மகாலட்சுமியின் அருள் பெற வீடுகளில் இந்த 8 விஷயங்கள் கட்டாயம் இருக்க வேண்டுமாம்
நம்முடைய வீடுகளில் கட்டாயமாக லட்சுமி தேவியின் அருள் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் குடும்பத்தில் நிம்மதியும் பொருளாதாரத்தில் சிக்கல்களும் இல்லாத ஒரு சந்தோஷமான வாழ்க்கையை வாழ முடியும்.
அப்படியாக மகாலட்சுமியின் அருள் எல்லோருக்கும் அவ்வளவு எளிதாக கிடைப்பதில்லை. ஆனால் எவர் ஒருவருக்கு மகாலட்சுமியின் கடைக்கண் பார்வை கிடைக்கிறதோ அவர்கள் வாழ்க்கையில் மிக உயர்ந்த நிலைக்கு சென்று விடுகிறார்கள். அந்த வகையில் நாமும் நம் வாழ்க்கையில் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை பற்றி பார்ப்போம்.
நம்முடைய வீடுகளில் தினமும் விளக்கேற்றுவதால் மற்றும் வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் செய்வதால் மட்டுமே மகாலட்சுமியின் அருளை நாம் பெற்ற விட முடியாது. மகாலட்சுமி தேவியின் அருள் நமக்கு கிடைக்க வேண்டும் என்றால் நம்முடைய வீடுகளில் கட்டாயம் இந்த 8 விஷயங்கள் இருக்க வேண்டும்.

1. மனிதர்களைப் போலவே விலங்குகளும் உயிர் உள்ள ஒரு ஜீவன் தான். ஆக நாம் தினமும் ஒரு வாயில்லாத ஜீவன்களுக்கு உணவு அளிக்க வேண்டும். அவை எறும்பாக இருக்கலாம், காகமாக இருக்கலாம் அல்லது கோழியாக, நாயாக பசுவாக இருக்கலாம். நம்முடைய வசதிக்கு ஏற்ப கட்டாயம் நாம் உணவு அளித்து அவர்களுடைய பசியை ஆற்ற வேண்டும்.
2. வீட்டின் பூஜை அறையில் கட்டாயம் சங்கு மற்றும் தாமரை பூ வைத்து வழிபாடு செய்வது என்பது மகாலட்சுமியின் அருளை மிக எளிதாக பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. அதேபோல் மகாலட்சுமிக்கு பிடித்தமான துளசி இலைகளை கொண்டு நாம் வழிபாடு செய்ய வேண்டும்.
3. பொதுவாக இந்து மதத்தில் நெல்லி மரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதாக சொல்கிறார்கள். ஆதலால் வீடுகளில் வெளியே நெல்லிக்காயின் மரத்தை வளர்க்கலாம். அப்படி முடியாதவர்கள் மருதாணி செடியை வளர்க்கலாம்.
மருதாணியை அவ்வப்போது கைகளில் வைத்துக் கொள்ளலாம். மகாலட்சுமி தேவிக்கு மருதாணி படைத்து வழிபாடு செய்யலாம். இவையெல்லாம் மகாலட்சுமி தேவியின் மனதை குளிர வைத்து அவளுடைய அருளை நமக்கு பெற்றுக் கொடுக்கிறது. அதோடு மருதாணியை நாம் பிற பெண்களுக்கு தானமாக கொடுப்பதும் நம்முடைய குடும்பத்தில் செல்வ செழிப்பை உண்டாக்கும்.

4. மிக முக்கியமாக நம்முடைய வீட்டின் நுழைவாயிலை நாம் எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடிந்தவர்கள் சாணம் தெளித்து தினமும் காலையில் கோலமிடலாம். முடியாதவர்கள் வெள்ளி செவ்வாயில் மட்டுமாவது இதை அவர்கள் செய்யலாம்.
அதேபோல் நிலை வாசலில் மஞ்சள் குங்குமம் வைத்து அதற்கு நாம் எப்பொழுதும் சாம்பிராணி தூபம் காண்பித்து அவசியம் ஆகும். காரணம் நுழைவாயில் வழியாகத்தான் அனைத்து தெய்வங்களும் நம்முடைய வீட்டிற்குள் வருகை தருவதால் அதை நாம் எப்பொழுதும் பிரகாசமாகவும் தெய்வீக தன்மையோடும் வைத்திருப்பது நம் குடும்பத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்.
5. தினமும் எழுந்தவுடன் வீடுகளில் நம்முடைய உள்ளங்கைகளை பார்ப்பது பசு அல்லது கோவிலின் கோபுரங்கள் அல்லது இறைவனுடைய உருவப்படங்களை பார்த்து எழும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கிறது.
6. செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாக பஞ்சமுக விளக்கேற்ற வேண்டும். அதாவது ஒரு குத்துவிளக்கில் 5 திரிகள் வைத்து விளக்கெண்ணெய் அல்லது நெய் ஊற்றி அந்த இரண்டு நாட்களில் மற்றும் ஆவது நாம் வீடுகளில் விளக்கேற்றும் பொழுது நம்முடைய வீடுகளில் சூழ்ந்துள்ள எப்பேர்ப்பட்ட எதிர்மறை ஆற்றல்களும் விலகி நம்முடைய வீடுகளில் லட்சுமி தேவியின் அருளை பெற வழி வகுக்கிறது.
7. அதே வேளையில் தினமும் மறவாமல் மாலையில் விளக்கேற்றி விட வேண்டும். அதோடு பிரம்ம முகூர்த்தத்திலும் விளக்கேற்றுவது மிகச் சிறந்த நன்மையை கொடுக்கும்.
8. இதை விட மிக முக்கியமானது வீட்டில் உள்ள பெண்களை அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அன்போடும் ஆதரவோடும் நடத்த வேண்டும். எந்த ஒரு குடும்பத்தில் பெண்கள் அழுது கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனையை மட்டுமே அவர்கள் சந்திப்பார்கள்.
ஆக பெண்களுடைய கடமையை எந்த ஒரு குடும்பத்தில் நிறைவேற்றி வாழ்கிறார்களோ அவர்களுடைய தலைமுறையும் நிறைவான வாழ்க்கையை பெறுவார்கள். இவ்வாறு சில விஷயங்கள் கடைபிடித்து நம்முடைய வாழ்க்கை முறையை நாம் வாழும் பொழுது நம் வாழ்க்கை மகாலட்சுமியின் அருளால் செல்வ செழிப்பை பெற்று வளமான வாழ்க்கை வாழ நல்ல வழி பிறக்கும்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |