பழனி முருகன் கோவிலில் இரவு தங்குவதற்கு இவர்களுக்கு மட்டுமே அனுமதி
கலியுக வரதன் முருகப்பெருமான், சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் இளைய மகனாகவும் அழகு, வீரம், ஞானம், கோபம், அன்பு, கருணை என்று எல்லாவற்றிற்கும் அடையாளமாக திகழக்கூடியவர். மேலும், முருக பெருமானுடைய அறுபடை வீடுகளில் இருக்கக்கூடிய முருகப்பெருமானை ஒருவர் தரிசனம் செய்தால் அவர்களுக்கு வாழ்க்கையில் செவ்வாய் தோஷத்தின் தாக்கம் குறையும்.
அப்படியாக, முருகப்பெருமானுக்கு உகந்த தினமாக தைப்பூச விழா. தை மாதம் பௌர்ணமி கூடிய பூச நட்சத்திரத்தில் கொண்டாட கூடிய விழாக்கள் மிக சிறப்பாக இருக்கும். இந்த தைப்பூச திருநாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து காவடி எடுத்து வழிபாடு செய்தால் சகல பாவங்களும், தோஷங்களும் தடைகளும் நீங்கி நல்ல வாழ்வு பெறலாம் என்பது பக்தர்களுடைய தீராத நம்பிக்கை.

இதனால் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பலரும் முருகப்பெருமானுக்கு 48 நாட்கள் விரதம் இருந்து பாதயாத்திரை செல்வார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதி மக்கள் பழனி முருகனை தங்களுடைய மருமகனாகவும், தங்களுடைய குல தெய்வமாகவும் கருதி கிட்டத்தட்ட 350 ஆண்டுகளுக்கு மேலாக சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றன.
இதனுடைய பின்னணி என்னவென்று பார்ப்போம். அதாவது பார்வதி தேவி தங்களுடைய குலத்தில் பிறந்தவர் என்பதால் முருகப்பெருமான் தங்களுடைய மருமகனாக கருதி முருகப்பெருமானுக்கு சீர்கொண்டு செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
ஆதலால் தைப்பூசத்தின் பொழுது பாதையாத்திரை சென்று சிறப்பிடம் பெறுவதும், மலைக்கோயிலில் தங்கும் முழு உரிமையும் இவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது இவர்களுக்கு உரிய தனி சிறப்பு. அதாவது பிற பொதுமக்கள் மலைக்கோவில் வளாகத்தில் இரவு நேரங்களில் தங்குவதற்கு அனுமதியில்லை. இரவு 9 மணிக்குள் கோவில் மூடப்படும்.
ஆனால் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீ பார்வதராஜகுல சமூகத்தினர் அதாவது மீனவ மக்கள் பழனி தண்டாயுத சுவாமி கோயிலில் தைப்பூச விழாவின்போது பல நூற்றாண்டுகளாக தொடரும் ஒரு சிறப்பு உரிமையின் காரணமாக இரவு நேரங்களில் மலை கோவிலில் தங்கி வழிபாடு செய்யக்கூடிய அனுமதி இவர்களுக்கு இருக்கிறது.

அதேபோல் இக்குழுவினர் பாதை யாத்திரையாக காவடி எடுத்து வந்து முருகனை மருமகனாக கருதி சிறப்பு வழிபாடு மற்றும் படி பூஜை செய்யக்கூடிய உரிமையும் வழங்கப்பட்டுள்ளது. அதோடு எடப்பாடி பார்வதராஜகுல சமூகத்தினர் சார்பில் வருடம் தோறும் சுமார் 20 டன் பஞ்சாமிர்தம் தயாரித்து பரிசக் காவடி எடுத்து வந்து சிறப்பு வழிபாடு நடத்துவார்கள்.
இதைவிட முக்கியமாக ஒரு முறை பழனி பெரியநாயகி அம்மன் கோவில் தேரோட்டத்தின் பொழுது தேர் ஒரு இடத்தில் நின்று விடுகிறது. எத்தனையோ நபர்கள் வந்து முயன்ற போதும் அந்த தேர் நகரவில்லை.
அப்பொழுது இறைவனுடைய அருளால் கடலோர பகுதிகளில் வசிக்கும் மீனவ சமூகத்தை சேர்ந்த பார்வதராஜகுலத்தினர் வந்து வடம் பிடித்து இழுக்க தேர் மிக எளிதாக நகர்ந்தது எல்லோரையும் வியக்க வைத்த ஒரு சம்பவமாகும்.
பழனி முருகன் கோவிலில் யாராலும் நகர்த்த முடியாத திருத்தேர் இவர்கள் வடம் பிடித்து இழுத்து நகர்த்தியது வரலாற்றில் ஒரு சிறப்பு இடத்தை பிடித்துள்ளது. இவர்கள் நடப்பாண்டு பழனி ஆண்டவருக்காக செல்ல இருக்கின்ற பாதை யாத்திரை ஆனது 366 வது பாதையாத்திரை என்பது குறிப்பிடத்தக்கது.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |