அசைவின்றி இருந்த நம்மாழ்வாரை காத்தருளிய குருகூர் திருத்தலம்

By Aishwarya Mar 09, 2025 07:26 AM GMT
Report

 தென் பாண்டி நாட்டில் திருச்செந்தூர் அருகே தாமிரபரணிக் கரையில் இருக்கும் ஆழ்வார்திருநகரி ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசத்தில் ஒன்றாகும். நம்மாழ்வார் அவதரித்த இத்தலம் நதிக்கரையில் இருக்கும் நவதிருப்பதிகளில் ஒன்றாக, வியாழனுக்குரிய தலமாக உள்ளது.

ஆதிநாதன் திருக்கோயில்:

மூலவர் கிழக்குப் பார்த்து நின்ற திருக்கோலத்தில் ஆதிநாதர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். ஆதியிலே தோன்றியவர் என்பதால் இத்திருநாமம். முதன்முதலாகப் பெருமாள் வாசம் செய்த தலம் என்பதால் ஆதிக்ஷேத்திரம் ஆயிற்று. ‘கூழ் குடித்தாலும் குருகூரில் வசித்து திருவடி சேர்’ என்றொரு பழமொழி உண்டு.

இந்த குருகூரின் மற்றொரு பெயர் ஆழ்வார் திருநகரி என்பதாகும். இது 108 திவ்ய தேசங்களில் ஒன்று. ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும்.

இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது.இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது.

அசைவின்றி இருந்த நம்மாழ்வாரை காத்தருளிய குருகூர் திருத்தலம் | Alwar Thirunagari Sri Adhinatha Alwar Temple

வராக க்ஷேத்திரம்:

இத்தலம் வராக க்ஷேத்திரமும் ஆகும். ஞானப்பிரான் சன்னதி முதல் பிரகாரத்தில் உள்ளது. ஆதிநாதவல்லி, குருகூர்வல்லி என்று இரு தாயார்கள் தனித் தனியான சன்னதிகளில் பெருமாள் சன்னதியின் இருபுறங்களிலும் குடியிருக்கிறார்கள்.

அருகில் உள்ள நவதிருப்பதித் தலங்களிலும் அந்தந்த ஊர்ப் பெயர் கொண்ட நாச்சியார்கள் இருக்கிறார்கள். சங்கு சக்கரத்துடன் கருடன்: கருடன் இங்கு வழக்கமான கூப்பிய நிலையில் இல்லாமல் அபயஹஸ்தம், நாகர், சங்கு, சக்கரத்துடன் இருக்கிறார்.

நகரின் பழைய பெயர் திருக்குருகூர். நம்மாழ்வார் தம் திருவாய்மொழியில் பல இறுதிப் பாசுரங்களில் ‘குறுகூர்ச் சடகோபன்’ என்றே தன் பெயரைக் குறிப்பிடுகிறார். திருப்புளியாழ்வார்: திருமால் பிரம்மனுக்குக் குருவாக வந்ததால் திருக்குருகூர் என்ற பெயர் பெற்றது.

இத்தலத்தின் இன்னொரு சிறப்பு திருப்புளியாழ்வார் என்றும், உறங்காப்புளி என்றும் அழைக்கப்படும் புளிய மரமாகும். இம்மரம் 5,000 ஆண்டு பழமையானது என்று கூறப்படுகிறது. இதன் இலைகள் மற்ற புளிய மர இலைகளைப் போல் இரவில் மூடாது.

ராகு- கேது தோஷத்திலிருந்து விடுபட இந்த பரிகார தலங்களுக்கு சென்று வழிபடுங்கள்

ராகு- கேது தோஷத்திலிருந்து விடுபட இந்த பரிகார தலங்களுக்கு சென்று வழிபடுங்கள்

இம்மரம் பூக்கும், காய்க்கும், ஆனால் பழுக்காது. நம்மாழ்வார் பிறந்தவுடன் எந்தவித அசைவும் இல்லாமல் இருந்தார். அவருடைய பெற்றோர் இத்தலத்துக்கு வந்து இறைவன் முன் அவரைத் தரையில் இட்டனர். உடனே அக்குழந்தை தவழ்ந்து சென்று அருகில் இருந்த இப்புளிய மரத்தின் பொந்தில் சென்று தியானத்தில் ஆழ்ந்தது.

16 ஆண்டுகளுக்குப் பின், அருகில் உள்ள திருக்கோளூரைச் சேர்ந்த பண்டிதர் ஒருவர் வடதிசை சென்றபோது, தென்திசையில் தெரிந்த தெய்வீக ஒளியைப் பின்பற்றி வந்து நம்மாழ்வாரை அடைந்தார்.

அசைவின்றி இருந்த நம்மாழ்வாரை காத்தருளிய குருகூர் திருத்தலம் | Alwar Thirunagari Sri Adhinatha Alwar Temple

நம்மாழ்வாருடன் மதுரகவி ஆழ்வார்:

புளியமரப் பொந்திலிருந்த பாலகனைப் பார்த்து அவர், “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எப்படி இருக்கும்?” என்று கேட்டார். அப்பாலகனும் கண் திறந்து, “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று கூறினார்.

அவர் கேட்டது - சடப்பொருளான உடம்பில் உயிர் சேர்ந்தால் என்னவாகும் என்பதாகும். உடம்பையே தானாக நினைத்து அதில் உழன்று கொண்டிருக்கும் என்று நம்மாழ்வார் கூறியவுடன், அந்தப் பண்டிதர் அவரது காலில் விழுந்து, அவரது சீடனாகி, அவரை மட்டுமே பாடி, மதுரகவி ஆழ்வார் என்ற பெயருடன் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவருமானார்.

பக்தர்களுக்காக பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எங்கு இருக்கிறது தெரியுமா?

பக்தர்களுக்காக பெருமாளே தர்ப்பணம் செய்யும் தலம் எங்கு இருக்கிறது தெரியுமா?

ஆதிசேஷனின் அவதாரம்:

ஆதிசேஷனே புளிய மரமாக வந்ததாகவும் கூறப்படுகிறது. ராமாவதாரத்தில் ராமர் இவ்வுலகை விட்டுச் செல்லும் இறுதி நேரத்தில் தனிமையில் இருக்க விரும்ப, இலக்குவன் காவலிருந்தான். அப்பொழுது வந்த துர்வாசரை ராமரைப் பார்க்க விடாமல் தடுக்க, அவர் புளிய மரமாகும் படி இலக்குவனைச் சபித்துவிடுகிறார்.

அதன்படி இலக்குவனாக வந்த ஆதிசேஷன் புளிய மரமாகித் திருக்குறுகூரில் நிற்க, பெருமாளே நம்மாழ்வாராக வந்து அதனடியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே கருடாழ்வார், சக்கரத்தாழ்வார், இளையாழ்வார் என்பதைப் போல் ‘திருப்புளியாழ்வார்’ என்று வைணவ மக்களால் இந்தப் புளிய மரம் கொண்டாடப் படுகிறது.

இந்தப் புளியமரத்தின் அடியிலேயே நம்மாழ்வாருக்கு 36 திவ்ய தேசத்துப் பெருமாள்களும் வந்து காட்சி அளித்ததாகவும், இங்கிருந்தே அவர்களைப் பாடியதாகவும் கூறப் படுகிறது. புளிய மரத்தின் அடியில் கட்டப்பட்டிருக்கும் சுவரின் நான்கு பக்கங்களிலும் 36 திவ்ய தேசப் பெருமாள்களின் சிற்பங்கள் உள்ளன.

தூய்மையான, அமைதியான திருக்கோயிலில் அர்ச்சகர் பாசுரம் பாட, இறைவனை வணங்குவதே ஆனந்தமாக இருந்தது. ஆதிநாதன் - பொலிந்து நின்ற பிரான்: இங்கே கோவிந்த விமானம் விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பெருமாள் அருள்பாலிக்கிறார்.

இவரது திருநாமம் ஆதிநாதன், பொலிந்து நின்ற பிரான் என்பதாகும். முதன் முதலில் பெருமாள் தோன்றி நின்ற தலம் என்பதால், ‘ஆதிநாதன்’ என்று அழைக்கப்பட்டார். ஆதிநாதவல்லி மற்றும் குருகூர்வல்லி என இரண்டு தாயார்கள் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலித்து வருகிறார்கள்.

அசைவின்றி இருந்த நம்மாழ்வாரை காத்தருளிய குருகூர் திருத்தலம் | Alwar Thirunagari Sri Adhinatha Alwar Temple

நம்மாழ்வார் அவதரித்த தலம்:

வைணவ சித்தாந்த வழிகாட்டிகளுள் ஒருவரான நம்மாழ்வார் அவதரித்த தலம் இது. நம்மாழ்வாரின் 11 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள இத்தலத்து இறைவனை, பிரம்ம தேவர், நம்மாழ்வார், மதுரகவிகள் ஆகியோர் தரிசித்து பேறு பெற்றுள்ளனர்.

இத்தலத்தின் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் மற்றும் தாமிரபரணி நதி ஆகியவை ஆகும். பன்னிரு ஆழ்வார்களால் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், ஆழ்வார் பெயராலேயே வழங்கப்பெறும் திருத்தலம் இது ஒன்றுதான் என்றால் அது மிகையாகாது.

குருகூர் - ஆதி ஷேத்திரம்: குருகு என்றால் ‘பறவை, சங்கு’ எனப் பல பொருள் உண்டு. இத்தலத்தில் உள்ள பெருமாளை, சங்கன் எனும் சங்குகளின் தலைவன் வழிபட்டதால் இத்தலம் ‘குருகூர்’ எனப் பெயர் பெற்றது.

பிரளய காலம் முடிந்த பின் தோன்றிய முதல் தலம் என்பதால் ‘ஆதி ஷேத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக இங்கு அவதரித்தமையால் இத்தலம் ‘சேஷ ஷேத்ரம்’ எனப்படுகிறது.

பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட வேண்டுமா? திருப்புவனம் சிவபெருமானை தரிசனம் செய்தால் போதும்

பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட வேண்டுமா? திருப்புவனம் சிவபெருமானை தரிசனம் செய்தால் போதும்

குருகாசேத்திரம்:

நான்முகனிடம் உயிர்களைப் படைக்கும் பணியினை பரந்தாமன் அளித்திருந்தார். இருப்பினும் பிரம்மனுக்கு அது தொடர்பாக சிறிது ஐயம் ஏற்பட்ட காலத்தில் எல்லாம் திருமாலின் உதவியை நாடினார்.

ஒருமுறை திருமாலைச் சந்திக்க எண்ணி 1000 வருடங்கள் கடும் தவம் புரிந்தார் பிரம்மதேவர். இதையடுத்து அவர் முன் விஷ்ணு தோன்றினார். பிரம்மாவின் வேண்டுகோளுக்கிணங்க அவரது படைப்புத் தொழிலுக்கு, எல்லா காலத்திலும் உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார்.

இவ்வாறு பிரம்மதேவருக்கு அருள்புரிவதற்காக அவதரித்த தலமே குருகாசேத்திரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் ஆகும். கோயில் அமைப்பு: திருக்கோவில் ராஜகோபுரம் மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்ற அமைப்புடன் அமைந்துள்ளது.

ஆதிநாதவல்லி, பரமபத நாதன், சக்கரத்தாழ்வார், தசாவதாரம், குருகூர் நாச்சியார், நம்மாழ்வார் ஆகிய சன்னதிகள் அமைந்துள்ளத் தலமாகும். கட்டிட அமைப்பால் வெவ்வேறு காலங்களில் விரிவு படுத்தப்பட்டிருந்தாலும், நம்மாழ்வார் காலத்திலேயே திருக்கோவில் பிரசித்தி பெற்றிருந்தாலும் விரிவு படுத்தல் வெவ்வேறு காலங்களில் நிகழ்ந்து உள்ளது.

அசைவின்றி இருந்த நம்மாழ்வாரை காத்தருளிய குருகூர் திருத்தலம் | Alwar Thirunagari Sri Adhinatha Alwar Temple

நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம்:

நம்மாழ்வார் உற்சவ விக்கிரகம் உலோகம் கொண்டு செய்யப்பட்டதில்லை. தாமிர பரணித் தண்ணீரினை காய்ச்சக் காய்ச்ச முதலில் உடையவர் விக்கிரகமும், பின்னர் நம்மாழ்வார் விக்கிரகமும் வெளிவந்துள்ளது.

நவதிருப்பதிகளில் குரு தலம்:

இத்தலத்தைச் சுற்றி 8 திருப்பதிகள் உள்ளன. இதனையும் சேர்த்து ‘நவதிருப்பதி’ எனப்படுகிறது. இந்த நவதிருப்பதிகளும் இப்போது நவக்கிரகங்களின் தலங்களாகக் கருதப்படுகின்றன. அதில் இத்தலம் குருவுக்குரியதாகும்.

உற்சவங்கள்:

உற்சவ காலங்களில் ஆழ்வார், திருமஞ்சன மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வதும், சேவாகாலம் நடைபெற்ற பின்னர் தைலக்காப்பு செய்யப்படுவதும் இங்கு மட்டுமே நடைபெறும் விசேஷ மாகும். மார்கழி திருவாதிரை அன்று ஆழ்வாருக்கும், ராமானுஜருக்கும் ஒரே ஆசனத்தில் திருமஞ்சனம் நடைபெறுவது கண்கொள்ளாக் காட்சியாகும்.

சித்திரையில் உத்திர நட்சத்திரத்தை இறுதியாகக் கொண்டு 10 நாள் பெருமாளுக்கும், வைகாசியில் விசாகம் இறுதி நாளாகக் கொண்டு 10 நாள் ஆழ்வாருக்கும் மகோற்சவங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

பூதம் கட்டிய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

பூதம் கட்டிய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

நவ கருட சேவை:

நம்மாழ்வார் வைகாசி விசாக நட்சத்திரத்தன்று அவதரித்தார்.ஆதலால் இத்தலத்தில் வைகாசி விசாகப் பெருந்திருவிழா மிகக் கோலாகலமாக நடைபெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறும் பெரும் திருவிழாக்களில், ஆழ்வார்திருநகரி வைகாசி விசாகப் பெருந்திருவிழா குறிப்பிடத்தக்கது. வைகாசி விசாகத்தை இறுதி நாளாக வைத்து, கோவிலில் கொடியேற்றப்படும்.

இந்த திருவிழாவின் 5-ம் நாள் உற்சவம் முக்கியத்துவம் பெற்றது. அன்றைய விழாவில் ஆழ்வார் திருநகரியைச் சுற்றியுள்ள 8 திருப்பதிகளில் இருந்தும் எம்பெருமாள்கள், பல்லக்கில் ஆழ்வார் திருநகரி வந்தடைவார்கள்.

ஆதிநாதர் கோவில் முற்றத்தில் நவ திருப்பதி பெருமாள்களுக்கும் திருமஞ்சனம், திருவாராதனை செய்யப்படும். இரவு 11 மணி அளவில் இறைவன் கருட வாகனத்தில் எழுந்தருளி நம்மாழ்வாருக்கு காட்சி தருவார்.

அமைவிடம்:

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரெயில் பாதையில், ஸ்ரீவைகுண்டம் ரெயில் நிலையத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்வார்திருநகரி அமைந்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இவ்வூருக்கு நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் அடிக்கடி செல்கின்றன.

ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.


+91 44 6634 5009
Direct
+91 91500 40056
WhatsApp
bakthi@ibctamil.com
Email US