திருமண தடை நீங்கி குழந்தை பாக்கியம் அருளும் அய்யர் மலை ரத்தினகிரீசுவரர் கோயில்
நவரத்தினச் சிறப்புமிக்க அய்யர் மலை கோயிலில் சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது. இரத்தினகிரீஸ்வரர் கோவிலில் சிவன் சுயம்புவாக காட்சி அளிக்கின்றார்.
இங்கு காட்சியளிக்கும் சிவபெருமான் இரத்தினங்களாக இருப்பதால் இம்மலையைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் பூமிக்கு அடியில் பச்சை, சிவப்பு போன்ற கற்கள் நிறைய கிடைக்கின்றன. 8 பாறைகளுக்கு நடுவே உள்ள ஒன்பதாவது பாறையில் மேலுள்ள மலையின் மீது சிவபெருமான் சுயம்புவாக அருள்பாவிக்கின்றார்.
சித்திரை மாதத்தில் சூரியனின் கதிர்கள், சுவாமி சன்னிதிக்கு நேரே உள்ள துவாரங்களின் வழியே சிவலிங்கத்தின் மீது விழுகின்றது.
ஒன்பதின் மகிமை:
இந்த அய்யர் மலையில் உள்ள சிறப்புகள் எல்லாம் 9-ஐ குறிப்பதால் இங்குள்ள சிவன் ரத்தினகிரீஸ்வரர் என்று பெயர் பெற்றாரா, அல்லது ரத்தினகிரீஸ்வரர் என்று சிவன் பெயர் பெற்றதால் இங்குள்ள சிறப்புகள் எல்லாம் ஒன்பது என்ற கணக்கில் அமைந்ததா என்பதை சிந்தித்துப் பார்த்தால், அதற்கான பதில் இல்லை.
இம்மலையில் உள்ள பாம்புகள் கடித்தால் விஷம் ஏறுவதில்லை. இந்த மலை தற்போது மக்கள் பேச்சு வழக்கில் அய்யர்மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. முதலில் காலையில் காவிரிக்கரையில் வீற்றிருக்கும் கடம்பரை தரிசித்து விட்டு, இரண்டாவதாக நடுப்பகலில் இரத்தினகிரீஸ்வரர் தரிசித்து வணங்கி, மூன்றாவதாக மாலையில் திரு ஈங்கோய்மலை நாதரையும் ஒரே நாளில் தரிசித்தால் நல்ல பலன் என்பது ஐதீகம்.
பொய்வாசிக் கொப்பரையின் கதை: இயற்கை எழில் சூழ்ந்த காட்சியுடன் விளங்கும் இம்மலை மேருமலையின் ஒரு சிகரம். சோதிலிங்க வடிவமானது. மலைக்கொழுந்தீஸ்வரராக எழுந்தருளியுள்ள பெருமான் சுயம்பு மூர்த்தி.
காலையில் காவிரிக் கரையிலுள்ள கடம்பர் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு நடுப்பகலில் ரத்தினகிரீஸ்வரரை வணங்கி மாலையில் திருஈங்கோய் மலைநாதரை வழிபட்டால் நல்ல புண்ணியமுண்டு என்பது ஐதீகம். இந்த கோயிலில் சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டி உள்ளது. இந்த தொட்டிக்கு ஒரு சிறப்பு வரலாறும் உள்ளது.
ஆரிய மன்னன் ஒருவன் மாணிக்கக் கற்கள் வேண்டி இறைவனிடம் வந்தான். “மாணிக்கக் கற்களை நீ பெற வேண்டுமென்றால் இந்த தொட்டியை காவிரி நீரால் நிரப்ப வேண்டும்” எனக்கூறி ஒரு தொட்டியை இறைவன், அரசனிடம் காண்பித்தார். அந்த தொட்டியில் எவ்வளவு தான் நீரினை ஊற்றினாலும் நிரம்பவில்லை.
இதனால் கோபமடைந்த மன்னன் அவனது வாளை எடுத்து இறைவனிடத்தில் வீசினான். அந்த சமயம் இறைவன் மாணிக்கக் கற்களை மன்னனுக்கு தந்து அருள் பாவித்தார். இறைவனை காயப்படுத்தியதில் வருத்தமடைந்த மன்னன், அந்த கோவிலிலேயே இறைவனுக்கு சேவை செய்து முக்தி பெற்றான் என்கிறது வரலாறு.
அந்த மன்னனால், இறைவன் வெட்டு பட்டதால், இத்தளத்தில் சிவனுக்கு ‘முடித்தழும்பர்’ எனும் பெயரும் உண்டு. இன்றளவும் சிவலிங்கத்தின் மேல் பகுதியில் இந்த வடு காணப்படுகிறது. சிவலிங்கத்தின் முன்பு அந்த மன்னனால் நிரப்பப்படாத தொட்டி தற்போதும் பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர் தொட்டியாக இருக்கின்றது.
சிவனுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடம் நீர் கொண்டு வரப்பட்டு, அந்த தொட்டியில் நிரப்பி, காவிரி நீரால் உச்சிப்பொழுதில் அபிஷேகம் செய்யப்படுகிறது.
கோயில் அமைப்பு:
மலைமேல் உள்ள கோயிலை அடைய சுமார் 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்ல வேண்டும். இந்த படிக்கட்டுகள் கி.பி. 1783-ல் அமைக்கப்பட்டவை. ஏறும் வழியில் அங்கங்கே 4 கால் மண்டபங்களும் இருப்பதால், அவ்வப்போது களைப்பாறி மலை ஏறலாம். அடிவாரத்திலுள்ள பிராதன விநாயகரைத் தரிசித்து ஏறத் தொடங்க வேண்டும்.
அடிவாரத்தில் நால்வர் சந்நிதிகள், அலங்கார வளைவு உள்ளது. படிகள் ஏறத் தொடங்கும்போது ஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. அவரையும் வணங்கிவிட்டு மலை ஏறலாம். சுமார் 75 படிகள் ஏறியவுடன், பொன்னிடும் பாறை என்ற சந்நிதி உள்ளது. 750 படிகளைத் தாண்டிய பின்பு உகந்தாம் படி வருகிறது.
இங்கு விநாயகர் சந்நிதியும், கிழக்கு நோக்கியுள்ள அம்பாள் சுரும்பார்குழலி சந்நிதியும் உள்ளன. அவற்றை வலமாக வந்து மேலேறிச் சென்றால் வாட்போக்கிநாதர் சந்நிதியை அடையலாம். கோயிலுக்குள் நுழையும்போது நம்மை முதலில் வரவேற்பது தட்சிணாமூர்த்தி சந்நிதியே.
தரிசித்து உள்ளே நுழைந்தால், மேற்கு நோக்கி உள்ள ரத்தினகிரிநாதர் தரிசனம் கிட்டுகிறது. சிவராத்திரி நாட்களில் அல்லது முன்பின் நாட்களில், சூரிய ஒளி சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து சுவாமி மீது படுகிறது.
கோயில் உள்ளே நடராஜர், சிவகாமி சந்நிதிகளும், சுப்பிரமணியர் சந்நிதியும், வைரப்பெருமாள் சந்நிதியும் உள்ளன. இத்தல இறைவன் ரத்தினகிரீஸ்வரருக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரி ஆற்றிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது.
பாடல் பெற்ற தலம்:
இக்கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது அகத்தியர் இறைவனை நண்பகலில் தரிசித்த தலமென்பதால் இவ்விறைவன் மத்தியான சுந்தரர் என்றும் வழங்குகிறார் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). இத்தலம் தற்போது மக்கள் வழக்கில் ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது.
தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் முதலாவது சிவத்தலமாகும். மேலும் இது ரத்தினாவளி சக்தி பீடமாகவும் விளங்குகிறது.
தலபெருமைகள்:
* மாணிக்கம் வேண்டிவந்த ஓர் ஆரிய மன்னனுக்கு, இறைவன் தொட்டி ஒன்றைக் காட்டி காவிரி நீரால் அதை நிரப்பச் சொன்னார்.
மன்னன் எவ்வளவோ முயன்றும் தொட்டி நிரம்பவில்லை, நீர்த் தொட்டி நிரம்பாமல் இருக்கக் கண்டு, மன்னன் கோபங் கொண்டு தனது உடைவாளை எடுத்து மாணிக்கக்கல் வியாபாரியை வெட்ட, உடன் இறைவனும் மாணிக்கத்தைத் தந்து மறைந்தார்.
* சிவராத்திரி நாளில் அல்லது முன்பின் நாட்களில் சூரியஒளி, சுவாமிக்கு நேரே அமைக்கப்பட்டுள்ள சாளரம் வழியாக வந்து மூலவர் மீது படுகிறது.
* சிவலிங்கத்தின் முன்பு பொய்வாசிக் கொப்பரை என்னும் நீர்த்தொட்டி உள்ளது. * இரத்தினகிரி, மாணிக்கமலை, சிவாயமலை, அரதனசலம் என்பன இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.
* மூலவர் சுயம்பு மூர்த்தி. * கோயில், மலைமேல் மிக உயரத்தில் உள்ளது. அழகாக அமைக்கப்பட்டுள்ள 1140 படிகளைக் கடந்து ஏறிச் செல்லவேண்டும்.
* இப்பெருமானுக்கு நாள்தோறும் அருகிலுள்ள காவிரியிலிருந்து 10 குடங்களில் நீர்கொண்டு வரப்பட்டு உச்சிக்கால அபிஷேகம் செய்யப்படுகிறது. (இன்றும் இப்பொறுப்பை "பன்னிரண்டாம் செட்டியார் " என்னும் மரபினர் ஏற்றுக்கொண்டு, குருக்கள் மூலம் நடத்துவிக்கின்றனர்.)
* ஓம் நமச்சிவாய ஓம் பகவான் ரத்தினகிரி திரு தலம் ஆகிய சுரும்பார்குழலி அம்மன் ஆலயம்ஆகிய இந்த ஐவர் மலை (என்ற) அய்யர் மலை ஓம் நமச்சிவாய
மூன்று தலங்கள்:
காலைக்கடம்பர், மத்தியானச் சொக்கர், அந்தி ஈங்கோய்நாதர் என்பர். காலையில் குளித்தலை, மதியம் ஐயர்மலை, மாலையில் ஈங்கோய்மலை ஆகிய மூன்று தலங்களையும் ஒரே நாளில் வழிபாட்டால் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. கார்த்திகை சோமவாரத்தில் இவ்வாறாக ஒரே நாளில் வழிபட்டு நலமடைகின்றனர்.
திருத்தலப் பாடல்கள்:
இத்தலம் பற்றிய தேவாரப் பதிகங்கள் சிலவற்றைக் கீழே காணலாம்:
கால பாசம் பிடித்தெழு தூதுவர்
பால கர்விருத் தர்பழை யாரெனார்
ஆல நீழ லமர்ந்தவாட் போக்கியார்
சீல மார்ந்தவர் செம்மையுள் நிற்பரே.
விடுத்த தூதுவர் வந்து வினைக்குழிப்
படுத்த போது பயனிலை பாவிகாள்
அடுத்த கின்னரங் கேட்கும்வாட் போக்கியை
எடுத்து மேத்தியும் இன்புறு மின்களே
நாடி வந்து நமன்தமர் நல்லிருள்
கூடி வந்து குமைப்பதன் முன்னமே
ஆடல் பாடல் உகந்தவாட் போக்கியை
வாடி யேத்தநம் வாட்டந் தவிருமே.
இரக்க முன்னறி யாதெழு தூதுவர்
பரக்க ழித்தவர் பற்றுதன் முன்னமே
அரக்க னுக்கருள் செய்தவாட் போக்கியார்
கரப்ப துங்கரப் பாரவர் தங்கட்கே.
பலன்கள்:
குலதெய்வம் தெரியாதவர்கள் இரத்தினகிரீஸ்வரர் குலதெய்வமாக வழிபடலாம். திருமண தடை நீங்க, குழந்தை பாக்கியம் பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய இந்தக் கோவிலில் வேண்டிக் கொண்டால் நிச்சயம் பலன் உண்டு.
இதுதவிர மூட்டு வலி, இதய நோய், ரத்த கொதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த கோவிலின் மலையை ஒருமுறை ஏறி வந்தால் மாற்றத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர்.
வழிபாட்டு நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் வழிபாட்டிற்காக கோயில் நடை திறந்திருக்கும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |