் முன் நின்று முதன் முதலில் திருவெங்கடவனுக்கு நடத்திய பெருவிழா என்பதால் இது "பிரம்மோற்சவம்" என்று அழைக்கப்படுகிறது.
இன்றளவும் பெருமாள் ஆலயங்களில் பிரம்மோற்சவம் நடக்கும் போது பிரம்மன் அருவமாக அதாவது நம்முடைய கண்களுக்கு தெரியாமல் அந்த விழாவை நடத்துகிறார் என்பது ஐதீகம்.

ஆகம விதிகளின் அடிப்படையில் இந்த பிரம்மோற்சவம் ஒவ்வொரு ஆலயங்களிலும் ஆண்டுக்கு ஒரு முறை வெவ்வேறு மாதங்களில் நடைபெறுகிறது. அந்தந்த தல மூர்த்திகளுக்கு ஒவ்வொரு நட்சத்திர உண்டு. அந்த நட்சத்திரங்களை ஒட்டி பிரம்மோற்சவம் வைபங்கள் நடைபெறும்.
உதாரணமாக, திருமலையை எடுத்துக் கொண்டால் புரட்டாசி திருகோணத்தை ஒட்டி பிரம்மோற்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும். காரணம், புரட்டாசி திருவோணம் திருமலை அப்பன் நட்சத்திரம், ஸ்ரீமுஷ்ணத்தில் சித்திரை மாதம் நடக்கும். சில இடங்களில் பங்குனி மாதம் நடக்கும். இவ்வாறு அந்தந்த கோவில்களுக்கு ஏற்ப இந்த பிரம்மோற்சவம் மாறுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |