ஆடி பெருக்கு 2025: அன்று நாம் கட்டாயம் செய்யவேண்டிய வழிபாட்டு முறை
ஆடி மாதத்தில் வரக்கூடிய ஆடி பெருக்கு மிகவும் விஷேசமான தினமாக பார்க்கப்படுகிறது. ஆடி பெருக்கு ஆடி மாதத்தில் 18வது நாள் கொண்டாடப்படுவது ஆகும். இந்த திருநாள் நிலத்திற்கும், பூமியை செழிக்க வைக்கும் நீர் நிலைகளுக்கும் நன்றி செலுத்தும் ஒரு புண்ணியமான நாளாகும்.
அப்படியாக, ஆடி பெருக்கு கொண்டாடுவதற்கான காரணமும் அன்று வழிபாடு செய்யும் முறைப் பற்றியும் பார்ப்போம்.
ஒரு முறை கங்கை நதி கிருஷ்ண பகவானிடம் சென்று தன்னுடைய பாவத்தை கரைக்க வேண்டும் அதற்கான வழி சொல்லுங்க என்று முறையிட்டது.
அதற்கு கிருஷ்ணர், காவேரி ஆற்றில் கலக்க சொன்னார். மேலும், காவேரி நதி கிருஷ்ண பகவானிடம் இருந்து பாவங்களை போக்கும் சக்தியைப் பெற்றது. அதைப்பெற்ற கொண்ட காவேரி நதியும் மிகுந்த மகிழ்ச்சியாக கிருஷ்ணர் இருக்கும் இடமான ஸ்ரீரங்கப்பட்டினம், சிவ சமுத்திரம், ஸ்ரீரங்கம் போன்ற இடங்களுக்கு சென்று ரங்கநாதரை வணங்கியது.
இந்த நிகழ்வைத்தான் நாம் ஆடி பெருக்காக கொண்டாடுகின்றோம். மேலும், இந்த ஆடி மாதத்தில் தென்மேற்கு பருவமழை அதிகமாக பெய்வதோடு, காவேரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் வரும். இந்த நேரத்தில் விவசாயிகள் தங்களின் விவசாயமும் குடும்பமும் செழிக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.
மேலும், ஆடிப்பெருக்கை பற்றி சிலப்பதிகாரத்திலும் சொல்லப்பட்டு இருக்கிறது. அதோடு, ஸ்ரீரங்கத்தில் ஆடிப்பெருக்கு அன்று ரங்கநாதர், அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். காவேரி ஆற்றுக்கு புடவை, கம்மல், கருப்பு மணி, தாலி கயிறு, வெற்றிலை, பாக்கு, பழங்கள் எல்லாம் வைத்து சீர் கொடுக்கும் வைபவம் நடக்கும்.
இந்த பழக்கம் இன்றளவும் தொடர்ந்து நடந்து வருவதை நாம் பார்க்கலாம். இதனால் காவிரி தாயை, ரங்கநாதரின் தங்கை என்றும் கூறுவார்கள். ஆடிப்பெருக்கு அன்று பெண்கள் புது தாலி கயிறு மாற்றி தங்களின் கணவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொள்வார்கள்.
புதிதாக திருமணமான பெண்களுக்கு தாலி பெருக்கி போடும் வைபவமும் இந்த நாளில் நடத்துவார்கள். அதோடு சிலர் திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, வணங்கி வழிபடுவார்கள்.
மிக முக்கியமாக இந்த ஆடிப்பெருக்கு அன்று நாம் காவேரி ஆற்றில் நீராடினால் நம்முடைய பாவங்கள் எல்லாம் விலகி நம்முடைய வாழ்க்கை மேன்மை அடையும் என்பது ஐதீகம். அதேப்போல், ஆடிப்பெருக்கு நாளில் நாம் வாங்கும் சொத்துக்களும் பலமடங்கு பெருகும் என்பது நம்பிக்கை.
ஆக, இவ்வளவு அற்புதமான ஆடிப்பெருக்கு நாளில் காவேரி கரைக்கு சென்று வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும் நம் வீட்டின் அருகில் இருக்கும் நீர் நிலைகளுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.
இந்த 2025 ஆம் ஆண்டு ஆடிப்பெருக்கு வருகின்ற ஆகஸ்ட் 03 அன்று வருகிறது. அன்றைய நாளில் நாம் தவறாமல் வழிபாடு மேற்கொண்டு இறைவனின் முழு அருளைப் பெறுவோம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







