தீட்டு என்றால் என்ன? தீட்டு இருந்தால் கோவிலுக்கு செல்லக் கூடாதா ?
நம்முடைய இந்து மதத்தில் காலம் காலமாக அனைவரும் புரிந்தும் கொள்ள முடியாமல் பயன்படுத்தக்கூடிய வார்த்தையாக தீட்டு என்ற வார்த்தை உள்ளது. இந்த தீட்டு பலருடைய தவறான புரிதலால் பல விஷயங்களை கொண்டு சொல்லப்படுகிறது.
ஆண் பெண் கலந்தால் தீட்டு, தொடக்கூடாத விஷயங்களை தொட்டால் தீட்டு, உயிர் பிரிந்து இருக்கக்கூடிய உடலை தொட்டால் தீட்டு, பெண்கள் மாதவிடாய் காலத்தை தீட்டு என்று இப்படி பல விஷயங்களை நாம் சொல்லி வருகிறோம்.
அப்படி பார்த்தால் ஒவ்வொரு உயிரும் தீட்டுதான். தீட்டுடன் தான் ஒவ்வொரு உயிரும் இந்த உலகத்தில் பிறக்கிறது. ஆகையால், நாம் சுகாதாரமாக இருப்பதற்கு கடவுளுடைய பெயரைச் சொல்லி நம்மை ஒழுக்க படுத்துவதற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு வார்த்தையாக உள்ளது. உண்மையில் தீட்டு என்பது காமம், குரோதம், லோபம் மதம், மாற்சரியம் எனும் பஞ்சமா பாதங்கள் ஆகும்.

காம தீட்டு :
பொதுவாக, மனிதர்களுடைய மனமானது ஏதாவது பொருளின் மீது அதிக ஆசை கொண்டு விட்டால் அதை பற்றிய அதிக நேரம் மனம் சிந்தித்துக் கொண்டிருக்கும். அதை அடைவதற்கான வழிகளை தேடிக்கொண்டு இருக்கும். இந்த நேரங்களில் நாம் இறைவனை வழிபாடு செய்ய முடியாது. அந்த ஆசையானது நம்மை ஆட்கொண்டு விடுகிறது. அதனால் தான் ஆசைக்கு அடிமையாகாதே, அதை தீண்டாதே என்கிறார்கள்.
குரோதத் தீட்டு:
குரோதம் என்றால் கோவம். ஒருவருக்கு கோபம் வந்துவிட்டால் அவர்கள் மெய் மறந்து விடுகிறார்கள். சுற்றி இருப்பவர்கள் யார் என்று அவர்கள் மறந்து என்ன பேசுகிறோம் என்பதை கூட சிந்திக்காமல் தேவையில்லாத வார்த்தைகள் என்று இன்னும் சிலர் கொலை செய்யும் அளவிற்கு சென்று விடுகிறார்கள்.
பிறகு அதனால் ஆயுள் முழுவதும் அவர்கள் துன்பத்தை அனுபவிக்க கூடிய நிலை வருகிறது. இந்த கோபத்தால் அழிந்தவர்கள் பல லட்சம் நபர்கள். அதனால் தான் கோபத்திற்கு அடிமையாகாதே. அதை தீண்டாதே என்கிறார்கள். இந்த குரோதம் என்பது இரண்டாவது தீட்டாக இருக்கிறது.
லோபத்தீட்டு:
லோபம் என்றால் சுயநலம். ஒரு சிலரை பார்த்திருப்போம் பிறரை பற்றிய சிந்தனை அவர்களுக்கு இருக்கவே இருக்காது. அவர்கள் மனதில் இரக்கம் என்கின்ற ஒரு குணம் இருப்பதை நாம் வெளிச்சம் போட்டு தேட வேண்டும்.
அந்த அளவிற்கு அவர்கள் சுயநலமாக இருப்பார்கள். எல்லாம் தனக்கு தான். நான் மட்டும் நன்றாக இருந்தால் போதும் என்கின்ற நோக்கமும். வஞ்சனை எண்ணமும் பிறர் பொருட்களை அபகரிக்க கூடிய ஆசையும், பிறரை வாழாமல் கெடுக்கக்கூடிய அந்த குணமும் மோசமான செயல்களை செய்ய தூண்டுகிறது. இந்த நேரங்களில் இறைவனை நாமமும் இறைவனின் சிந்தனையும் அந்த மனதிற்குள் செல்வது கடினம். அதனால் தான் சுயநலத்திற்கு அடிமையாகாதே, அதை தீண்டாதே என்கிறார்கள்.

மதத் தீட்டு:
மதம் என்றால் ஆணவம் என்று பொருள். யாரையும் மதிக்காமல் எல்லா விஷயங்களும் தானே செய்துவிட முடியும். இவர்களெல்லாம் எனக்கு முன்பு தூசி போல் என்ற அகங்காரம் கொண்டு இருப்பார்கள். அதனால் அவர்கள் நெறி தவறி செல்வதற்கான வழிகள் ஏராளம். இப்படிப்பட்ட நேரங்களில் மனம் எப்படி இறைவனை நாடிச் செல்லும். அதனால்தான் கர்வத்திற்கு அடிமையாகாதே என்கிறார்கள். அதைதீண்டாதே என்று சொல்கிறார்கள்.
மாற்சரிய தீட்டு:
மாற்சரிய என்றால் பொறாமை. பிறருடைய வாழ்க்கையை கண்டு பொறாமை கொண்டு அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வேதனைப்படுவதாகும். இது நம்மை நாமே நொந்து கொள்ளக்கூடிய இடம். ஆதலால் அந்த இடத்தில் கோபமும் எரிச்சலும் அன்பும் இல்லாத ஒரு நிலையை நாம் அடைகின்றோம்.
தாழ்வு மனப்பான்மையால் எதிரில் உள்ளவர்கள் யாரைப் பார்த்தாலும் சகித்துக் கொள்ள முடியாமல் மனிதத்தன்மை இழக்கின்றோம். இந்த நேரத்தில் இறைவனை நாடி செல்ல முடியும். அதனால் தான் பொறாமைக்கு அடிமையாகாதே, அதை தீண்டாதே என்கின்றனர். இவை ஐந்தும் மாபெரும் தீட்டுக்கள்.
இதைத்தான் மனிதர்கள் தீண்டி விட்டு இறைவனை நாடிச் செல்லக்கூடாது என்று சொல்கிறார்கள். அதாவது இறைவன் இருக்கும் இடத்திற்கு தீட்டு ஆகாது என்பதற்கு இந்த ஐந்து தீட்டு முக்கியமான காரணமாக இருக்கிறது. அதாவது இறைவன் தீய எண்ணங்கள் கொண்டவர்களுக்கு இடம் கொடுப்பதில்லை என்பது தான் இதன் முழு அர்த்தம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |