பெருமாள் பக்தரா நீங்கள்? இதோ உங்களுக்கான அற்புத வாய்ப்பு
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு சிறப்புகள் கொண்டது. அதில் புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டிற்கு மிக சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். இந்த மாதத்தில் பல்வேறு வைணவ திருத்தலங்களில் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறும்.
மேலும் பலருக்கும் நம்முடைய தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான வைணவ திருத்தலங்களுக்கு சென்று பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அந்த ஆசையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை ஒரு அற்புத வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறது.
தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை ஒவ்வொரு வருடமும் பக்தர்களுக்காக கட்டணமில்லாத ஆன்மீக பயணம் அழைத்து செல்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை திருச்சி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள முக்கிய வைணவ திருக்கோயில்களுக்கு கட்டணமில்லாத ஆன்மீகப் பயணம் அழைத்து செல்ல இருக்கிறார்கள்.
இந்த பயணமானது நான்கு கட்டங்களாக அதாவது 20.09.2025, 27.09.2025, 04.10.2025, 11.10.2025 ஆகிய நாட்களில் அந்தந்த மாவட்டங்களில் இருந்து தொடங்கப்பட உள்ளன. இந்த கட்டணம் இல்லாத ஆன்மீகப் பயணம் ஆனது மூத்த குடிமக்களான 60 வயதுக்கு மேல் 70 வயது உள்ளவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த பயணத்தில் கலந்து கொள்ள வருட வருமானம் 2 லட்சத்திற்கும் கீழ் இருப்பதற்கான சான்றுகளை வட்டாட்சியரிடம் இருந்து பெற்று இணைப்பதும் அவசியம். கூடுதலாக அவர்களுடைய ஆரோக்கிய நலச் சான்றுகளும் சமர்ப்பித்து இந்த பயணத்தில் கலந்து கொள்ளலாம்.
இதை விண்ணப்பிக்க ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் சென்றும் அல்லது www.hrce.tn.gov.in என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.
இதைத் தொடர்பான சந்தேகங்கள் இருந்தால் 1800 425 1757 கட்டணமில்லாத இந்த எண்ணிற்கும் அழைத்து உங்கள் சந்தேகங்களை தீர்த்து இந்த அற்புதமான ஆன்மீகப் பயணத்தை பயன்படுத்தி பெருமாளின் அருளைப் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







