2025 மகா கந்த சஷ்டி விரதம்: 7 நாட்கள் 7 வகையான விரதங்கள் இருக்கும் முறை
முருக பக்தர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கக்கூடிய ஒரு முக்கியமான விரதங்களில் மகா கந்த சஷ்டி விரதமும் ஒன்று. இந்த விரதமானது ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதியில் துவங்கி சப்தமி வரையிலான ஏழு நாட்கள் பக்தர்கள் விரதமிருந்து முருகப் பெருமானை வழிபாடு செய்வார்கள்.
அப்படியாக விரதம் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் விரதம் இருக்கும் பொழுது நாம் எந்த விஷயங்கள் செய்யக்கூடாது என்று பார்ப்போம். 2025 ஆம் ஆண்டிற்கான மகா கந்த சஷ்டி விரதம் ஆனது அக்டோபர் 22 ஆம் தேதி முதல் துவங்கி அக்டோபர் 28ஆம் தேதி திருக்கல்யாணத்துடன் முடிவடைகிறது.
48 நாட்கள் என சிலர் கடந்த மாதமே விரதம் இருக்கத் தொடங்கி இருப்பார்கள். ஒரு சிலர் 21 நாட்கள் விரதம் இருப்பார்கள். இத்தனை நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் ஏழு நாட்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வார்கள. அவ்வாறு விரதம் இருப்பவர்கள் அக்டோபர் 22 முதல் விரதம் இருக்க துவங்க வேண்டும். ஏழு நாட்கள் விரதங்களும் ஏழு வகையான விரதங்களாக இருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.
பட்டினி விரதம்:
இந்த விரதமானது மிகவும் கடினமான விரதமாகும். மூன்று வேளையும் உணவு எடுத்துக் கொள்ளாமல் மிகவும் எளிமையான உணவை மட்டும் எடுத்துக்கொண்டு இருக்கக்கூடிய ஒரு விரதம் ஆகும்.
பால் விரதம்:
இந்த விரதம் ஆனது தினமும் சுவாமிக்கு அபிஷேகம் செய்யக்கூடிய பாலை மட்டும் கொஞ்சமாக எடுத்துக் கொண்டு இருக்கக்கூடிய விரதமாகும்.
பால், பழங்கள் விரதம்:
மூன்று வேளையும் உணவுகள் எடுப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு பால் பழங்களை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். அதாவது காலை மதியம் இரவு என மூன்று வேளையும் ஏதேனும் ஒரு பழங்கள் வகையுடன் ஒரு கப் பால் மட்டும் எடுத்துக் கொள்வார்கள்.
இளநீர் விரதம்:
மிகக் கடினமான விரதங்களில் இந்த இளநீர் விரதமும் ஒன்று. ஒரு நாளைக்கு ஒரு இளநீர் மட்டும் குடித்துக்கொண்டு விரதம் இருப்பார்கள். இளநீரில் இருக்கக்கூடிய வழுக்கைகளை எடுத்து சாப்பிடலாம்
மிளகு விரதம்:
விரதங்களில் அடுத்தபடியாக மிகவும் கடுமையாக இருக்கக்கூடிய விரதம் இந்த மிளகு விரதம் ஆகும். இந்த விரதமானது பால் பழம் என எந்த உணவு வகைகளும் எடுத்துக் கொள்ளாமல் வெறும் மிளகு மட்டும் உட்கொள்வது தான் இந்த விரதம். முதல் நாள் ஒரு மிளகு எடுத்துக் கொண்டோம் என்றால் ஒவ்வொரு நாளும் மிளகு அதிகரித்து ஏழாவது நாளில் ஏழு மிளகு உட்கொண்டு விரதத்தை முடிப்பார்கள்.
உப்பில்லாமல் உண்பது:
விரதம் கடைபிடிப்பவர்கள் ஏழு நாட்களும் உப்பு இல்லாமல் உணவுகளை எடுத்துக்கொள்வார்கள். அதாவது உப்பு இல்லாமல் தயிர் சாதம், பால் சாதம் என்ற வகையில் ஒரு வேளை மட்டுமே உண்பார்கள்.
காய்கறி விரதம்:
வெறும் காய்கறிகளை மட்டும் எடுத்துக்கொண்டு இருக்கக்கூடிய விரதம் ஆகும். இந்த விரதத்தில் அரிசி, பருப்பு, போன்றவை முற்றிலுமாக தவிர்த்து காய்கறி கீரை வகைகளை மட்டும் எடுத்துக்கொள்வார்கள்.
நாம் விரதம் இருப்பது நம்முடைய ஆன்மாவை சுத்தப்படுத்தக்கூடிய மற்றும் இறைவனை நெருங்ககூடிய ஒரு அற்புதமான விஷயமாக இருந்தாலும் நம்முடைய உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நாம் விரதம் கடைபிடிக்க வேண்டும்.
உடல் நிலை நல்ல முறையில் இருந்தால் தான் இறைவனை சிந்திக்கவும் நினைத்தவாறு பிரார்த்தனை செய்து கொள்ளவும் முடியும். ஆக இறைவழிபாடு விரதம் எவ்வளவு அவசியமோ உடல் ஆரோக்கியமும் அவசியம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







