செவ்வாய்கிழமையில் வரும் பிரதோஷம் - மிகவும் சிறப்பு வாய்ந்தது ஏன்?
செவ்வாய் கிழமையில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரதோஷம்
இந்த மார்ச் மாத பிரதோஷ விரதம் செவ்வாய்கிழமை வருவதால் பூம் பிரதோஷ விரதம் என அழைக்கப்படுகிறது. மார்ச்-11 அன்று காலை 08:14 மணிக்கு தொடங்கி, மார்ச்-12 அன்று காலை 09:12 மணிக்கு முடிவடைகிறது. இதில் சிவனை நல்ல நேரமான மாலை 06.27 மணி முதல் 08.53 மணி வரை வழிபடலாம்.
குறிப்பாக இந்த பிரதோஷம் செவ்வாய் கிழமையில் வருவதால் ருணவிமோசன பிரதோஷமாக கருதப்படுகிறது. எந்த ராசி, நட்சத்திரத்தை உடையவரக இருந்தாலும், ஒரு செவ்வாய் பிரதோஷமாவது வைதீஸ்வரன் கோவில் சென்று சித்தாமிர்த தீர்த்ததில் பிரதோஷ நேரத்திலே குளித்து விட்டு வைத்தியநாதனை வழிபட்டால் அவர்களுக்கு வரும் ருணமும், நோய்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
பகைவர்களால் தொல்லை முதலியவை நீங்கும் என்பது நம்பிக்கை. இந்த தினத்தில் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை வழிபட்டால் தீராத கடன் தீரும். செவ்வாய் கிழமையில் கடன் வாங்கவே கூடாது. அதற்கு பதிலாக செவ்வாய்கிழமைகளில் கடன் அடைக்கலாம்.
என்ன சிறப்புகள்?
செவ்வாய் திசை நடப்பவர்கள், செவ்வாயை லக்னாதிபதியாக கொண்டவர்கள் செவ்வாய் அன்று வரும் பிரதோசத்திற்கு செல்ல வேண்டும். பித்ரு தோஷம் நீங்கும். ரத்ததானம், அன்னதானம், பூஜைகளுக்காக மலர் தானம் போன்றவை செய்வது நல்லது. பிரதோஷம் விரதம் ஏற்பவர்கள், அதிகாலையில் எழுந்து நீராடி நித்திய கடன்களை முடிக்க வேண்டும்.
மாலையில் கோயில் சென்று, சிவதரிசனம் செய்து, நந்திக்கு பச்சரிசி வெல்லம் படைத்து, நெய்தீபம் ஏற்றி வணங்கி வர வேண்டும். மேலும், இந்த நாளில் சிவபுராணம், நீலகண்டப் பதிகம், கோளறு பதிகம், திருக்கடவூர், திருப்பாசூர் பதிகங்கள் போன்றவற்றைப் பாராயணம் செய்வது நல்ல பலனைத் தரும்.
சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்தம் மற்றும் வில்வ இலை, தும்பைப் பூ மாலை, கறந்த பால் கொண்டு அபிஷேகம் செய்து பூஜித்தால் உத்தியோகத்தில் உயர்வு ஏற்படும், வருமானம் அதிகரிக்கும். ஏழு ஜென்மங்களில் உண்டான தோஷமும் நீங்கும் என்று புராணங்கள் கூறுகின்றன.