கடவுளின் உருவம் எப்படி இருக்கும்?
அறிவியலால் எப்போதாவது கடவுளை அறிய முடியுமா, என்று மக்கள் கேட்கிறார்கள். விஞ்ஞானம் அறிவது எதுவும் கடவுளாக இருக்க முடியாது. ஏனென்றால், கடவுள் என்று கூறும் போதே அறிவினால் எட்ட முடியாத ஒன்றையே குறிப்பிடுகிறது.
விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்றாவது கடவுளை பிடிக்க முடியும் என்றால் அவரும் அகப்படக்கூடிய பொருள் ஆகிவிடுவார், உண்மையில், நமது பிடியில் சிக்கினால் அது ஒரு பொருள்.
ஆனால் நாம் பிடிக்க நினைப்பது பிடியில் சிக்காத போது அதன் மேலான அனுமானங்கள் அதிகரிக்கின்றன சூட்சுமம் என்று கிருஷ்ணர் கூறுவதைச் எப்படி சரியாகப் புரிந்து கொள்வது? எது சூட்சுமமோ, அதுவே சத்தியம்.
எது பிடிபடுகிறதோ, அது அசத்தியம். ஆக கடவுள் பிடிப்பட மாட்டார் என்று எண்ணுதல் சரியாக இருக்குமா? பொருட்கள் இன்று இருக்கும் நாளை மறையும், அல்லது மாறும் எதுவானாலும் அது அசத்தியம் எனலாம் எது பிடியில் சிக்காதோ அது சத்தியம், இதை தான் மெய்ப்பொருள் என்றார் வள்ளுவர், பொருள் என்று வெறுமனே குறிப்பிடாமல் மெய் என்று அடைமொழி தருகிறார்.
ஒரு அறையில் மலர்க்கொத்து வைக்கப்பட்டிருக்கிறது. அது காலை மலர்ந்து மாலையில் வாடி விடுகிறது. அந்த மலரின் அருகில் ஒரு கல்லாலான லிங்கம் வைக்கப்பட்டிருக்கிறது.
காலை யில் இருந்தது, மாலையில் இருக்கும். ஆனால் நூறு இருநூறு வருடங்களில் அழிந்து விடும். இதில் ஏதும் மாறுபாடு இல்லை. அறையில் ஒரே ஒரு பொருள்தான் அழியாமல் இருக்கும்.
அது அந்த அறைத் தன்மை, அறையின் வெற்றுத் தன்மை. அது அழியாது. இதை எப்படி புரிந்து கொள்வது? தாவோ சைத்ரிக ஓவியனின் கதை ஒன்று படித்திருக்கிறேன்.
தாவோ குரு, தன் சீடர்களிடம் ஒரு படம் வரைந்து காட்டுமாறு கூறினார். சிஷ்யர்கள் குருவிடம் படத்திற்கான விஷயம் ஏதாவது அளிக்கும்படி கேட்டனர். குருவும் பசு புல் மேய்வது போல் வரையச் சொன்னார்.
சிஷ்யர்கள் பல அருமையான படங்கள் வரைந்து காட்டினர். ஒருவர் வரைந்த படம் மட்டும் முற்றிலும் வேறாக இருந்தது.
அவர் வெறும் தாளையே வைத்திருந்தார். குரு கேட்டார், "சரியாக வரைய முடியவில்லையா?” என்று. அவர், “இல்லை, இல்லை. சித்திரம் வரைந்துள்ளேன், பாருங்கள்” என்று பதிலளித்தார். குருவும் மற்றவர்களும் படத்தைத் தேடினர் காகிதத் தில். பிறகு அவரிடம், 'பசு எங்கே?” என வினவினர்.
அவர் "பசு மேய்ந்து விட்டுச் சென்று விட்டது,“ என்றார். குரு, 'இந்தப் படத்தில் என்ன மீதமிருக்கிறது?" எனக் கேட்டபோது, “பசு வருமுன் எது இருந்ததோ, புல் வளரும் முன் எது இருந்ததோ, பசு போன பின்னும் எது இருக்கிறதோ, புல் அழிந்த பின்னும் எது இருக்கிறதோ, அதையே நான் காட்டியிருக்கிறேன்!'' என்று பதிலளித்தார்.
எல்லோரும், "இது வெற்றுத் தாளல்லவா?” என்று கேலி செய்தனர். அவர், "இதுவே மீதி இருக்கிறது. இந்த வெற்றுத் தன்மை மட்டும்தான்", என்றார்.
கிருஷ்ணர் இந்த வெற்றுத் தன்மையைத்தான் சூட்சுமம் என்கிறார். அது, எல்லா அலைகளும் எழும்பி விழுந்தபின் மிகுந்து நிற்கும் மீதி பரமாத்மா ஆகும்.
எளிமையான உதாரணம் பார்ப்போமா? கடவுள் சக்தி படைத்தவர் தானே. அதில் ஏதும் சந்தேகம் இல்லையல்லவே? நீங்கள் பார்த்த சக்தி வாய்ந்த எதேனும் ஒன்று நினைவில் கொள்ளுங்கள் மின்னல் என்று வைத்துக்கொள்வோம் மின்னலின் சக்தி அபரிவிதமானது ஆனால் அது எந்த வடிவத்தில் உள்ளது என்று உங்களால் கூற முடியுமா?
கடவுள் தன்மை அதை விட சக்தி வாய்ந்த ஒன்று என்றால் அது எப்படி ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இருக்க முடியும் சக்தி வாய்ந்த ஒன்று உருவாத்தில் அடங்காது என்பதை உணர்வதே பகுத்தறிவு ஆகும்
கடவுள் தன்மை எல்லா இடத்திலும் நிறைந்து உள்ளது அதுவே நம் உள்ளேயும், வெளியேயும் உள்ளது.
வாழ்க வளமுடன்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |