சுமார் 1000 ஆண்டுகள் பழமையான முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோயில்
குன்றிருக்கும் இடமெல்லாம் முருகப்பெருமான் வீற்றிருப்பார். இதற்கேற்ப தமிழகத்தின் பல இடங்களிலும் உள்ள குன்றுகளில் முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி கோயில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ்கிறது. இந்த கோயிலின் வரலாற்றை கி.பி.1641-ம் ஆண்டு எழுதப்பட்ட திருநாயக்கர் காலத்து கல்வெட்டு மூலமாக தெரிந்துகொள்ள முடிகிறது.
அலகுமலை - பெயர்க்காரணம்:
அலகு என்பதற்கு தமிழில் மூக்கு என்பது பொருளாகும். இந்த கோயில் அமைந்துள்ள மலையானது மூக்கின் வடிவில் அமைந்துள்ளதால் அலகு மலை என அழைக்கப்படுகிறது.
தல அமைவிடம்:
திருப்பூருக்கு தென்கிழக்கில் தாராபுரம் சாலையில் 22 கிலோமீட்டர் தொலைவில் அலகுமலை கிராமம் அமைந்துள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த கிராமத்தில் அலகுமலை காணப்படுகிறது. இந்த மலையை சுற்றிலும் ஏழு மலைகள் காணப்படுகின்றன.
அவை பழனிமலை, மருதமலை, கதித்தமலை, சென்னிமலை, சிவன் மலை, வட்டமலை, ஊதியூர் மலை ஆகியனவாகும். இந்த ஏழு மலைகளுக்கு நடுவில் அலகுமலை அழகுற காட்சியளிக்கிறது.
தல அமைப்பு:
அலகுமலையின் அடிவாரத்தில் மயில் வாகன மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. எட்டு தூண்கள் கொண்ட மண்டபத்தை கடந்து சென்றால் இடதுபுறத்தில் பாதவிநாயகரின் அருளை பெறலாம். விநாயகரை வழிபட்ட பின்னர் வடக்கு நோக்கி அமைந்துள்ள படிகளில் ஏறிச்சென்றால் இடப்புறம் இடும்பன் சன்னதி அமைந்துள்ளது.
இடும்பன் சன்னதியைக் கடந்து மலையின் மேற்காக 300 படிகளை கடந்து சென்றால் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளையும் தரிசனம் செய்யலாம். அறுபடை வீடுகளில் முருகப்பெருமான் எந்தக்கோலத்தில் காட்சியளிக்கின்றாரோ, அதைப்போலவே இந்த சன்னதிகளிலும் காட்சி தருகிறார். இங்கு சண்முகருக்கும் ஒரு சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது.
மலை பாதையில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் நின்றபடி, ஒரே சமயத்தில் ஆறுபடை முருகனையும் மேலே ஏழாவது படைவீடாக அலகுமலை குமரனையும் கண்குளிர தரிசனம் செய்ய முடியும். அறுபடை வீடு சன்னதிகளின் அருகில் நவக்கிரக சன்னதியும் உள்ளது. இடும்பன் சன்னதி அருகில் குழந்தை குமார கோவில் அமைந்துள்ளது.
இங்கு அலகுமலை குமரன், பாலகனாக காட்சி அளிக்கின்றார். குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு, அதை நிறைவேற்றும் தெய்வமாக இந்த பாலமுருகன் திகழ்கிறார். பழனி மலையில் இருப்பது போல் ஆண்டி கோலத்தில், சிறிது குஞ்சம் போன்று முடியுடன் வலது கையில் தண்டாயுதத்தை தாங்கியபடி இறைவன் காட்சி தருகிறார். அலகுமலை கோயில் கிழக்கு மேற்காக அமைந்துள்ளது.
கிழக்கில் தாழ்ந்தும் மேற்கில் உயர்ந்தும் காணப்படுகிறது. கோயில் கருவறையில் முத்துகுமாரசாமி பாலதண்டாயுதபாணியாக, முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். பாலதண்டாயுதபாணியை காண கோயிலுக்குள் நுழையும் போது முதலில் இருப்பது கொடிமரம். கொடிமரத்திற்கு மேற்கு நோக்கி மயில் வாகனமும் அதற்கு அருகில் பலிபீடமும் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலின் தல விருட்சமாக வில்வ மரம் கோயிலின் இடப்புறம் அமைந்துள்ளது. கோயில் மகா மண்டபத்தின் உள்ளே வலது புறத்தில் கடந்த 18 ஆண்டுகளாக சிறப்பு சங்கடஹர சதுர்த்தி விழாக்காணும் ஆனந்த விநாயகரும், வலம்புரி விநாயகரும் அருள்பாலிக்கின்றனர்.
இடது புற மேடையில் வீரபாகு தேவரும், தெற்கு நோக்கிய தனி சன்னதியில் தேவியர் வள்ளி, தெய்வானையும் அருள்பாலிக்கிறார்கள். கர்ப்பக்கிரகத்தில் முருகன் ஆண்டி கோலத்தில் இருப்பதால் வள்ளி, தெய்வானை கோயில் தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டு நேரம்:
காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் கோயில் பக்தர்களுக்காக திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |