260 கோடி வயதுடைய திருவண்ணாமலையின் அற்புத சிறப்புகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும்.
இத்தலத்தின் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.
திருவண்ணாமலையில் மலையே இறைவனாக அருள்புரிவது அதிசயம்.
கயிலாய மலை ஈசனின் இருப்பிடமாக இருந்தாலும், இறைவனே சுயம்பு வடிவாய், மலையாய் காட்சியளிப்பது திருவண்ணாமலையில்தான்.
2748 அடி உயரம் கொண்ட இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 168 மீட்டர் உயரத்தில் உள்ளது.
அண்ணாமலையார் கோயில் 10 லட்சத்து 67 ஆயிரத்து 993 சதுர அடி, அதாவது 24 ஏக்கர் பரப்பளவு கொண்டது. மேலும், கிரிவலப் பாதை 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது.
பழங்கால வரலாறு மற்றும் புவியியல் அமைப்பின்படி திருவண்ணாமலையின் வயது 260 கோடி ஆண்டுகள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
கிருத யுகத்தில் அக்னி மலை, திரேதா யுகத்தில் ரத்தின மலை, துவாபர யுகத்தில் தாமிர மலை என்றும், கலி யுகத்தில் கல் மலை என 4 யுகங்களிலும் திருவண்ணாமலை பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு உள்ளே பேய் கோபுரத்துக்கு வலதுபுறத்தில் அண்ணாமலையார் பாதம் உள்ளது. பாத தரிசன சன்னிதியில் தினமும் மலர் அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சுற்றி உள்ள தூண்களில் விநாயகர், முருகர், கோதண்டராமர் சக்தி தேவியின் திருவடி உருவங்கள் காட்சி தருகின்றன.
கோடையில் உஷ்ணமாக இருந்தாலும் மலை மீது இருக்கும் கந்தாச்ரமம் விருப்பாட்ச குகை போன்ற இடங்கள் மிக மிகக் குளுமையாக இருக்கும்.
அண்ணாமலை அக்னி மலையாக இருப்பதால் சிவப்பாக இருக்கிறது. கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் எறிகின்றபோது மலையே தீப்பிழம்பாக, சிவப்பாகக் காட்சியளிப்பதாய் கூறுகின்றனர்.
கார்த்திகை தீப கொப்பரையிலிருந்து கிடைக்கும் புனிதமான மை மார்கழி ஆருத்ரா திருவிழாவில் எழுந்தருளும் நடராஜ பெருமானுக்கே முதலில் அணிவிக்கப்படும்.
தீபத் திருநாள் அன்று அதிகாலையில் மலையடிவாரத்தில் பரணி தீபமும் மாலையில் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.
கார்த்திகை திருநாளில் நெல்பொரியுடன் வெல்லப்பாகும் தேங்காய் துருவலும் சேர்த்து பொரி உருண்டை பிடித்து சுவாமிக்கும் தீபங்களுக்கும் நிவேதனம் செய்கிறார்கள்.
வெள்ளை நிற பொரி திருநீறு பூசிய சிவனையும் தேங்காய் துருவல் கொடை தன்மை கொண்ட மாவலியையும் வெல்லம் பக்தர்களின் பக்தியையும் தெரிவிக்கின்றன.
மலையின் அமைப்பு கீழ் திசையிலிருந்து பார்த்தால் ஒன்றாகத் தெரியும். மலையை சுற்றும் வழியில் இரண்டாகத் தெரியும். மலையின் பின்னால் மேற்கு திசையிலிருந்து பார்த்தால் மூன்றாகத் தெரியும். மலையை சுற்றி முடிக்கும் தருவாயில் மலை ஐந்து முகங்களுடன் காட்சி தரும்.
திருவண்ணாமலையில் மலையே லிங்கம் என்பதால் மலையிலிருந்து எவரும் கல்லை வெட்டி எடுக்க மாட்டார்கள்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |