2026 அன்னாபிஷேகம்: ஐப்பசி மாதம் பௌர்ணமி எப்பொழுது? அந்த தினத்தை தவறவிடாதீர்கள்
ஆன்மீக ரீதியாக ஐப்பசி மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த மாதத்தில் பல உற்சவங்கள் இருந்தாலும் ஐப்பசி மாத பௌர்ணமி நாளில் சிவ ஆலயங்களில் நடக்கக்கூடிய அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு மிக்கதாக பார்க்கப்படுகிறது.
பொதுவாக, ஒவ்வொரு மாத பௌர்ணமி தினம் அன்று ஒவ்வொரு பொருளைக் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமியில் அபிஷேக பிரியராக இருக்கக்கூடிய சிவபெருமானுடைய லிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
"சோறு கண்ட இடம் சொர்க்கம்" என்ற ஒரு சொல் வழக்கு இருக்கிறது. இதனுடைய பொருள் என்னவென்றால் ஐப்பசி அன்னாபிஷேகம் அன்று சிவபெருமானுக்கு சாற்றக்கூடிய ஒவ்வொரு அன்னப்பருக்கையிலும் ஒரு சிவலிங்கம் இருப்பதாக ஐதீகம்.

அதனால் தான் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேகம் 2026 :
ஐப்பசி அன்னாபிஷேகம் 2026 தேதி அக்டோபர் 25 ஞாயிறு
பெளர்ணமி திதி துவக்கம் அக்டோபர் 25 காலை 11.31
பெளர்ணமி திதி நிறைவு அக்டோபர் 26 காலை 10.16
கோவில்களில் அன்னாபிஷேகம் :
இந்த அன்னாபிஷேகம் நடக்கும் நேரம் ஒவ்வொரு ஆலயங்களிலும் மாறுபடலாம். சில கோவில்களில் காலை நேரங்களிலும், சில ஆலயங்களில் மாலை நேரத்திலும் நடத்தப்படலாம். மேலும், ஐப்பசி மாதம் பௌர்ணமி அன்று முதலில் சிவபெருமானுக்கு வழக்கமாக செய்யப்படும் பால், தயிர், தேன், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்வார்கள்.
அதன் பிறகு புதிதாக வடித்து ஆற வைத்த சாதத்தை கொண்டு லிங்கு திருமேனி முழுவதுமாக மூடுவார்கள். சில ஆலயங்களில் அந்த அன்னத்திற்கு மேலாக காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை கொண்டும் அலங்காரம் செய்வது உண்டு.

பிறகு மகா தீபாரதனை காட்டப்படும். அதன்பிறகு லிங்க திருமேனியில் சாற்றப்பட்ட அன்னப்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. அன்றைய தினம் கோவில்களுக்கு சென்று வழிபட முடியவில்லை என்று வருந்துபவர்கள் வீடுகளிலேயே விளக்கேற்றி சிவபெருமானுக்கு வடித்த சாதத்துடன் சிறிது நெய் கலந்து வைத்து தயிர் சாதம் படைத்தும் வழிபாடு செய்யலாம்.
வீடுகளில் லிங்கம் வைத்திருப்பவர்கள் சுத்தமான தண்ணீரால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்துவிட்டு பிறகு பச்சரிசியில் குலைவாக வடித்து ஆற வைத்த சாதத்தால் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபடலாம்.
பக்தர்கள் செய்ய வேண்டியவை:
இந்த தினத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவபெருமான் ஆலயத்திற்கு சென்று அன்னாபிஷேகம் தரிசனம் செய்யலாம். இதனால் கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசனம் செய்த முழு பலன் கிடைக்கிறது. அன்னாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை கட்டாயமாக நாம் வாங்கிக் கொடுக்கலாம்.
பசியால் வாடுகின்ற யாராவது இரண்டு நபருக்கும் நம்மால் முடிந்த எண்ணிக்கையில் அன்னதானம் வழங்கலாம். உணவை வீணாக்காமல் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த அன்னப்பிரசாதத்தை பக்தியுடன் சாப்பிட்டு வர கட்டாயம் சிவபெருமானுடைய அருளால் நமக்கு வாழ்க்கையில் நன்மைகள் கிடைக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |