மகா சிவராத்திரி அன்று விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரியுமா?
சிவபெருமான் வழிபாட்டிற்கு மிக உகந்த நாளாக மகா சிவராத்திரி இருக்கிறது. அதாவது மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்த்தசியன்று வரக்கூடிய நாள் மகா சிவராத்திரி. அன்றைய நாள் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு மற்ற சிவராத்திரிகளில் விரதம் இருந்து வழிபாடு செய்த முழு பலன்கள் கிடைக்கிறது.
அப்படியாக, மகா சிவராத்திரி அன்று ஒருவர் விரதம் இருப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் என்ன என்பதை பற்றி பார்ப்போம்.
சிவ என்பது "மங்களம்" என்பதை குறிக்கக் கூடியதாகும். சிவராத்திரி என்றாலே மோட்சம் தரக்கூடியது என்று எல்லா நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவராத்திரிகளில் மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி பக்ஷ சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று ஐந்து வகை உண்டு. இதில் மஹாசிவராத்திரி தான் மிக சிறப்பாக கொண்டாட கூடிய வழிபாடாகும்.

ஒருமுறை மகாசிவராத்திரி தினத்தன்று வில்வ மரத்தின் மேல் அமர்ந்திருந்த குரங்கு இரவு முழுவதும் தூங்காமல் வில்வ இலைகளை பறித்து அந்த மரத்தின் கீழே போட்டுக் கொண்டு இருந்தது. அச்சமயம் மரத்தடியில் சிவபெருமானும் உமையம்மையும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
குரங்கு அறியாமல் செய்து கொண்டிருந்த இந்த பூஜையை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் மறுபிறவியில் முசுகுந்தச் சக்கரவர்த்தியாகப் பிறக்க அருள் செய்தார். அதாவது அறியாமல் செய்த பூஜைக்கு இவ்வளவு பலன் என்றால் நாம் அதை அறிந்து மனதார செய்கின்ற பொழுது நமக்கு எவ்வளவு பெரிய பலன்கள் கிடைக்கும் என்பது இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.
சிவராத்திரிக்கு முன்பாக முதல் நாள் ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக் கொள்ள வேண்டும். சிவராத்திரி அன்று காலை நீராடி சிவபெருமானை நினைத்து விரதம் நல்ல முறையில் அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விரதம் தொடங்க வேண்டும்.
அன்று நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடிந்தவர்கள் இருக்கலாம். முடியாதவர்கள் பூண்டு மற்றும் வெங்காயம் சேர்க்காத உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு விரதத்தை பொருத்தவரை அந்த விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கே அந்த நன்மை சேரும்.

ஆனால் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் தலைமுறையினருக்கு இந்த முழு நன்மையும் சேர்கின்றது. மேலும் ஒருவர் தொடர்ந்து 24 வருடங்கள் சிவராத்திரி விரதம் இருந்தால் அவர் சிவசாயுஜ்ய நிலையை அடைவதுடன், அவர்களின் 21 தலைமுறைகளும் முக்தியை அடைவார்கள் என்று சொல்லப்படுகிறது.
மேலும் மகாபாரதத்தில் அர்ஜுனன் சிவராத்திரி விரதத்தை கடைபிடித்தே பாசுபதாஸ்திரம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. கண்ணப்ப நாயனார் தம் கண்களை சிவபெருமானுக்கு திருமேனியில் ஈட்டு அவருடைய தீராத பக்தியால் முக்தி பெற்ற தினமும் இந்த சிவராத்திரியில் தான்.
மேலும் மஹா சிவராத்திரி விரத மகிமையினால் அம்பிகை இறைவனுடைய உடலின் சரிபாதையை பெற்றுக் கொண்டார். சிவபெருமான் மார்க்கண்டேயருக்காக, காலனை உதைத்து காலகண்டேசுவரர் என்ற திருநாமம் பெற்றதும் இந்த சிவராத்திரி தினத்தன்று தான்.
இவ்வளவு சிறப்பு பெற்ற சிவராத்திரி தினத்தன்று நாமும் வீடுகளில் விரதம் இருந்து வழிபாடு செய்து நம்முடைய பாவங்கள், அறியாமை விலக இறைவனை பிரார்த்தனை செய்து அவருடைய முழு அருளையும் பெறுவோம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |