நம்முடைய இந்து மதத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று.அந்த அளவிற்கு தை மாதம் ஆன்மீகம் நிறைந்த மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் தான் பூச நட்சத்திரத்தில் அமையும் தைப்பூசத் திருநாள் முருகப்பெருமானுக்கு மிக விசேஷமாக கொண்டாட கூடிய பண்டிகையாகும்.
தைப்பூச திருநாளில் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். காரணம் இந்த தைப்பூசத் திருநாளில் நாம் முருகப்பெருமானிடம் என்ன வேண்டுதல் வைக்கின்றோமோ, அதை அவர் அப்படியே நிகழ்த்தி கொடுப்பதாக நம்பிக்கை.
அந்த வகையில் இந்த தைப்பூச திருநாள் அன்று தான் முருகப்பெருமான் ஒரு மிகப்பெரிய அதிசயம் ஒன்று நிகழ்ந்திருக்கிறார் . அதை பற்றி பார்ப்போம்.

சோமசுந்தர படையாட்சி மற்றும் சுப்பம்மா என்ற தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு இந்திரங்க என பெயர் சூட்டி அவனின் பெற்றோர்கள் மகிழ்ந்தனர். எல்லா அம்சங்களும் சிறப்பாக அமைந்திருந்தாலும் அந்த குழந்தைக்கு இறைவன் வாய் பேச முடியாத குறையை மட்டும் கொடுத்து விட்டார்.
இதைக் கண்டு இந்திரனுடைய பெற்றோர்களுக்கு மிகவும் வருத்தம். ஒருமுறையாவது தன்னுடைய குழந்தை என்னை பார்த்து அம்மா அப்பா என்று அழைத்து விட மாட்டானா என்று ஏங்கினார்கள். இருப்பினும் அவர்கள் நம்பிக்கையை விடவில்லை. காலம் மாறினால் சூழ்நிலை மாறும். இந்திரன் கட்டாயம் பேசுவான் என்று நம்பிக்கையோடு இருந்தார்கள்.
அப்படியாக ஒரு முறை குக ஸ்ரீ அருணாசல அரனடிகள் என்ற சிறந்த வரகவியை பற்றி கேள்விப்பட்ட இந்திரனின் பெற்றோர் அவனை அழைத்துக்கொண்டு அவர்களை காணச் செல்கின்றனர். அவரை பார்த்தவுடன் அவர்களுடைய சோகத்தை எடுத்துச் சொல்கிறார்கள். அதற்கு குக ஸ்ரீ அருணாசல அரனடிகள் இந்திரனின் பெற்றோர்களிடம் கவலை கொள்ளாதீர்கள்.
முருகப்பெருமானுடைய முழு அருளும் உங்கள் மகனுக்கு இருக்கிறது. அதனால் நிச்சயம் முருகன் அருளால் உங்கள் மகன் இந்திரன் பேசுவான் என்று அவர் நம்பிக்கை கொடுக்கிறார். அது மட்டுமல்லாமல் தைப்பூசம் அன்று உங்கள் மகனை பால் காவடி எடுக்கச் சொல்லுங்கள்.

எவ்வாறு பால் நம்முடைய வயிற்றை குளிர்விக்கிறதோ அதேபோல் முருகப் பெருமானும் மனம் குளிர்ந்து உங்களுக்கு ஒரு நல்ல அருள் புரிவார். அதோடு, முருகப்பெருமானின் பெயரில்10 பதிகம் எழுதி தருகிறேன்.
அந்த பதிகங்களை முருகப்பெருமானின் சன்னதியில் நீங்கள் பாடுங்கள். மற்றவை எல்லாம் அப்பன் முருகன் பார்த்துக் கொள்வான் என்று 10 பதிகங்களை எழுதி இந்திரனின் பெற்றோரிடம் கொடுத்து குழந்தைக்கு ஆசிர்வாதம் செய்து அனுப்புகிறார்.
இவ்வாறு குக ஸ்ரீ அருணாசல அரனடிகள் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்ட இந்திரனின் பெற்றோர்களுக்கு தைப்பூசம் எப்பொழுது வரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்தது போல் தைப்பூசத் திருநாளும் வந்தது.
இந்திரனை பால்குடம் எடுக்க வைக்கிறார்கள். பால்குடம் எடுத்து முடித்த பிறகு இந்திரனை அழைத்து கொண்டு முருகப்பெருமான் சன்னதியில் நின்று சோமசுந்தர படையாட்சியும் அவருடைய மனைவி சுப்பம்மாவும் குக ஸ்ரீ அருணாசல அரனடிகள் எழுதிக் கொடுத்த பத்து பதிகத்தை மிகுந்த நம்பிக்கையோடு விடிவுகாலம் இன்றே பிறக்கும் என்று அவர்கள் முருகனைப் பார்த்து பாடுகிறார்கள்.

எங்கெல்லாம் நம்பிக்கை கொண்டு பக்தர்கள் முருகனை அழைக்கிறீர்களோ அங்கெல்லாம் முருகப்பெருமான் அருள் புரிவார் என்பது போல் இவர்களுடைய நம்பிக்கைக்கு அற்புத காட்சியாக குக ஸ்ரீ அருணாசல அரனடிகள் சொன்னது பதிகம் பாடி முடிக்க வாய் பேசாமல் அவதிப்பட்டு இருந்த சிறுவன் இந்திரன் "அம்மா- அப்பா" என்று முருகப்பெருமானுடைய அருளால் தாய் தந்தையை பார்த்து அழைக்கிறான்.
இந்த அதியசம் நடந்தது தைப்பூசம் திருநாள் அன்று தான். மேலும், முருகப்பெருமானை பிடிவாத கடவுள். அதைத்தான் அவர் பக்தரிடமும் எதிர்பார்க்கிறார். எவர் ஒருவர் மிகப் பிடிவாதமாக முருகப்பெருமான் நான் கேட்டதை செய்தே தீருவார் என்ற முழு நம்பிக்கையோடு வேண்டுதலை வைக்கிறார்களோ, அவர்களுக்கு முருகப்பெருமான் இல்லை என்று சொல்லாமல் கேட்ட வரத்தை கொடுப்பார்.
ஆக, தைப்பூசத் திருநாள் அன்று நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கின்ற இன்னல்கள் விலக முருகப்பெருமானை நம்பிக்கையோடும் பிடிவாதத்தோடும் வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் நன்மை நடக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |