நாளை சனி பிரதோஷ விரதம்.. சனியின் தாக்கம் குறைய இதை செய்ய மறக்காதீர்கள்
2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று சனி பிரதோஷம் விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அதாவது திரயோதசி திதியும் சனிக்கிழமையும் இணையும் மிகவும் விசேஷமான நாளாக இருக்கிறது. இந்த நாளில் நாம் சனி பகவானுடைய அருளை பெற மிக சிறந்த நாளாகும்.
இந்த நாளில் சனி திசை நடப்பவர்கள் ஏழரை சனி போன்ற காலகட்டங்களில் சனி பகவானால் கஷ்டப்படுபவர்கள் விரதம் இருந்து வழிபாடு செய்யும்பொழுது நிச்சயமாக கர்ம வினையானது குறைந்து மன அமைதி கிடைக்கும். மேலும், இந்த நாள் சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு மிக உகந்த நாளாகவும் இருக்கிறது.
சிவபெருமான் ஒரு மனிதனுக்கு பற்றற்ற வாழ்க்கையை மற்றும் உண்மை நிலையை உணர்த்தக் கூடியவர். சனிபகவான் நம்முடைய கர்ம வினைகளை புரிய வைத்து நமக்கான வாழ்க்கை பாடத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுக் கொடுக்கக்கூடியவர்.

ஆக இவர்கள் இருவருக்கும் உகந்த மற்றும் அற்புதமான நாளான சனி பிரதோஷத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்யும் பொழுது நிச்சயம் நம்முடைய கர்ம வினையானது குறைந்து அமைதியான வாழ்க்கை கிடைக்கும்.
பொதுவாக நாம் விரதம் மேற்கொள்வது என்பது நமக்கு ஏதேனும் ஒரு வேண்டுதல் வைத்து கேட்கக்கூடிய வழிபாடாக இருக்கும். ஆனால் சனி பிரதோஷ விரதம் அன்று நம்முடைய கர்ம வினைகளை போக்குவதற்காக நாம் செய்யக்கூடிய ஒரு வழிபாடாக இருக்கிறது.
மனிதனுடைய கர்ம வினை ஆனது இந்த பிறவியில் மட்டுமல்லாமல் முற்பிறவியில் இருந்தும் அவர்களை துரத்தக்கூடியது. அதிலிருந்து விடுபட்டு நம்முடைய வாழ்க்கை வளமாகவும் அமைதியாகவும் இருப்பதற்கு சிவபெருமானுடைய அருளும் சனி பகவானுடைய அருளும் நமக்கு கட்டாயம் தேவை.
அப்பொழுதுதான் நிலையான வேலை நல்ல திருமண வாழ்க்கை போன்ற ஒரு மகிழ்ச்சியான சூழல் நமக்கு கிடைக்கும்.

விரதம் இருக்கும் முறை:
சனிபகவான் என்றாலே எளிமையானவர். ஆக இந்த நாளில் நாம் எளிமையாக இருப்பதோடு அசைவ உணவுகளை எடுத்துக் கொள்ளாமலும் , கோபமாக மற்றும் கடினமான வார்த்தைகள் மற்றும் அகங்காரம் கொண்டு இல்லாமல் கட்டாயம் இருக்க வேண்டும்.
அதோடு சனி பிரதோஷ நாளில் நாம் எள் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தல் மிக சிறந்த பலனை கொடுக்கும். அதைப் போல் சிவபெருமானுக்கு நாளை பால் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடும் பொழுதும் நிச்சயம் நமக்கு நல்ல பலன் உண்டு.
அதேபோல் நாளை முடிந்தவர்கள் கருப்பு நிற துணிகள், செருப்பு, இரும்பு தொடர்பான விஷயங்கள் உணவு போன்ற ஏழை எளியவர்களுக்கு வயதானவர்களுக்கு நாம் தானம் செய்யும் பொழுது சனி பகவான் மனம் குளிர்ந்து நமக்கு நன்மையை அளிக்கிறார். அதேபோல் ஆதரவற்ற விலங்குகளுக்கும் உணவு வழங்கும் பொழுது சனி பகவான் மனம் குளிர்ந்து நமக்கு ஆசி வழங்குகிறார்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |