தீபாவளி பண்டிகையை 7 நாள் கொண்டாடவேண்டுமா? ஏன் தெரியுமா
இந்து மத பண்டிகைகளில் தீபாவளி மிக முக்கியமான பண்டிகையாகும். அப்படியாக பலரும் தீபாவளியை ஒருநாள் கொண்டாடும் பண்டிகையாகவே கருதுகின்றனர். ஆனால் உண்மையாக சாஸ்திர ரீதியாக தீபாவளியை 5 நாட்கள் கொண்டாட வேண்டும் என்கிறார்கள். அந்த விவரங்களை பற்றி பார்ப்போம். பொதுவாக தீபாவளி என்பது வடமொழி சொல். தீப- ஆவளி என்று பொருள்.
அதில் ஆவளி என்றால் வரிசை என்று அர்த்தம். ஆக தீபங்களை வரிசையில் வைப்பது தான் தீப ஆவளி என்று தீபாவளி பெயரானது.
1. அந்த வகையில் 2025 அக்டோபர் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம் மாலை நேரத்தில் பிரதோஷ காலத்தில் கன்றுடன் இருக்கக்கூடிய பசுவை நாம் பூஜை செய்து வழிபாடு வேண்டும்.
இதற்கு கோவத்ஸ துவாதசி என்று பெயர். வத்சலா என்றால் குழந்தை என்று பொருள். நம்முடைய இந்து மதத்தில் எந்த ஒரு பண்டிகை கொண்டாட வேண்டும் என்றாலும் முதலில் கோ பூஜை செய்ய வேண்டும். தீபாவளி பண்டிகை என்பது நரகாசுரனின் என்னும் தன் மகனை பூமா தேவியின் அம்சமான சத்தியபாமா ஸ்ரீ கிருஷ்ணர் முன்னிலையில் சம்ஹாரம் செய்த தினம் ஆகும்.
ஆதலால் இன்றைய தினத்தில் கன்றுடன் இருக்கக்கூடிய பசுவை நம் வழிபாடு செய்தால் நம்முடைய பிள்ளைகள் நம்முடைய சொல் பேச்சு கேட்டு நல்ல குழந்தைகளாக வளர்வார்கள் என்பது நம்பிக்கை. இன்று ஒரு நாள் மட்டும் நாம் நம்முடைய உணவுகளில் பசும்பால் தயிர் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.
2. அக்டோபர் 18 சனிக்கிழமை அன்று யம திரயோதசி. கடந்து ஒரு மாதம் முன்பு மகாளய பட்ச காலத்தில் நம் வீடுகளில் இறந்த முன்னோர்களுக்கு எம தீபம் ஏற்றி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்திருப்போம். அவர்கள் மீண்டும் எமலோகம் செல்ல பாதையில் வெளிச்சம் காட்ட தென்திசை நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் இறந்த நம் முன்னோர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தீபம் விதம் அல்லது குறைந்தது 5 தீபம் மாலை நேரத்தில் தெற்கு நோக்கி வீட்டிற்கு வெளியே வாசலில் வைக்க வேண்டும்.
இதனால் வருகிற அந்த வருடம் முழுவதும் முன்னோர்களுடைய ஆசி நமக்கு முழுமையாக கிடைக்கும். இதை அறிவியல் ரீதியாக பார்த்தால் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் சூரிய பகவானுடைய வெளிச்சம் பகல் முழுவதும் சற்று குறைந்தே காணப்படும்.
ஜோதிட ரீதியாக சூரியன் நீசம் பெறும்போது கண்ணுக்குத் தெரியாத பூச்சிகள் வைரஸ் போன்ற கிருமிகள் உற்பத்தி ஆகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாலும் அதனை தவிர்ப்பதற்கு தினமும் மாலையில் தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள்.
3. அக்டோபர் 19 ஞாயிற்றுக்கிழமை அன்று தன்வந்திரி ஜெயந்தி கொண்டாட வேண்டும். அதாவது மருத்துவர்களின் கடவுளான தன்வந்திரியை போற்றிக் கொண்டாடும் விதமாக இந்த நாள் இருக்கிறது. மேலும் ஐப்பசி மாதம் வருகிற திரயோதசியை தனதிரயோதசி என்பர். அதாவது அக்ஷய திருதியை விடவும் இந்த நாளில் தங்கம் வாங்கினால் மிகவும் சிறப்பானது என்று சொல்கிறார்கள்.
4. அக்டோபர் 20 திங்கட்கிழமை நரக சதுர்தசி யம சதுர்தசி ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து நல்ல எண்ணெய் எனப்படும் எள்ளு எண்ணெயில் உடல் முழுவதும் தேய்த்து அதில் வாசனை திரவியங்கள் ஆன அக்தர் ஜவ்வாது, புஷ்பங்கள் போன்றவை கூட சேர்த்து கொண்டு வெந்நீரில் குளிக்க வேண்டும்.
இந்த நாளில் வெந்நீரில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் கங்கையில் நீராடிய மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கிறது. வெந்நீரில் எண்ணெயிலும் லட்சுமியும் கங்கையின் வாசம் செய்கிறார்கள் என்பது ஐதீகம். இவ்வாறு குளித்துவிட்டு சூரிய உதயத்தில் கிழக்கு நோக்கி இருந்து கொண்டு எமனுக்கு சித்ரகுப்தனுக்கும் எம தீர்த்தம் என தர்ப்பணம் செய்ய வேண்டும். தாய் தந்தையர் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என அனைவரும் செய்யலாம். இவ்வாறு அக்டோபர் 20ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாட வேண்டும்.
5. அக்டோபர் 21 செவ்வாய்க்கிழமை அன்று கேதார கௌரி விரதம் லட்சுமி பூஜைகள் செய்ய வேண்டும். அதாவது சிவபெருமானுக்கு கேதாரேஸ்வரர் என்கின்ற திருநாமம் உண்டு. அன்னை பார்வதி இந்த விரதம் இருந்ததால் இதை கேதார கௌரி விரதம் என்பார்கள். அன்று வீடுகளில் கலசம் வைத்து 21 முடிச்சு உள்ள மஞ்சள் சரட்டை வைத்து கலசத்துக்கு அலங்காரம் செய்து 21 எண்ணிக்கையில் பழம், வெற்றிலை பாக்கு, அப்பம் போன்றவை வைத்து பூஜிக்க வேண்டும்.
6. பிறகு அக்டோபர் 22 ஆம் தேதி அன்று புதன்கிழமை கார்த்திக சுத்த பிரதமை. அன்று கார்த்திகை முதல் நாள். ஜோதிட ரீதியாக கால புருஷனுக்கு மறைவு ராசியான விருச்சிக மாதம் முழுவதும் தீபம் ஏற்றி வைத்து வருவது நல்லது. இதை செய்வதால் கடன் தொல்லை மற்றும் கடன் பிரச்சனைகள் விலகும்.
7. அதோடு அக்டோபர் 23ஆம் தேதி வியாழக்கிழமை அன்று சகோதரர்கள் சகோதரிகளின் அழைப்பை ஏற்று சகோதரிகளின் இல்லத்திற்கு சென்று அவர்கள் கையாலே தலை வாழை இலை போட்டு உணவு அருந்தவேண்டும். இதற்கு புராணங்கள் படி ஒரு கதையும் இருக்கிறது. அதாவது எமனின் சகோதரியான யமுனா தன் அண்ணன் எமனை ஒருநாள் உணவு சாப்பிடுவதற்காக அழைத்திருக்கிறார்.
ஆனால் எமலோகத்தில் சதா உயிர்களின் இறப்பு எண்ணிக்கை அதிகம் வந்து கொண்டிருந்ததால் அவர் யமுனையின் அழைப்பை ஏற்றுக் கொண்டு விருந்தில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பு அமையவில்லை. இந்த சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் மூலம் நரகாசுரனை வாதம் செய்த பின்னர் எமலோகத்தில் வரும் ஆத்மா எண்ணிக்கை குறைய எமனுக்கு வேலை குறைந்தது.
தன் சகோதரியின் அழைப்பு ஞாபகம் வந்தவுடனே எமன் யமுனையில் வீட்டிற்கு சென்று படையல் உண்டு விட்டு பிறகு யார் ஒருவர் தன் சகோதரி கையால் உணவு உண்ணுகிறார்களோ அவர்களுக்கு நரக பயம் இல்லை என யமுனா அவருக்கு வரம் அளித்தார்.
இவ்வாறு தன் சகோதரர்கள் தன் வீட்டில் அன்றைய நாள் உணவு அருந்தாமல் சகோதரி வீட்டில் உணவு எடுத்துக்கொண்டு ஒரு பரிசு பொருட்களை பரிமாறிக் கொண்டு சந்தோஷமான தீபாவளியை கொண்டாட வேண்டும். இதுதான் தீபாவளி பண்டிகைகளுக்கு பின்னாடி இருக்கக்கூடிய அற்புதமான சாஸ்திர விஷயங்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







