பெருமாளுக்கு உகந்த வைகுண்ட ஏகாதசி விரதம்
ஏகாதசி விரதம் என்பது மாதம்தோறும் வளர்பிறை தேய்பிறை காலங்களில் 11 வது நாள் பெருமாள் பக்தர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. ஏகாதசி என்பவள் பெருமாளின் அறி துயிலைக் கலைக்க வந்த அசுரனை எதிர்த்து போராடியவள்.
அவள் அந்த அசுரனைக் கொன்று போட்டதை அறிந்த பெருமாள் அவளுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க அவள் 'இந் நன்னாளில் உங்களை விரதம் இருந்து வணங்குவோர் எல்லோரும் வைகுந்த பதவி அடைய வேண்டும்' என்று பெருமாள் பக்தர்களுக்காக அவள் வரம் கேட்டாள்.பெருமாளும் அவள் கேட்ட வரத்தைக் கொடுத்தார்.
பொது நன்மையும் தானதர்மமும்
ஏகாதசி விரதத்துக்குத் தனித்தனி பலன் சொல்லப்பட்டு இருந்தாலும் இதண் அடிப்படை நோக்கம் பொது நன்மைக்கான விரதம் என்பதே ஆகும்.
இந்து சமயத்தில் அவரவர் பாவத்துக்கு அவரவர் அவரவரே பிராயச்சிதம் தேட வேண்டும். ஆனால் ஏகாதசி என்பவள் இந்நாளில் விரதம் இருக்கும் மற்றவர்களுக்கு வைகுண்டம் கிடைக்க வேண்டும் என்று வரம் கேட்டாள்.
தனக்கு மட்டும் வர்ந்தபியும் என்று கேட்கவில்லை. ஆக ஏகாதசி விரதம் என்பது பொது நலம் சார்ந்த விரதம் என்பதால் விரதம் இருப்போர் தான் தர்மத்துடன் தான் இவ்விரதத்தை முடிக்க வேண்டும்.
நிர் ஜல ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி அன்று ஏகாதசி உண்ணாவிர நோன்பு இருந்து இறைவனை வணங்குவோர் இறந்ததும் நேரடியாக சொர்க்கத்துக்குப் போய்விடுவார்கள்.
இந்த வைகுண்ட ஏகாதசி பெருமாளுக்கு மிகவும் சிறப்பான உபவாசத் திருநாள் ஆகும். இதனை நிர்ஜல ஏகாதசி என்றும் அழைப்பார்கள். அதாவது தண்ணீர் கூட குடிக்காமல் (பல்லில் பச்சத்தண்ணி படாம) மேற்கொள்ளும் விரதமாகும்.
விரதம் இருக்கும் போது
பொதுவாக விரதம் இருக்கும் நாட்களில் மது, மாது, மாமிசம், சூது, வசைச்சொல் ஆகியவை கூடாது. பழைய உணவை உட்கொள்ளக் கூடாது.
எளிய உணவும் இறை சிந்தனையுமாக இருக்க வேண்டும். நிர் ஜல ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஒரு சொட்டு தண்ணீர் கூட அருந்தாமல் அதிகாலை நாலரை மணி முதல் மறுநாள் அதிகாலை நாலரை வரை உண்ணாமல் உறங்காமல் பெருமாளை பற்றி சிந்தித்தபடியும் பேசியும் பாடியும் படித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.
ஏகாதசி விரதங்களின் வகைகள் ஏகாதசி விரதங்கள் பக்தர்கள் உண்ணும் உணவுக்கேற்ப பல வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஜலஹர ஏகாதசி விரதம் என்றால் தண்ணீர் மட்டும் அருந்தி விரதம் இருப்பதை குறிக்கும். சீரபோஜி ஏகாதசி விரதம் என்றால் பால் மற்றும் பால் பொருட்கள் மட்டும் உட்கொண்டு விரதம் இருப்பதாகும்.
ஃபல ஹரி விரதம் ஏகாதசி விரதம் என்றால் பழங்களை மட்டும் உட்கொண்டு வேறு எதுவும் உண்ணாமல் விரதம் இருப்பதைக் குறிக்கிறது.
நத்த போதி ஏகாதசி விரதம் என்றால் ஒரு பொழுது மட்டும் உணவு உட்கொள்வதை குறிக்கும் அந்த ஒரு பொழுது உணவும் சபுதானா, சிங்காதா, சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு அல்லது நிலக்கடலை போன்றவற்றை மட்டும் உட் கொண்டும் விரதம் இருக்கின்றனர்.
பொதுவாக சிறுதானியமோ கோதுமை அல்லது அரிசியோ பருப்போ விரதம் இருப்பவர்கள் உண்ணக்கூடாது என்பது வடநாட்டில் கடைபிடிக்கப்படும் விரத முறையாகும். தமிழ்நாட்டில் அரிசி பருப்பு கலந்து உப்பில்லாமல் வேகவைத்து ஒருவேளை உண்பது விரதச் சாப்பாடாகும்.
விரதம் இருக்கும் முறை
ஏகாதசி விரதம் இருக்கும் பக்தர்கள் மாதந்தோறும் வளர்பிறை ஏகாதசி என்றும் தேய்பிறை ஏகாதசி அன்றும் விரதம் இருக்கலாம். முதல் நாள் அன்று மாலையில் எளிதாக செரிக்கும் உணவை உண்பதே சிறந்த விரத முறை ஆகும்.
அதிகாலை நாலரை மணிக்கு பிரம்ம மூர்த்தத்தில் குளித்து காலைக்கடன்களை முடித்து இறைவன் முன் அமர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தம் அல்லது விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்ல வேண்டும்.
இவ்விரதம் சூரிய உதயத்திற்கு முன்பே தொடங்கி விடும். பின்பு சூரியன் உதயமானதும் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குப் போய் அங்கு சிறிய திருவடி (அனுமன்), பெரிய திருவடி (கருடாழ்வார்), தாயார் சன்னதிகளுக்கு சென்று சேவித்த பிறகு ஆண்டாள் சந்நிதி, நவநீத கண்ணன் சந்நிதி, ஆழ்வார்கள், பள்ளிகொண்ட பெருமாள், ஸ்ரீ ராமர் சன்னதி போன்றவற்றுக்கு முன் நின்று அந்தந்த தெய்வங்களுக்குரிய பாசுரங்களைச் சொல்லி வணங்கி வர வேண்டும்.
மாலையிலும் இவ்வாறு பெருமாள் சன்னதிக்கு செல்வது அவசியம் ஆகும். கோவிலில் இருந்து வீட்டுக்கு வந்ததும் பெருமாளைப் பற்றிய சிந்தனையோடு முழு நாளையும் கழிக்க வேண்டும். பெருமாள் பற்றிய நூல்களை வாசிக்கலாம்.
மற்றவர்களைப் பேசச் சொல்லிக் காது குளிரக் கேட்கலாம், ஒலிநாடாவில் பாசுரங்களை ஒலிக்க விட்டு செவியரக் கேட்கலாம், காணொளிகளைக் கண்டு மகிழலாம். ஆனால் இவை அனைத்தையும் பக்தி மார்க்கத்தில் நின்று நிறைவேற்ற வேண்டுமே தவிர தலையணை வைத்து டிவி பார்ப்பது போலப் பார்க்கவும் கேட்கவும் கூடாது. டிவியில் பெருமாள் படம் பார்ப்பது தவறு.
நாவடக்கம்
விரதம் என்பது உண்ணகிநோன்பு மட்டும் அல்ல. புலனடக்கமும் ஆகும். கண், காது, வாய், தோல், மூக்கு என்று எந்த புலன்களாலும் உடல் இன்பத்தை நுகரக் கூடாது. எனவே விரதம் இருப்பவர்கள் அதிகமாகப் பேசக்கூடாது. குறிப்பாக பொய் பேசுதல், புறம் கூறுதல், வசைச் சொற்களைப் பேசுதல் கூடவே கூடாது.
களவு செய்யும் எண்ணம் கூட வரக்கூடாது, களவு செய்யவும் கூடாது. பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டால் விரதத்தின் பலன் கிடைக்காது. பஞ்சமா பாதகங்களில் எதைச் செய்ய நினைத்தாலும் விரதத்தின் பலன் அடிபட்டுப் போய்விடும்
துவாதசி விரதம்
மறுநாள் காலை நாலரை மணிக்கு வீட்டில் விளக்கு ஏற்றி பாசுரம் சொல்லி பெருமாளை வணங்கிய பின்பு பெருமாள் சன்னதிக்கு போய் வணங்கி வந்த பிறகு விரதத்தை விடலாம்.
அப்போது கண்டிப்பாக உணவில் நெல்லிக்காய் சேர்க்க வேண்டும். 18 வகை காய்கறிகளை சமைத்து சாப்பிட்டு துவாதசி விரதம் விட வேண்டும். அன்றைக்கும் விரதம் தொடரும். எனவே பகலில் உறங்கக்கூடாது.
மது, மாது, மாமிசம் அறவே கூடாது. அன்றைக்கும் பெருமாளைப் பற்றிய சிந்தனையிலும் பேச்சிலும் செயல்பாட்டிலும் இருக்க வேண்டும்.
ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திரதானம் செய்வதால் விரதம் இன்னும் மேன்மை அடையும்.விரதம் இருக்கும் நாட்களில் பாய் தலையணையில் படுப்பது அபச்சாரம் ஆகும்.
பாசுரப் பாராயணம்
ஏகாதசி விரதம் இருக்கும் சிலர் நடுநிசிக் காட்சிக்கு போய் சாமி படம் பார்த்து விட்டு வந்து காலையில் கோவிலுக்கு போகிறார்கள். இது விரதம் இருப்பது ஆகாது. பகலிலும் டிவியில் சாமி படம் ஒளிபரப்பப்படும் போது அதனைப் பார்த்து பொழுதைப் போக்குகின்றனர்.
சாமி படம் முழுவதிலும் பக்தி இருப்பதில்லை அந்தப் படங்களிலும் இடையிடையே உலக இன்பங்கள் பற்றிய காட்சிகள் இடம்பெறும். எனவே அவற்றைப் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. விரதம் இளகும் போது பாசுரங்களைப் பாராயணம் செய்தல் நல்ல பழக்கமாகும்.
துவாதசி விரதம் முடிந்ததும் மாலை வேளையில் பெருமாள் சன்னதிக்கு போய் இறைவனை வணங்கிய பின்பு வீட்டிற்கு வந்து எளிய உணவை உண்டு விரதத்தை முடித்து வைக்க வேண்டும் அதன் பிறகு உறங்கப் போகலாம்.
தூய்மைச் சடங்கு
விரதம் இருந்து பட்டினி கிடப்பதால் வயிறு சுத்தமாகும். குடலின் நீண்ட கால அடைப்புகளும் கழிவுகளும் வெளியாகும்.
செறினான் உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கும். இஸ்லாம், கிறிஸ்துவம் பின்னரே பிற சமயங்களிலும் உண்ணா நோன்பு சடங்குகள் உள்ளன.
இதனை cleansing ritual for the body and soul என்பர். மனதின் கசடுகள் வெளியேறும். பெருமாளை பற்றியே சதா சிந்தித்துக்கொண்டு இருக்கும்போது பேராசை, பொறாமை, அகங்காரம் போன்ற தீய இயல்புகளுக்கு மனதில் இடம் இருக்காது. அவை தாமாக வெளியேறி விடும்.
இறைபக்தியும் தர்ம சிந்தனையும் மனதில் இடம்பிடிக்கும். எனவே தன் ஆசைகளை ஒறுத்து (விலக்கி, தண்டித்து) விரதம் இருப்பதால் ஆன்மாவும் யோக சாதனமான உடம்பும் சுத்தமாகும். (உடம்புக்கும் மனதுக்கும் Overhauling செய்த effect கிடைக்கும்.).
விரதத்துக்குப் பின்பு மனித நேயமும் உதவி மனப்பான்மையும் தோன்றும். பக்தியும் விரதமும் உள்ளவர்களால் பிறரை வெறுக்க இயலாது. எல்லோரிடமும் அன்பாகப் பழகுவர்.
மாயோனும் விஷ்ணுவும்
தொல்காப்பியம் கூறும் மாயோனை ஆயர் அல்லது யாதவ குளத்தில் தோன்றிய மாயக் கண்ணனுடன் ஒப்பிட்டாலும் இரண்டும் ஒன்றல்ல. விஷ்ணு அல்லது பெருமாள் என்ற கடவுள் வழிபாடு விஜயநகர பேரரசர் காலத்திற்கு பிறகு தென்னாட்டிற்கு அறிமுகமாயிற்று.
வைணவ மன்னர்களான நாயக்கர்கள் தம் ஆட்சியில் தமிழகத்தில் ஊர்தோறும் ராமசாமி, கோபால் சாமி, கிருஷ்னசாமி கோயில்களை கட்டினர்.
ராமன் , கிருஷ்ணன் வழிபாடுகள் செல்வாக்குப் பெற்றன. பிற் சங்க காலத்து நூல்களில் கிருஷ்ணாவதர கதைகள் சுட்டப்பட்டாலும் பெருமாள் வழிபாடு பெரு வழக்கில் இல்லை.
மன்னர் எவ்வழி மக்கள் அவ்வழி
பௌத்த சமயம் வாதங்களில் தோற்கடிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட பின்பு அவர்களின் சில கோயில்கள், மடங்கள், ஆகரமங்கள் ( பூந்தோட்டம், மூலிகைத் தோட்டம்) ஆகியன பெருமாள் கோயில்களாக மாற்றம்.பெற்றன. கவுதம் புத்தர் பெருமாளின் அவதாரம் (synchronize) எனப்பட்டார்
. அதன் பின்பு வடநாட்டில் பின்பற்றப்பட்டு வந்த பல சமயச் சடங்குகளும் வழிபாட்டு முறைகளும் மன்னர்களால் தென்னாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. அவர்கள் விரதம் இருந்தனர். கைசிகி விரதத்துக்காக ஓராண்டு ஸ்ரீ ரங்கத்தில் மன்னர் காத்திருந்த நிகழ்வுகளும் நடந்தன.
மன்னர்களைப்.பன்பற்றி மக்களும் பெருமாளுக்குரிய முக்கிய விரதமான ஏகாதசி விரதத்தைத் தொடங்கினர். ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு நாட்கள் பெருமாள் பக்தர்கள் இவ்விரதம் இருந்தனர்.
வடநாட்டில் ஏகாதசி விரதம் இருப்பார் ஏராளம் உண்டு. அவர்கள் அரிசி தவசி (grains)எடுத்துக் கொள்வதில்லை. பயறு பச்சை (legumes) சாப்பிடுவதில்லை. பூமிக்கு அடியில் விளையும் வெங்காயம் வெள்ளைப்பூண்டு மற்றும் கிழங்குகளை உட்கொள்வதில்லை.
தென்னாட்டிலும் இவ்விரத முறைகளைப் பலரும் பின்பற்றுகின்றனர். ஆண்டுதோறும் 24 முதல் 26 ஏவாதசி நாட்கள் வருகின்றன வளர்பிறையிலும் தேய்பிறையிலும் வரும் ஏகாதசி நாட்களில் தொடர்ந்து விரதம் இருந்து வருவது எல்லா நன்மைகளையும் வழங்கும். இவற்றைக் குறித்து அடுத்த கட்டுரையில் காண்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |