கனடாவின் தாய்க்கோயில்: அற்புதங்களை நிகழ்த்தும் துர்க்கேஸ்வரம்
உலகின் பல நாடுகளில் குடியேறிய எம் மக்கள் ஒருபோதும் தங்களுடைய பாரம்பரிய வழிபாட்டை மறக்காத நாள் இல்லை.
தெய்வ வழிபாடு என்பது இன்றியமையாத ஒன்று, நம்மை வழிநடத்தி செல்லும் இறைவனின் துதி பாடினாலே மனதில் சங்கடங்கள் விலகப்பெறும்.
பூஜை, பண்டிகை காலங்கள், கூட்டு பிரார்த்தனைகள் என தாங்கள் வாழும் சூழலுக்கு ஏற்றவாறு ஆலயத்தை வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர்.
அப்படியாக கனடாவின் டொரண்டோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது ஸ்ரீதுர்கா ஆலயம், இப்பகுதியை துர்க்கேஸ்வரம் என்றே அழைக்கின்றனர்.
வட அமெரிக்க பகுதியை பொறுத்தமட்டில் மிக பாரம்பரியான இந்து ஆலயம் இதுவாகும்.
அம்பாளின் அருட்சக்தியால் மெய்சிலிர்த்து போன எம் மக்கள் பலரும், “தாய்க்கோயில்', 'அற்புதக் கோயில்' என்றே போற்றுகின்றனர்.
வரலாறு
சாஸ்திர சம்பிரதாயங்களின் அடிப்படையில் துர்க்கை அம்மனுக்கு ஆலயம் அமையும் பகுதி நுட்பமாக ஆராயப்பட்டது.
தொடர்ந்து மூர்த்திகள் பிரதிஸ்டை செய்யப்படும்போது, மிக உத்தம பட்சமாக 33 ஹோமகுண்ட மகாகும்பாபிஷேகம் நிகழ்த்தப் பெற்றது.
யந்திர பூஜை, யாகபூஜை, மண்டலாபிஷேக பூஜை 108 தினங்கள் நிகழ்த்தப்பெற்றது.
50க்கும் மேற்பட்ட குருமார்கள் உலகெங்கிலும் இருந்து வருகை தந்து வேதம் ஓதி ஆரம்பித்து வைத்த ஸ்தலம் இதுவாகும்.
இதற்கான தனியாக சாலையும் அமைக்கப்பட்டு, 2003ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை 90 மில்லியன் அர்ச்சனைகளோடு கூடிய நவகோடி அர்ச்சனைகள் முதன்முறையாக இந்த ஆலயத்தில் மட்டுமே செய்து முடிக்கப்பட்டது.
மிகப்பெரும் அருட் சக்தி வாய்ந்த ஸ்ரீ துர்கா ஆலயத்தில் ஆண்டுதோறும், பல்வேறு யாகங்கள், ஹோமங்கள் நடாத்தப்படுகின்றன.
சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான டொரண்டோவை சுற்றிலும் வசித்து வரும் இந்தியா, இலங்கை உட்பட பல நாடுகளை சேர்ந்த பக்தர்களுக்கும் வேண்டியதை வழங்கும் தாயாக அருள்பாலிக்கிறார்.
தீராத நோய்களுக்கு மருந்தாகவும், குடும்ப பிரச்சனைகளுக்கு தீர்வாகவும் பலரின் வாழ்வில் அதிசயங்களை நிகழ்த்தும் அம்மனுக்கு இதுவரையிலும் கோடி அர்ச்சனை, நவகோடி அர்ச்சனை, சகஸ்ர மஹா சண்டிஹோமம், காயத்திரி மஹாமந்ர ஹோமம் போன்றவை நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.