அனைத்து கிரகதோஷமும் அன்றே போக்கும் சித்திரவாடி நரசிம்மர் கோவில்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் இராமர் கோவிலுக்கு புகழ் பெற்ற ஸ்தலமாகும். இங்கு ஏரி காத்த இராமர் எழுந்தருளியுள்ளார். இவ் ஊரிலிருந்து செய்யாறு போகும் வழியில் எட்டு கிலோமீட்டர் தூரத்தில் ஒரு சிறு மலையில் குடவரைக் கோவிலாக சித்திரவாடி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது.
சிங்க முகக் கோவில் குடவரையைச் சுற்றி சிங்கம் வாய் திறந்து இருப்பதைப் போன்று அதன் முகம் மட்டும் செங்கல் சிமெண்ட் கொண்டு பெரிய உருவமாக அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. சிங்க முகத்தின் வாயிலுக்குள் சென்று சில படிகள் ஏறி கருவறைக்குள் செல்லலாம்.
குடவரையை மறைத்துக் காணப்படும் வண்ணம் தீட்டிய சிங்கமுகம் தமிழகக் கோயில் வரலாற்றில் ஒரு புதுமையாகும். சிங்க முகத்தின் இருபுறமும் பெரிய திருவடி சிறிய திருவடி என்று வைணவ மரபில் அழைக்கப்படும் கருடாழ்வாரும் ஆஞ்சநேயரும் கை கூப்பி நிற்கின்றனர்.
கோவில் வரலாறு
நரசிம்மர் கோவில் இருக்கும் மலையை சிம்மகிரி என்று அழைக்கின்றனர். இங்கு கருவறை நாதர் பெயர் லட்சுமி நரசிம்மர் ஆகும். இவர் பின் இரு கைகளில் சங்கும் சக்கரமும் காணப்படுகின்றது. முன் கைகளில் ஒன்றை அபய ஹஸ்தமாக வைத்து மற்றொரு கையால் லட்சுமி பிராட்டியின் இடுப்பை சுற்றி வளைத்து பிடித்துள்ளார். இக்கோவில் 2007 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
அடிவாரக் கோயில்
மலைக் குன்றின் மீதுள்ள குடவரைக்கோவிலுக்குப் போக 250 தாழ்வான படிகளாக அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஏறிச் செல்ல சுமார் அரை மணி நேரம் மட்டுமே ஆகும். இவை செங்குத்தான படிகள் அல்ல.
எனவே வயதானவர்களும் படிகளிலே ஏறி மேலே சென்று நரசிம்மரை வழிபட்டு வரலாம். சிங்கமுகத்தின் திறந்த வாய் மற்றும் சிவந்த நாக்கு வழியாக நாக்கில் மிதித்து தான் நடந்து கருவறைக்குள் செல்ல வேண்டும்.
கோவில் அமைப்பு
ம்சித்திராவடி மலையின் கருவறை நாதர் லட்சுமி பிராட்டியை தன் மடியில் வைத்த படி கருணையோடு காட்சியளிக்கிறார். அடிவாரத்திலும் ஒரு நரசிம்மர் சன்னதியில் உள்ளது. அது கண்ணாடி சந்நிதி. கோயிலுக்கு முன்பு கொடிமரம் உள்ளது. இங்கு ஸ்ரீ ஆனந்தவல்லி தாயாருக்குத் தனி சன்னதி உண்டு. இக்கோவிலின் நரசிம்மர் சன்னதி கண்ணாடியால் ஆனது.
நவக்கிரக நரசிம்மர்
சித்திராவடி அடிவாரத்து நரசிம்மர் கோயிலில் நரசிம்ம நவகிரக சன்னதி ஒன்று உள்ளது. இத்தகைய சந்நிதி உலகில் வேறு எங்கும் கிடையாது. நாளை என்பது நரசிம்மருக்கு இல்லை. எனவே இங்கு வந்து வழிபட்டால் இன்றே பிரச்னைகள் தீரும்.
ஒவ்வொரு கிரகத்தின் சிலைக்கும் பின்னால் ஒரு நரசிம்மர் சிலை வைக்கப்பட்டுள்ளது. எனவே எந்த கிரக தோஷம் உடையவராக இருந்தாலும் இக்கோவிலுக்கு வந்து வழிபட்டு சென்றால் அனைத்து தோஷங்களும் அன்றே நிவர்த்தியாகும்.
சனீச்வரன்
இக்கோவிலில் ஸ்ரீ பாவன நரசிம்மர் சன்னதிக்கு அருகில் சனிபகவானுக்குத் தனி சன்னதி உள்ளது. இச் சனி பகவான் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சனி சிங்கனாப்பூர் சனீஸ்வரரைப் போல் காட்சி அளிக்கின்றார். இக் கோவிலுக்கு வெளியே மலைக் கோயிலுக்குப் போகும் படிக்கட்டுகள் தொடங்குகின்றன.
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் மலையடிவாரத்தில் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவில் என்று பெருமாள் தனக்குத் தானே கட்டிக்கொண்ட கோயில் ஒன்று உள்ளது. இக்கோவில் இப்பகுதியில் தோன்றிய முதல் கோவில் என்பதால் புதிய திருப்பதி என்ற பொருளில் நய திருப்பதி என்று அழைக்கின்றனர்.
இங்குப் பெருமாள் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். பத்மாவதி தாயாருக்கு தனிச் சன்னதியில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு தனிச் சன்னதியும் உண்டு.
திருச்சுற்றுத் தெய்வங்கள்
சித்ராவடியின் அடிவாரத்துக் கோயிலின் திருச்சுற்றுப் பிரகாரத்தில் தும்பிக்கையாழ்வார் என்னும் விநாயகர், தன்வந்திரி, ராகு கேது, காளிங்க நர்த்தனன் ஆகியோருக்கும் தனிச் சன்னதிகள் உள்ளன. கோவிலைச் சுற்றிலும் நந்தவனம் இருப்பதால் இக்கோவில் அமைதியாகவும் அழகாகவும் காட்சி அளிக்கின்றது.
ஏகாந்தேஸ்வரரர் கோயில்
பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலை ஒட்டி வரும் கிரிவலப் பாதையில் இடதுபுறம் சற்றுத் தொலைவில் ஒரு சிவன் கோவில் உள்ளது. இங்கு ஒரே பீடத்தில் இரண்டு லிங்கங்கள் உள்ளன. இதனை ரெட்டை சிவன் கோவில் என்றும் ஸ்ரீ ஏகாந்த ஈஸ்வரர் என்றும் அழைக்கின்றனர். இங்கு ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த அர்ச்சகர்கள் தங்கி இருந்து பணி செய்கின்றனர். இக்கோவிலில் இப்பகுதியின் மிகப் பழைய கோவிலாகும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |