58 அடி உயர சிவன் உள்ள ஆழிமலா மகாதேவன் கோவில்
பதினாறாம் நூற்றாண்டை சேர்ந்த ஆழிமலா மகாதேவன் கோவில் கேரளாவில் கோவளம் கடற்கரையில் உள்ளது. ஆழி என்றால் கடல், மலா என்றால் மலை. கடலும் மலையும் சேர்ந்த இடம் ஆழி மலா கடற்கரை ஆகும். மலையாளம் என்ற சொல்லும் இதே பொருளைத்தான் தருகிறது மலையும் ஆழமும் (கடலும்) சேர்ந்த இடம் மலையாள தேசம்.
சூரிய உதயமும் அஸ்தமனமும்
ஆழிமலை கடற்கரையில் சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் காணலாம். காலையில் கடலிலிருந்து சூரியன் உதயமாகிப் பின் மாலையில் மேற்கு கடலுக்குள் சூரியன் அஸ்தமனம் ஆவதை இங்குப் பார்க்கலாம்.
ஆழிமலை கடற்கரையில் தண்ணீர் நீல நிறமாகவும் கடற்கரை மணல் தங்க நிறமாகவும் தோன்றும். இந்தியாவில் இருக்கும் மிக அழகான கடற்கரைகளில் ஒன்று ஆழிமலா கடற்கரை ஆகும். சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்தின் போது மிகப்பெரிய நெருப்புப் பந்து கடலைச் சந்திக்கும் வேளையில் முழுக் கடலும் வானமும் கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும்.
கோயில் அமைவிடம்
கேரளாவில் கோட்டுக்கல் பஞ்சாயத்தில் விழிஞ்சியம் என்ற ஊரில் உள்ள புலிங்குடியில் ஆழிமலை மகாதேவர் கோவில் உள்ளது. கேரளாவில் சிவன் கோவில்களை மகாதேவர் கோவில் என்று அழைப்பார்கள். முற்காலத்தில் இப்பகுதியில் சிறுத்தைகள் அதிகமாகக் காணப்பட்டதால் புலிங்குடி என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர்.
புலிங்குடி சிவன் கோவில் தமிழ்நாட்டுக் கோவில் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இதன் வெளிப்புறச் சுற்றுச் சுவர் மற்றும் வாயில் கோபுரம் உள்ளது. கோவிலுக்குள் விநாயகர், ஐயப்பன், விஷ்ணு, கார்த்திகேயன், ஹனுமன் போன்ற தெய்வங்களின் வண்ணச் சிற்பங்கள் காணப்படுகின்றன. கோவிலின் உள்சுற்றுச்சுவரில் கண்ணைக் கவரும் அழகான சுவர் ஓவியங்கள் உள்ளன. கோவிலுக்கு வெளியே கங்காதேஸ்வரர் சிலை உள்ளது
கங்காதீஸ்வரர் சிலை
ஆழி மலை மகாதேவர் கோயில் இருக்கும் கடற்கரையில் 18 ஆதி உயரப் பாறையின் மீது 58 அடி உயர கங்காதேஸ்வரர் சிலை உள்ளது. இச்.சிலை கிழக்கு நோக்கி காணப்படுகின்றது. சடாமுடி விரிந்த நிலையில் அதில் இடுப்பழகு கங்கையுடன் இச்சிலை செய்யப்பட்டுள்ளதால் கங்காதேஸ்வரர் சிலை என்று கங்கையின் பெயரும் சேர்த்து அழைக்கப்படுகின்றது.
சிலையின் தோற்றம்
பொதுவாக சிவமூர்த்தங்கள் யோக நிலையில் காணப்படும். ஆனால் இந்த மாபெரும் சிலை ஒரு காலை மடக்கி ஒரு காலை தரையில் வைத்த நிலையில் வானத்தை நோக்கி பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு கையில் சூலாயுதத்தை உறுதியாகப் பற்றி கொண்டிருக்கும் இச்சிவன் மறு கையால் தன் சடாமுடியை விரித்து விடுகிறார்.
பின் இடது கையில் உடுக்கையை வைத்துள்ளார். முன் வலது கை வலது தொடையின் மீது உள்ளது. விரிந்த சடாமுடிக்குள் அழகான கங்காதேவி இருக்கிறார். சிவனது கழுத்திலும் மணிக்கட்டுகளிலும் ருத்ராட்ச மணிகள் மாலைகள் உள்ளன.
இடது கணுக்ககாலில் ஒரு தண்டை உள்ளது. சிவனின் கால் கைகளில் புடைத்து நிற்கும் நரம்புகளும் செதுக்கப்பட்ட நகங்களும் விடைத்துக் காணப்படும் கட்டுடம்பும் பார்ப்பவரை வியக்க வைக்கின்றது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு அதிகமாக இச்சிலையைக் கண்டு ரசிக்கலாம்.
சிலை செய்த விவரம்
கங்காதேஸ்வரர் சிலை கற்சிலை அல்ல. கான்கிரீட் சிலையாகும். 2014 ஆம் ஆண்டு சிலை செய்யும் பணி தொடங்கியது. ஆறு ஆண்டுகள் கழித்து 2020ல் சிலையின் திறப்பு விழா நடைபெற்றது. திருவனந்தபுரம் நுண் கலைக் கல்லூரியில் படித்த பி எஸ் தேவதத்தா என்ற இளம் சிற்பி இச்சிலையைச் செய்தார்.
18 அடி உயரப் பாறையின் மீதுள்ள 58 அடி உயரச் சிவன் சிலை பார்க்க பிரம்மாண்டமாக இருப்பதால் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகின்றனர். சுற்றிலும் கொந்தளிக்கும் கடலின் அலைகள் இச்சிலையின் மீது மோதி திரும்புகின்றன.
புராணக்கதை
ஒரு கோயில் பிரபலமாவதற்கு ஒரு கதை அவசியமாகும். பஞ்ச பாண்டவர் கதை ஒன்று இங்கு வழங்குகிறது. இங்கிருக்கும் மலைப் பாறைகளுக்கு இடையே அஞ்ஞாத வாசத்தின் போது பாண்டவர்கள் ஒளிந்து மறைந்து வாழ்ந்தனர். அப்போது ஒரு நாள் பாஞ்சாலி தனக்கு தண்ணீர் தாகம் எடுப்பதாக பீமதேவனிடம் கூறினாள்.
பீம சேனன் தன் முழங்காலால் ஒரு பாறையை முட்டித் துளையிட்டான். அதன் வழியே தண்ணீர் பெருகி வந்தது. இச் சுனை நீர் இங்கு தீர்த்தமாக பயன்படுகின்றது. ஆழி மலைக்குக் கிழக்கே குள்ளக்கடவு என்ற இடம் உள்ளது இங்கிருந்து கன்னியாகுமரி கடற்கரை தெரியும். குள்ளக் கடவு இருக்கும் ஓடையில் தண்ணீர் எப்போதும் ஓடிக் கொண்டே இருக்கும்.
கோடை காலத்தில் கூட வற்றிப் போகாது. இத் தண்ணீர் மிகத் தெளிவாகவும் தூய்மையாகவும் மிகுந்த சுவையுடையதாகவும் இருக்கிறது. நோய்களைக் குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாகவும் கருதப்படுகிறது. இதனைத் தீர்த்தமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். குள்ளக்கடவு தண்ணீரைக் கொண்டுதான் மகாதேவர் கோவிலில் அபிஷேகங்கள் நடத்தப்பட்டன
பூஜை நேரங்கள்
பொதுவாகக் கேரளக் கோவில்களில் மூன்று கால பூஜைகள் நடக்கும். இவற்றிற்கு உஷா பூஜை, உச்ச பூஜை, அத்தாழ பூஜை என்று பெயர். அவ்வேளையில் கோயில் முழுக்க எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டு கோவில் கோயில் வளாகம் ஜெகஜ்ஜோதியாகக் காட்சியளிக்கும்.
பிரதோஷ பூஜை
பிரதோஷ பூஜை என்பது மனிதர் தம் பாவங்களில் இருந்து விடுதலை பெற வேண்டி கலந்து கொள்ளும் பூஜையாகும். சூரிய அஸ்தமனத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்பு அந்திப் பொழுதில் இப்பூஜை தொடங்கும். அந்நேரம் சிவனும் பார்வதியும் மனமகிழ்ச்சியோடு ஆனந்த தாண்டவம் ஆடுவார்கள்.
அவ்வமயம் அவர்களிடம் என்ன கேட்டாலும் கொடுப்பார்கள். மாதத்திற்கு இரண்டு முறை பிரதோஷ வேளை வருவதால் அமாவாசைக்கு முதல் நாளும் பௌர்ணமிக்கு முதல் நாளும் பிரதோஷ பூஜை சிவன் கோவில்களில் நடைபெறும்.
பிரதோஷத்தின் போது அபிஷேகப் பிரியமான சிவபெருமானுக்கு பால், தயிர், சந்தனம், நெய், விபூதி எனப் பலவகை பொருட்களாலும் அபிஷேகங்கள் நடைபெறும். இங்கே தனி நபர் பெயரால் நடத்தப்படும் பிரதோஷ பூஜைக்கு 3001 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பாலாபிஷேகம் நீண்ட ஆயுளை தரும். நெய்யபிஷேகம் மோட்சத்தை தரும். சந்தன அபிஷேகம் செய்தால் செல்வம் பெருகும். மாலை மணி 4:30 முதல் 6:00 மணி வரை இப் பூஜை நடைபெறும்.
உமா மகேஸ்வரி பூஜை
ஆழிமலா சிவன் கோவிலில் உமா மகேஸ்வரி பூஜை செய்தால் இல்லறம் சிறக்கும். மகிழ்ச்சியான திருமண வாழ்க்கைக்கு செய்யப்படும் உமா - சிவன் தம்பதி பூஜையாகும். இப் பூஜைக்கு இக்கோவிலில் 1501 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.
தம்பதியருக்குத் திருமண வாழ்வில் ஒற்றுமை இல்லை என்றால் பிரச்சனைகளை சந்தித்துப் பிரிந்து வாழ்ந்தால், அந்நியோன்யம் இல்லையென்றால் இங்கு வந்து இப்பூஜை செய்து பயன் பெறலாம்.
திவச பூஜை
இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி அஆழி மலை சிவன் கோயிலில் திவச பூஜை செய்யலாம். இப் பூஜையை முழுக் காப்புடன் செய்யப்படுவதற்கு செய்வதற்கு 2001 ரூபாயும் முழுக் காப்பு இல்லாமல் செய்வதற்கு 1501 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.
இப் பூஜை நாள் முழுக்க நடைபெறும். பக்தர்களின் முன்னோர்கள் ஆத்மா சாந்தியடையவும் இவர்களின் இவ்வுலக வாழ்வு சிறப்படையவும் இப் பூஜை தொடர்ந்து நாள் முழுக்க நடத்தப்படுகின்றது. இப் பூஜையால் பூஜைக்குப் பணம் செலுத்தியவரின் ஆன்மா மற்றும் உடல் சுத்திகரிக்கப்படுகின்றது.
தினப்படி பூஜை
ஆழிமலை சிவன் அன்றாடம் பூசாரிகள் செய்யும் நிவேதனம், அபிஷேகம், அர்ச்சனை போன்றவற்றிற்கு ரூபாய் ஐந்து முதல் 1500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகின்றது.
ஆழிமலை சிவன் கோவிலுக்கு அதிகாலை சென்று சூரிய உதயத்தைப் பார்த்து ரசித்து கோவிலுக்குள் சென்று பூஜைகள் செய்து இறைவனை வணங்கி மீண்டும் மாலை வேளையில் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்து ரசித்த பின்பு வீடு திரும்புவது சாலச் சிறந்ததாகும்.
திருவிழாக்கள்
ஆழிமலா சிவன் கோயிலில் ஆண்டு தோறும் மகர மாதத்தில் (ஜனவரி 15- பிப்ரவரி 14) வருடாந்திரச் சிறப்பு வழிபாடு (வருஷாபிஷேகம்) நடக்கும். மகா சிவராத்திரி அன்று அதிக பக்தர்கள் இக்கோவிலில் கூடி விடிய விடிய பூஜைகளில் கலந்து கொள்வர். செவ்வாய்க்கிழமை தோறும் இங்கு விசேஷப் பூஜைகள் நடைபெறுகின்றன. பக்தர்கள் அதிகமாகக் கோவிலுக்கு வருகின்றனர்.
கோவில் நேரம்
ஆழிமலை மகாதேவன் கோவில் காலை 5:30 மணி முதல் 10:30 மணி வரையிலும் மாலையில் 4:30 முதல் 7:30 வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் தினமும் திறந்திருக்கும். கங்காதேஸ்வரர் சிலையை காலை ஐந்தரை முதல் மாலை ஏழரை வரை கண்டு ரசிக்கலாம். அதன் பின்பு கடற்கரையில் மக்களை இருக்க விடுவதில்லை.
சுற்றுலா பயணிகளைக் கவரும் கோயில்
கேரளாவில் அரபிக் கடலோரக் கடற்கரைகளில் ஆழி மலா மிகவும் அழகானது என்பதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். தமிழக பாணியில் உள்ள மகாதேவர் கோவிலுக்குள் போய் சிவனை வணங்கிப் பிரசாதங்களை கையோடு கொண்டு வந்து இப்பாறைகளில் அமர்ந்து அவற்றை உண்டு ருசித்தபடியே இயற்கை அழகைக் கண்டு ரசிக்கலாம்
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |