2026: நாளை பங்குனி உத்திரம் விரதம் இருப்பவர்கள் என்ன செய்யவேண்டும்? செய்யக்கூடாது?
முருகப்பெருமானின் பரிபூரண அருளைப் பெறுவதற்கு எல்லா நாளும் உகந்த நாள் என்றாலும் மிகவும் முக்கியமான நாளாக பங்குனி உத்திரம் இருக்கிறது. அன்றைய நாளில் எவர் ஒருவர் மனதார இறைவனை நினைத்து விரதம் இருந்து வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு வாழ்க்கையில் சந்திக்கின்ற தடைகள் யாவும் நீங்கும்.
குறிப்பாக திருமண தடை இருந்தால் அவை நீங்குகிறது. இந்த நாளில் ஏராளமான முருக பக்தர்கள் விரதம் இருந்து தங்களுடைய பிரார்த்தனையை முன் வைப்பார்கள். அப்படியாக 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி புதன் கிழமை பங்குனி உத்திரம் பிறக்க இருக்கின்றது. அன்றைய நாளில் விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை பற்றி பார்ப்போம்.

விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டியவை:
பல பக்தர்கள் விரதம் என்பது வெறும் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமே ஆகும் என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் விரதம் என்பது நம்முடைய நாவையும் மனதையும் அடக்கி இறைவன் மீது மனதை செலுத்துவதின் நோக்கமாகும்.
தேவை இல்லாத எண்ணங்களை விடுத்து, தூய்மையான மற்றும் சாதுவான உணவுகளை எடுத்துக்கொண்டு இறைவன் மீது மனதை செலுத்துவது மட்டுமே விரதம் என்ற கணக்குகளில் வரும்.
அப்படியாக, பங்குனி உத்திரம் விரதம் இருப்பவர்கள் மூன்று நேரமும் உணவை தவிர்ப்பது சிறந்தது என்றாலும் பலராலும் ஆரோக்கிய ரீதியாக உணவுகளை கட்டுப்paatirkul வைத்துக் கொள்ள முடியாது. அவர்கள் கட்டாயம் உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதில் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது.

பங்குனி உத்திரம் நாளில் ஒருவருக்கு உணவுகளை தானம் வழங்குவது என்பது மிகச் சிறந்த பலனை கொடுக்கும். பங்குனி உத்திரம் அன்று வீடுகளில் விரதம் இருந்தாலும் நிச்சயம் அன்றைய நாளில் கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
பங்குனி உத்திரம் முருகப்பெருமானுக்கு மிகவும் உகந்த நாள் என்பதால் அன்றைய தினம் முருகப்பெருமானுக்கு செவ்வரளி மலர்களால் அலங்காரம் செய்து பால், பழம் தேன், தினை மாவு அல்லது ஏதேனும் இனிப்புகளை நெய்வேத்தியமாக படைத்து வழிபாடு செய்வது நிச்சயம் நல்ல பலனை கொடுக்கும்.
முடியாதவர்கள் வெற்றிலை பாக்கு இரண்டு வாழைப்பழம் வைத்து வழிபாடு செய்யலாம். முடிந்தவரை பங்குனி உத்திர நாளில் யாரிடமும் அதிக அளவில் கோபம் கொள்ளாமல் தீய சொற்களை பயன்படுத்தாமல் இறைவனை மட்டுமே நினைத்து இறைவனுடைய பெயரை மட்டுமே உச்சரித்து வழிபாடு செய்ய வேண்டும்.
பங்குனி உத்திரம் என்பது முருகப்பெருமானுக்கு மட்டுமல்ல சிவன்- பார்வதி, ராமர்- சீதை, ஆண்டாள்- ரங்கநாதர் ஆகிய தெய்வங்களுக்கும் மிகவும் உகந்த நாள் என்பதால் அந்த தெய்வங்களுடைய படத்தை நம் வீடுகளில் வைத்து வழிபாடு செய்யலாம்.
பங்குனி உத்திர நாளில் பல கோவில்களில் முருகப்பெருமானுடைய திருக்கல்யாண வைபவம் நடக்கும். அந்த வைபவத்தில் நாம் கலந்து கொள்ளும் பொழுது முருகப்பெருமான் உடைய அருளால் நம்முடைய வாழ்க்கை மேன்மை அடையும். அதோடு திருமண தடைகள் யாவும் விலகும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |