கடலூரில் கண்குளிர தரிசனம் செய்யவேண்டிய முக்கிய கோவில்கள்
கடலூர் மாவட்டம் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் முக்கியமான மாவட்டங்களில் ஒன்றாகும்.
இம்மாவட்டத்தில் உள்ள கடற்கரை நகரங்களில் பரங்கிப்பேட்டை அதிகமான மீன் பிடி தொழில் நடக்கும் இடமாகவும், மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதியாக உள்ளது, தமிழ்நாட்டிலேயே பழுப்பு நிலக்கரி கிடைக்கும் மாவட்டமாக கடலூர் உள்ளது.
தென்பெண்ணை, கெடிலம், வெள்ளாறு, மணிமுத்தாறு மற்றும் கொள்ளிடம் போன்ற ஆறுகள் கடலூர் மாவட்டத்தை செழுமையடையச் செய்கின்றன. பண்டைய காலத்தில் இம்மாவட்டம் தொண்டைநாடு என்று அழைக்கப்பட்டுள்ளது.
பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு ஆகிய மூன்று ஆறுகள் ஒன்றாக கூடி கடலில் கலப்பதால் இது கூடலூர் என்று அழைக்கப்பட்டது.
ஆங்கிலேயர்கள் காலத்திலிருந்தே கடலூர் என்றழைக்கப்பட்டது.1865 ஆம் ஆண்டு கேப்பர்மலையில் உள்ள மத்திய சிறைச்சாலை உருவாக்கப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க தலைவர்களும் சுதந்திர போராட்ட வீரர்களும் குறிப்பாக சுப்பரமணிய பாரதியார் இம்மத்திய சிறையில் இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
என்.எல்.சி. அனல்மின் நிலையம், துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கம், வெள்ளி கடற்கரை, பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள், என பல்வேறு சிறப்புகளை பெயர் போன கடலூரில் கோவில்களுக்கும் குறையில்லை. சைவ வைணவ திருத்தலங்கள் ஏராளம் உள்ளன. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள பத்து பிரசித்தி பெற்ற கோவில்களை பார்ப்போம்.
1. திருவஹீந்திபுரம் தேவநாதப் பெருமாள் கோயில்.
கடலூர் மாவட்டம் திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோவில் பெருமாளின் 108 திவ்ய தேசத் தலங்களுள் 41-வது திவ்ய தேசமாக அமைந்துள்ளது.
இக்கோயில், கடலூரிலிருந்து பண்ருட்டி செல்லும் வழியில் சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. திருவஹிந்திரபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலம் தற்காலத்தில் அயிந்தை என்று வழங்கப்படுகிறது. நடு நாட்டுத் திருப்பதிகள் இரண்டில் இது ஒன்றாகும்.
இக்கோயிலில் தேவநாத சுவாமி, ஹயக்ரீவர் சன்னதிகள் அமைந்துள்ளன. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணம், ஸ்காந்த புராணம், பிருகன் நாரதீய புராணம் ஆகிய புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவ நாதன் என்றும் தெய்வநாயகன் என்றும் அழைக்கப்படுகிறார். இறைவி வைகுண்ட நாயகி, ஹேமாம்புஜ வல்லித்தாயார் (பார்க்கவி).
விமானம்: இந்த கோவிலின் விமானம் சந்திர விமானம், சுத்தசத்துவ விமானம் என்னும் கட்டிட முறையில் கடப்பாடுக்காது.
முக்கிய திருவிழாவான பன்னிரெண்டு நாள் பிரம்மோத்ஸவம் சித்திரையில் (ஏப்ரல் - மே) கொண்டாடப்படுகிறது.
ஒன்பதாம் நாள் திருவிழாவின் போது ரதோற்சவம், கோவில் தேர் இழுக்கப்படுகிறது. மாசி மஹோத்ஸவம் என்பது தமிழ் மாதமான மாசியில் (பிப்ரவரி - மார்ச்) மற்றொரு பத்து நாள் திருவிழாவாகும்.
திருவிழாவின் போது சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யபடுகின்றன கோகுலாஷ்டமி, கார்த்திகை, தமிழ்ப் புத்தாண்டு, மார்கழி பத்து நாள் விழா, சங்கராந்தி, பங்குனி உத்திரம் மற்றும் ரோகிணி உற்சவம் போன்ற பிற வைணவப் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
தென்னிந்தியாவிலேயே ஹயக்ரீவர் உருவம் அதாவது குதிரை முகத்துடன் கூடிய விஷ்ணுவின் அவதாரம் கொண்ட ஒரே வரலாற்றுக் கோயில் இதுவாகும்.
மூலவர்
கோயிலின் மூலவரான தேவநாத ஸ்வாமி திருப்பதி வெங்கடாஜலபதிக்கு மூத்தவர் என்று புராணங்கள் கூறுகின்றன. திருப்பதிக்குச் சென்று பிரார்த்தனை செய்தவர்கள் தேவநாத சுவாமி ஆலயத்திற்கு வந்து நேர்த்திக்கடன் செய்வார்கள். கோயிலுக்குக் கிழக்கே அவுஷத மலை அமைந்திருக்கிறது. இந்த மலையானது ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைச் சுமந்து சென்ற போது அதிலிருந்து விழுந்த ஒரு சிறு பகுதி என்று பெரியவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தேவநாதசுவாமி கோயிலானது பிரம்மா, சிவன், இந்திரன் பூமாதேவி, மார்க்கண்டேயர், ததிசி முனிவர் உள்ளிட்ட பலரும் தவம் புரிந்த தலமாகும்.
தேவநாத சுவாமி சன்னதியில் திருமணம் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுளுடன் புத்திக்கூர்மையுள்ள புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுவதால், முகூர்த்த நாட்களில் இந்த கோயிலில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறுவது வழக்கம்.
நடை திறப்பு
காலை 6 மணி முதல் 11 மணி வரை மாலை 4:30 மணியிலிருந்து இரவு 8 மணி வரை.
2.திருப்பாதிரிப்புலியூர் பாடலேசுவரர் கோயில்
கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூர் என்னுமிடத்தில்அமைந்துள்ள, அப்பர், சம்மந்தர் ஆகியோரால் பாடல் பெற்ற தலமாகும். 274 சிவாலயங்களில் இது 229 வது தேவாரத்தலம் ஆகும். இது தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தளங்களில் ஒன்றாகும்.பல்லவ மற்றும் சோழ மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது.
மூலவர்
பாடலேசுவரர், கன்னிவனநாதன், தோன்றாத்துணைநாதன், கடைஞாழலுடையபெருமான், சிவக்கொழுந்தீசன், உத்தாரேசன், பாடலநாதன், கறையேற்றும்பிரான்என்று பல பெயர்களில் போற்றப்படுகின்றார்.
தாயார் பெரியநாயகி, தோகையம்பிகை, அருந்தவநாயகி, பிரஹந்நாயகி என்று போற்றப்படுகின்றார்.
தலவிருக்ஷம்: பாதிரி மரம்.
தீர்த்தம்: சிவகரை, பிரம்மதீர்த்தம், (கடல்)சிவகரதீர்த்தம், (திருக்குளம்) பாலோடை, கெடிலநதி, தென்பெண்ணையாறு ஆகிய தீர்த்தங்கள் காணப்படுகின்றன.
தலவரலாறு: காசியில் உள்ள இறைவனை 16 முறை வணங்குவதும் இத்தலத்தில் ஒரு முறை வணங்குவதற்கு இணையானது அதாவது சமனானது எனும் ஒருவித நம்பிக்கை இங்கு காணப்படுகின்றது.
அதுமட்டுமன்றிதிருவண்ணாமலையில் 08 முறை வணங்குவதும் சிதம்பரத்தில் 03 முறை வணங்குவதும் இங்கு ஒருமுறை வணங்குவதற்குச் சமமானது என்று புராணங்கள் கூறுகின்றன. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருநாவுக்கரசரை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன்(கி.பி 600 -630) சமணர்கள் பேச்சைக் கேட்டு கல்லுடன் சேர்த்துக் கட்டி கடலில் தள்ளியபோது அப்பர் சுவாமிகள் "கற்றூணைப்பூட்டி ஓர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயவே" என நமசிவாயப் பதிகம் பாடித் துதிக்க அக்கல்லே தெப்பமாக மாறி கடலில் மிதந்து வந்து கறையேறிட நகர மக்களெல்லாம் அதிசயப்பட்டு அன்பு கொண்டு மகிழ்ந்து வரவேற்கச் சென்றார்கள். இன்றும் அப்பர் கடலிலிருந்து கரையேறிய இடம் "கரையேறவிட்ட குப்பம்" என்னும் பெயரால் சிறந்து விளங்குகிறது.
எல்லா சிவன் கோவில்களிலும் பள்ளியறை இறைவியின் சந்நிதியின் அருகில் தான் இருக்கும். பள்ளியறை இல்லாத கோவில்களும் உண்டு. (எடுத்துக் காட்டாக திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயத்தைக் கூறலாம்). ஆனால் பள்ளியறை இறைவன் திருக்கோயிலில் அமைந்து, நாள் தோறும் இறைவியே பள்ளியறைக்கு எழுந்தருள்வது இத்தலத்தின் தனிச்சிறப்பு.
தல விநாயகர்: வலம் புரி விநாயகராக உள்ளார். மேற்கு மதில் விநாயகரது மேல் திருக்கரங்கள் இரண்டிலும் பாதிரி மலர்கொத்துக்களே காணப்படும். அம்பிகை இறைவனை பூசித்தபோது உதவி செய்த திருக்கோலம் அதனால் அவர் கன்னி விநாயகர் எனப்பெயர் பெற்றார்.
கோவில் வழிபட்டு நேரம்
காலை 5:30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4:00 மணி முதல் இரவு 9 மணி வரை
3.சிதம்பரம் நடராஜர் கோயில்
தில்லை நடராஜர் என அழைக்கப்படும் இக்கோவிலானது அப்பர், சுந்தரர், சம்மந்தர், மாணிக்கவாசகர் ஆகிய சமயக் குரவர் நால்வரும் தேவாரப் பாடல் பாடிய தலங்களில் ஒன்றாகும்.
இத்தலம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் என்றும் சிதம்பரம் தில்லை கூத்தன் கோயில் என்றும் சிதம்பரம் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் சைவ இலக்கியங்களில் கோயில் என்ற பெயராலேயே அழைக்கப்பெறுகிறது.
அத்துடன் பூலோக கைலாசம் என்றும் கைலாயம் என்றும் அறியப்பெறுகிறது. இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் என்னும் நகரில் அமைந்துள்ளது.
தல வரலாறு
இவ்வூரானது தில்லை என்று பழங்காலத்தில் வழங்கப்பட்டுள்ளது. இத்தலம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது.
மேலும் இத்தலத்தில் நடனமாடும் சிவபெருமானை ஆடலரசர், கனகசபைநாதர் போன்ற பெயர்களால் அழைக்கப்பட்டாலும் நந்தனார் நாயனார் தான் நடனமாடும் நிலையை வைத்தே நடராசர் என்ற பெயர் வைத்தார் பின்பு அப்பெயரே அனைவராலும் அழைக்கப்படும் பெயராக மாறியது.
இத்தலத்தின் மூலவர் : திருமூலநாதர், (தூய தமிழில் : பொன்னம்பலநாதா்) உற்சவர் : நடராசர் (வடமொழியில் : கனகசபைநாதா்) அம்மன்/அம்மை : உமையாம்பிகை, (வட மொழியில் : சிவகாமசுந்தரி) இத்தலத்தின் தலவிருட்சமாக தில்லை மரமும், தீர்த்தமாக சிவகங்கை, பரமானந்த கூபம், வியாக்கிரபாத தீர்த்தம், அனந்த தீர்த்தம், நாகச்சேரி, பிரம தீர்த்தம், சிவப்பிரியை, புலிமேடு, குய்ய தீர்த்தம், திருப்பாற்கடல் தீர்த்தங்களும் உள்ளன.
இத்தலமானது பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான ஆகாயத் தலமாகும். இத்தலம் திருநீலகண்ட நாயனார் அவதாரத் தலம் எனவும் கூறப்படுகின்றது.
(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).
(2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் ( LONGITUDE) அமைந்துள்ளது. இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.
(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.
(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).
(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது அதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.
(6) திருமந்திரத்தில் " திருமூலர்"
மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே
என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.
7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும். இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது.
"கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,
(8) பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ). இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.
(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது. அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.
(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது. .விஞ்ஞானம் இன்று சொல்வதை இந்துமதம் அன்றே நிரூபித்து காட்டிவிட்டது.
4. நல்லாத்தூர் ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் வல்லமை படைத்த சிவபெருமான் பூவுலகில் பல்வேறு வடிவங்களில் பல்வேறு பெயர்களில் அவதரித்து பக்தர்களின் துயரத்தை போக்கி வருகிறார்.
அதன்படி கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் கிராமத்தில் திரிபுரசுந்தரி உடனுறை பொன்னம்பலநாதர் (எ) சொர்ணபுரீஸ்வரர் என்ற பெயரில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.
இறைவன்: சொர்ணபுரீஸ்வர் இறைவி : திரிபுர சுந்தரி
தல வரலாறு
இக்கோயிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். இத்தலம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையானதாகும். தல விருட்சமாக வில்வ மரம் திகழ்கிறது. கோயில்களில் சாளரக் கோயில் என்ற வகை உண்டு. இத்தகைய கோயில்களில் வாசற்படி இருக்காது. இறைவனை பலகணி எனப்படும் ஜன்னல் (சாளர சக்கரம்) வழியாகத்தான் தரிசிக்க முடியும்.
சாளர சக்கரத்திற்கு கீழ் 27 நட்சத்திரங்கள், 12 ராசிகள், 9 கிரகங்கள் உள்ளடக்கிய சர்ப்ப யந்திரம் உள்ளது. இதன் அருகில் நந்தி மண்டபம் உள்ளது. திரிபுரசுந்தரி அம்மன் எதிரில் உள்ள ராஜகோபுரம், 3 நிலை 5 கலசங்களுடன் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். மகா மண்டபமான சொக்கட்டான் மண்டபத்தில் 24 இதழ்களுடன் கூடிய மூன்றடுக்கு தாமரை கவிழ்ந்த நிலையில் அமைந்திருப்பது சிற்பக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டு.
சிறப்பம்சங்கள்
மகா மண்டபத்தில் கர்ண விதாயினி என்னும் பெயரில் சரஸ்வதி வீணை வாசிக்கும் சிற்ப சிலை உள்ளது. துவாரபாலகர்களை இக்கோயிலில் வலம் வர முடியும். மார்க்கண்டேயனை காப்பாற்ற எமனை காலால் எட்டி உதைக்கும் காலசம்ஹார மூர்த்தியாக மேற்கு புறமாக காட்சி தருகின்றார். இதனால் இத்தலம் வடதிருக்கடையூர் என்றும் அழைக்கப்படுகிறது.
விசேஷங்கள், விழாக்கள்
கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள் இத்தலத்தில் அம்பாளை வணங்கி தாமரை பூவால் அர்ச்சனை செய்தால் நோய்கள் குணமாவதோடு மீண்டும் நம்மை அண்டாது என்பது நம்பிக்கை. இத்தலத்திற்கு வந்து மனமுருக வழிபட்டால் ஆயுள்விருத்தி, செல்வ செழிப்பு உண்டாவதோடு, பல்லாண்டு வழிபட்ட பலன் கிடைப்பதாக பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது.
திருவாதிரை நட்சத்திரத்தில் மகாமிருத்யுஞ்சய யாகம், மகா சிவராத்திரி, மாத பிரதோஷங்கள், ஐப்பசி அன்னாபிஷேகம், அஷ்டமி பைரவர் வழிபாடு, ஒவ்வொரு தமிழ் மாத முதல்நாள் சூரியன், ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடு ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
ஆலய அமைவிடம்
கடலூரில் இருந்து தவளக்குப்பம், மடுகரை, பாக்கம் கூட்ரோடு வழியாகவும், விழுப்புரத்தில் இருந்து மடுகரை வழியாவும், புதுவையில் இருந்து தவளக்குப்பம் வழியாகவும் நல்லாத்தூர் சிவன் கோயிலை அடையலாம். பேருந்து வசதி உண்டு.
வழிபாட்டு நேரம்
காலை 7:00மணி முதல் 11:30 மணி வரை
மாலை 6:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை
5.திருவதிகை வீரட்டானேஸ்வரர் திருக்கோயில்
சிவபெருமானின் வீதத்தை வெளிப்படுத்தும் எட்டு திருத்தலங்களில் மூன்றாவது திருத்தலமாக கருதப்படும் இந்த திருவதிகை வீரட்டானேஸ்வரர் ஆலயம் கடலூர் மாவட்டம் திருவதிகை என்னும் ஊரில் உள்ளது இக்கோவில். மிகவும் பழமை வாய்ந்த இக்கோவில் அப்பர் சம்மந்தர் சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற நடுநாட்டு தளங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
இக்கோவிலானது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மையான நம்பிக்கையாகும்.
கோயில் இறைவன் இறைவி
மூலவர் : வீரட்டானேஸ்வரர்
தாயார் : பெரியநாயகி அம்மன்
தல விருட்சம் : சரக்கொன்றை
தீர்த்தம் : சூலதீர்த்தம்
நடைதிறக்கும் நேரம்
காலை 5:00 மணி முதல் 12 மணி வரை
மலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை
திருநாவுக்கரசர்
சைவத்துக்கு திருத்தொண்டு புரியும் பொருட்டு திருநாவுக்கரசரை உககிறக்கருளிய பெருமை பெற்ற தலமாகும். முதன்முதலில் தேவாரப் பாடல் பாட ஆரம்பித்த தலம் இதுவேயாகும்.
ஞானசம்பந்தருக்கு இறைவன் திருநடனம் கட்டிய தலமும் இதுவே. அப்பரின் தமக்கையார் திலகவதியார் தங்கியிருந்து திருத்தொண்டு செய்து வந்த திருத்தலம்.
சூலை நோயின் துன்பம் தாளப்பெறாத அப்பர் பெருமான், யாருமறியாமல் பாடலிபுத்திரத்தை (திருப்பாதிரிப்புலியூர்) விட்டு நீங்கி, இங்கு வந்து, தமக்கையாரைக் கண்டு, தொழுது, திருவாளன் திருநீறு தரப் பெருவாழ்வு வந்ததென்று பணிந்து ஏற்று, உருவார அணிந்து, அவர்பின் சென்று, அதிகைப் பிரான் அடிமலர் வீழ்ந்து வணங்கி, "ஆற்றேன் அடியேன்" என்று "கூற்றாயினவாறு" பதிகம் பாடிச் சூலை நீங்கப்பெற்ற அற்புதத்தலம்.
இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது.
தல புராணம்
இக்கோயிலானது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்து கோயிலாகும். தாருகாட்சன், கமலாட்சன், வித்யும்மாலி எனும் மூன்று அசுரர்கள் தவம் செய்து பிரம்மாவிடம் தங்களை யாராலும் வெல்ல முடியாதபடி வரம் பெற்றன.
அவர்களால் தொல்லை அடைந்த தேவர்களும் ஈசனிடம் இது குறித்த முறையிட அசுரர்களை அழிக்க எல்லா தேவர்களின் உதவியையும் சிவபெருமான் நாடி பெற்றார். தேவர்கள் அனைவரும் தங்களால் தான் அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கச் சிவபெருமானோ தேவர்களின் எந்த உதவியையும் பயன்படுத்தாமல் அசுரர்களைப் பார்த்து சற்றே சிரித்தார்.
உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அசுரர்கள் மூவரும் சாம்பல் ஆகினர். தங்கள் உதவி இல்லாமலேயே சிவபெருமான் சம்ஹாரம் செய்ததை உணர்ந்த தேவர்கள் வெட்கி தலை குனிந்தனர்.
ஒரே சமயத்தில் தேவர்களின் ஆணவத்தையும் அசுரர்களின் அட்டகாசத்தையும் ஈசன் அடக்கினார் என்று இக்கோயில் வரலாறு கூறுகின்றது. ஆணவம் கொண்ட மூன்று அசுரர்களின் இருப்பிடத்தை அளித்த சிவபெருமானுக்குத் திருவதிகையில் கட்டப்பட்டுள்ள கோயில் காலத்தில் வென்ற நிற்கும் சிற்பக் களஞ்சியமாக உள்ளது.
ராஜகோபுரம்
கிழக்கு நோக்கி ராஜகோபுரமும் ஏழு நிலைகளுடனும், ஏழு கலசங்களுடனும் கோயிலுக்கு முன்னால் 16 கால் மண்டபத்துடனும் காணப்படுகின்றது. இம்மண்டப தூண்களில் ரிஷப ரூடர், அப்பர், மயில்வாகனன் ஆகியோரின் சிற்பங்களும், கோயிலைத் திருப்பணி செய்த செட்டியாரின் சிற்பங்களும் உள்ளன.
கோவில் நுழைவு வாயிலில் ராஜகோபுரத்துக்கு முன் திருநீற்று மண்டபம் அமைந்துள்ளது. இது திருநீற்றின் பெருமையை உலகிற்கு உணர்த்திய தலம்.
கோயில் தேர் வடிவில் கோபுர நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இத்திருத்தலம் கட்டப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
பங்குனி மாதம் 10 நாட்கள் வசந்தோற்சவம்சித்திரை சதயம் 10 நாட்கள் அப்பர் மோட்சம்வைகாசிப் பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள்இங்கு திரிபுரதகன உத்ஸவம் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டத்தன்று நடக்கிறது .
ராஜராஜசோழர் வியந்த கோயில்
கோயில் தேர் வடிவில் கோபுர நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் இத்திருத்தலம் கட்டப்பட்டுள்ளது.இத்தலத்து எம்பெருமானை தரிசிக்க வந்த ராஜராஜ சோழர், கோபுரநிழல் தரையில் விழாததைக்கண்டு அதிசயித்து தான் ஆட்சி புரியும் தஞ்சையிலும் இதேபோல் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு பிரம்மாண்டமான கோயிலை கட்ட எண்ணினார். அவ்வாறு உருவானதே தஞ்சை பெருவுடையார் கோயில் ஆகும். ஆகவே பெருவுடையார் கோயிலுக்கும் முன்னோடி இந்த திருவதிகை திருத்தலமாகும்.
6. ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி கோயில்
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ பூவராக சுவாமி திருக்கோயில். 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான திருக்கோயிலாகும். பெருமாளின் தசாவதாரங்களில் மூன்றாம் அவதார தலமாகும்.ஓம் நமோ நாராயணா என்ற எழுத்துக்களுக்கு ஏற்ப வட இந்தியாவில் நான்கும் தென்னிந்தியாவில் நான்கு இடங்களில் சுயமாக எம்பெருமாள் தோன்றியுள்ளார். ஸ்ரீரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது சுயம்பு தலமாக இத்தலம் விளங்கி வருகின்றது.
சாலிகிராம ரூபத்தில் உலகில் பன்றி முகம் கொண்டு மனித உடலுடன் பெருமாள் இவ்விடம் தெற்கு நோக்கி காட்சி தருகின்றார்.
இறைவனின் பெருமை
நவாப் ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எல்லா மருத்துவர்களாலும் கைவிடப்பட்டார். அப்பொழுது பூவராகரை ஜெபித்ததால் பன்றி ரூபத்தில் வந்து நவாப் இடுப்பிற்கு மேல் பகுதியில் கோரை பற்களால் பிராண்டியதால் புற்றுநோய் கட்டி வெளியே வந்து விழுந்து உயிர் பிழைத்தாராம்.
மகாமகத்தன்று நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை கடந்து 150 கிலோமீட்டர் அப்பால் உள்ள சிதம்பரம் கிளையின் உள்ள தர்காவிற்கு சென்று இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அவ்விடம் பூஜை செய்து வழிபடுகின்றனர். வேண்டுகோளை ஏற்று பூவராக சுவாமி நவாப் புதைக்கப்பட்ட மசூதியிலும் மக்களை ஆசிர்வதிப்பதாக கூற்று.
இவ்விடம் இஸ்லாமியர்கள் பெருமாளை வணங்குவது குறிப்பிடத்தக்கது. உலகத்திலேயே வைணவ கோயிலான இக்கோயிலில் தான் சைவம் மற்றும் மருத்துவ முறையில் பூஜைகள் செய்யப்பட்ட வருகின்றது. இக்கோயிலுக்கு வருபவர்கள் 100 கால் மண்டபத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதியை வணங்கிய பின்னரே பூவராக சுவாமி வணங்க வேண்டுமாம்.
இக்கோயிலின் தீர்த்தம் நித்திய புஷ்கரணியாகும். மேலும் இந்து முஸ்லிம் வழிபடுவதற்கான ஆதாரமும் உள்ளது. நம்மாழ்வார், சப்த கன்னிமார்கள், திருக்கச்சி நம்பி, திருப்பதி வெங்கடாச்சலபதியின் பாதம், பலி பீடம், துளசி மாடம் ஆகியவை காணப்படுகின்றது. இக்கோயிலில் உள்ள எம்பெருமானை தரிசிப்பதால் 108 திவ்யதேசங்களை தரிசித்த பலன் கிட்டும் என்பது ஐதீகம்.
மூலவர் பூவரகர் ஸ்வாமி முகம் பன்றி உருவிலும், மேனி மனித உடலுமாக காட்சி
உற்சவர் : ஸ்ரீயக்ஞவராகன்
தாயார் : அம்புஜவல்லி தாயார்
தீர்த்தம் : நித்ய புஸ்கரணி
தல விருட்சம் : அரசமரம்
ராஜகோபுரம் மற்றும் திருவிழாக்கள்
தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்பா நாயக்கா்.10 ஆம் நூற்றாண்டின் இடைக்கால சோழர்கள் காலத்தில்இந்த கோவிலுக்கு பங்களித்தனர். ஒரு கிரானைட் சுவர் ஆலயத்தைச் சுற்றிலும், உள்ளஎல்லா கோயில்களையும் கோவிலின் குளங்களையும் இணைக்கிறது. கோவிலின் நுழைவாயிலில் ஏழு-அடுக்குராஜகோபுரமும் உள்ளது. கோவிலில்தினசரி ஆறுசடங்குகள் மற்றும் மூன்று வருடாந்திர திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இது தமிழ் மாதமான வைகசி மாதத்தில் (ஏப்ரல்-மே) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானதுஇப்பகுதியில் இந்து-முஸ்லீம் ஒற்றுமையை அடையாளப்படுத்துகிறது – இரதத்தின் கொடியை முஸ்லிம்கள் வழங்கியுள்ளனர்; அவர்கள் கோவிலில் இருந்து காணிக்கைகளை எடுத்து, வந்து மசூதிகளில் அல்லாஹ்விடம் வழங்குகிறார்கள். இந்த கோயில் தமிழ்நாட்டின் இந்து சமய மற்றும் எண்டௌமென்ட் சபைகளால் நிர்வகிக்கப்படுகிறது.
கோவிலின் பெருமையை கூற இந்த ஒரு கட்டுரை தொடர் போதாது எண்ணுமளவுக்கு புராதன சிறப்புகளை தன்னுள் கொண்டுள்ள இந்த பூவராக ஸ்வாமி கோயிலையும் நாம் தரிசித்து வாழ்வின் பயன் பெறுவோம். நன்றி......
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |