தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் இருக்கின்ற சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் ஒன்று. இந்த கோவில் ஒரு முக்கியமான விசேஷம் என்றால் இங்க இருக்கக்கூடிய ஆண்டவர் உத்தரவு பெட்டி.
அதாவது பக்தர்களுடைய கனவில் வந்து சுப்பிரமணிய சுவாமி சொல்லும் பொருட்களை கோவிலில் வைத்து பூஜை செய்யப்படுவது. பல நூறு ஆண்டுகளாக இந்த கோவிலில் இருக்கக்கூடிய ஒரு வழக்கமாகும். பிறகு அடுத்த பக்தரின் கனவில் வேறு பொருள் வரும் வரை முந்தைய பொருள் பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படுகிறது.
இப்படி வைக்கப்படுகின்ற பொருளுக்கு எந்த ஒரு கால அவகாசமும் இல்லை. மேலும் சிவன் மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கின்ற ஒவ்வொரு பொருட்களும் சமுதாயத்தில் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது எதிர்காலத்தில் நடக்க இருக்கின்ற நிகழ்வுகளை முன்கூட்டியே நமக்கு சில அறிகுறிகள் வழியாக சொல்லப்படுவதாக பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இதற்கு முந்தைய காலங்களில் தண்ணீர் வைத்து வழிபட்ட போது சுனாமி வந்தது. துப்பாக்கி வைத்து வழிபாடு செய்த பொழுது கார்கில் போர் நடைபெற்றது போன்ற நிகழ்வுகள் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த அக்டோபர் நான்காம் தேதி முதல் ஆண்டவர் உத்தரவு பெட்டியில் கடல் நீர் வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உண்டார் பட்டியைச் சேர்ந்த ராம்குமார் என்ற பக்தரின் கனவில் வந்த உத்தரவின் அடிப்படையில் நேற்று முதல் மஞ்சள் பிள்ளையார் வெற்றிலை பாக்கு அருகம்புல் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதனால் இந்த பொருட்கள் நமக்கு உணர்த்துவது என்ன என்று பக்தர்களையே ஆர்வத்தில் ஆழ்த்துகிறது.
இதனை குறித்து சிவாச்சாரியார்களிடம் கேட்ட பொழுது ஆண்டவர் உத்தரவு பெட்டியல் தற்பொழுது வைக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களுமே மங்களகரமானவை. இதனால் நாட்டில் சுப நிகழ்வுகள் அதிகம் நடைபெறும். மக்கள் மத்தியில் ஆன்மீக பற்று அதிகமாக காணப்படும். இயல்பாகவே மஞ்சள் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் காரிய தடைகளை நீங்கும் என்பது நம்பிக்கை.

அதேபோல் அருகம்புல்லும் முழு முதல் கடவுளுக்கு தொடர்புடையதாக இருக்கிறது. ஆதலால் பக்தர்கள் அனைவரும் விநாயகருக்கு அருகம்புல் படைத்து வழிபாடு செய்தால் எந்த துன்பமும் நெருங்காது என்றும் வேண்டுதல் நிறைவேறும் என்பதும் நம்பிக்கை. அதேபோல் வெற்றிலை பாக்கும் எலுமிச்சை பழமும் ஆன்மீகத்தின் சின்னமாகவே இருக்கிறது.
இது அனைத்து தெய்வங்களுக்கும் படைத்து வழிபாடு செய்வதற்கு ஏற்றதாகும். அதிலும் குறிப்பாக பெண் தெய்வங்களுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பதும் துர்க்கைக்கு ராகு காலத்தில் எலுமிச்சை தீபம் ஏற்றுவதும் மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த முறை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கின்ற ஐந்து பொருட்களுமே மங்கள நிகழ்வுடன் தொடர்புடையது என்பதால் இனி வரும் காலங்களில் மங்களமான நிகழ்வுகள் மற்றும் கோவில் உற்சவங்கள் திருவிழாக்கள் கும்பாபிஷேகம் போன்ற தெய்வீக காரியங்கள் நாட்டில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சொல்லப்படுகிறது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |