2025 நவராத்திரி எப்பொழுது? அன்று என்ன செய்யவேண்டும்? என்ன செய்யக்கூடாது?
நவராத்திரி என்பது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும். அதாவது பெண் தெய்வங்களை போற்றும் விதமாக கொண்டாடும் பண்டிகை தான் இந்த நவராத்திரி ஆகும். ஒரு வருடத்தில் மொத்தம் நான்கு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன.
ஆஷாட நவராத்திரி சாகம்பரி நவராத்திரி, சைத்ர நவராத்திரி மற்றும் சாரதா நவராத்திரி என்று நான்கு வகையான நவராத்திரிகள் கொண்டாடப்படுகிறது. இதில் புரட்டாசி மாதம் வரக்கூடிய சாரதா நவராத்திரியே இந்திய முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அதாவது அன்னை பராசக்தி தேவி அசுரர்களை வதம் செய்து வெற்றி கொண்டதைக் கொண்டாடும் விழா தான் நவராத்திரி விழாவாக புராணங்களில் சொல்லப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை அதாவது மகாளய அமாவாசைக்கு பிறகு வரக்கூடிய பிரதமை திதி துவங்கி அஷ்டமி வரையிலான ஒன்பது நாட்களை நவராத்திரி என்றும் பத்தாவது நாளை விஜய தசமி என்றும் கொண்டாடுகின்றோம்.
இதில் நவராத்திரியின் பொழுது முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்து வரக்கூடிய மூன்று நாட்கள் லட்சுமி தேவியையும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியையும் வழிபாடு செய்கின்றோம். இந்த ஒன்பது நாள் நவராத்திரி நாட்களில் அம்பிகையின் 9 விதமான சக்திகள் போற்றி துதிக்கப்படுகிறது.
அப்படியாக இந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி திங்கட்கிழமை நவராத்திரி விழா துவங்க உள்ளது. நவராத்திரி விழாவின் பொழுது வீடுகளில் கொலு படிகள் அமைத்து வழிபாடு மேற்கொள்வார்கள். மேலும் செப்டம்பர் 22ஆம் தேதி காலை 6. 09 முதல் 8. 06 மணி வரையிலான நேரம் கலசம் அமைப்பதற்கான முகூர்த்த நேரமாக உள்ளது. அன்றைய தினம் அபிஜித் முகூர்த்தமும் காலை 11.49 முதல் பகல் 12.38 வரையிலான நேரம் அமைந்துள்ளது.
இந்த நேரங்களில் நாம் கலசம் அமைத்து வழிபாடு செய்வது அம்பிகையின் அருளை பெற்றுக்கொடுக்கும். நவராத்திரியின் பொழுது 9 நாட்களும் அம்பிகைக்கு ஒவ்வொரு விதமான அலங்காரம் செய்து அம்பிகைக்கு ஏற்ற நிறத்தில் வஸ்திரம் அணிவித்து, ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு வகையான நெய்வேத்தியம் படைத்து வழிபாடு செய்வார்கள்.
இதை செய்ய முடியாதவர்கள் நவராத்திரி ஒன்பது நாட்களும் மாலை வேளையில் விளக்கேற்றி அம்பிகையை மனதார நினைத்து அவளுக்குரிய ஸ்லோகங்களும் மந்திரங்களும் பாராயணம் செய்து வழிபாடு செய்வார்கள்.
இவ்வாறு ஒன்பது நாட்களும் நாம் மனதார அம்பிகையை நினைத்து வழிபாடு செய்யும்பொழுது நம் வீடுகளில் உள்ள எதிர்மறை சக்திகள் விலகி நம் மனதில் நேர்மறை எண்ணங்கள் வருகிறது. ஆதலால் இந்த நவராத்திரி தினத்தை நாம் வாழ்க்கையில் வரக்கூடிய இன்னல்கள் விலக அம்பிகையை மனதார நினைத்து வழிபாடு செய்து அம்பிகையின் அருளால் தோல்வியை உடைத்து வெற்றிகள் ஆக்குவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







