மாதந்தோறும் ஏகாதசி விரதம்
ஒரு ஆண்டில் 24 முதல் 26 ஏகாதசிகள் வரை வரும். பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வளர் பிறைக் காலத்தில் ஒன்றும் தேய்பிறைக் காலத்தில் ஒன்றுமாக வருவது இயல்பு.
சித்திரை ஏகாதசி விரதங்கள்
காமாதக ஏகாதசி சித்திரை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி ஆகும். இன்று விரதம் இருப்பவர்கள் அவர்கள் ஆசைப்பட்டதை அடையலாம். அவர்களின் சகல ஆசைகளும் நிறைவேறும். சித்திரை மாதம் தேய்பிறையில் வருவது பாபவிமோசனி ஏகாதசி.
இந்த ஏகாதசி அன்று விரதம் இருப்பது பாவங்களை தொலைக்கும் என்பதனால் இதனை பாபவிமோச்சனி ஏகாதசி என்றனர். இந்த ஏகாதசி விரதம் ஆயிரம் பசுக்களைத் தானம் செய்த பலனைக் கொடுக்கும். இந்த ஏகாதசியில் சதுர் புஜ விஷ்ணுவை வணங்க வேண்டும். நான்கு கரங்களைக் கொண்ட பெருமாள் உள்ள கோயில்களுக்குச் சென்று சேவித்து வந்தால் பாவ விமோசனம் பெறலாம்.
வைகாசி ஏகாதசி விரதங்கள்
வைகாசி மாதம் வளர்பிறை நாட்களில் வரும் ஏகாதசி என்று மோகினி ஏகாதசி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. அன்று உப்பில்லா பண்டங்களை உண்டு விரதத்தை முடிக்க வேண்டும். பார்லி சுண்டக்கடலை, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை உண்ணக்கூடாது. ஏழை எளியவர்களுக்கு அன்னதானமும் வஸ்திர தானமும் செய்த பிறகுதான் விரதத்தை முடிக்க வேண்டும். இது பொது நலம் பேணும் ஏகாதசி விரதம் ஆகும்.
மோகினி விரதத்தன்று விஷ்ணுவை மோகினி வடிவில் கண்டு வணங்க வேண்டும். பாற்கடலை மந்திர மலையை மத்தாகவும் வாசுகி என்ற பாம்பை கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது மலையின் அழுத்தம் தாங்காமல் பாம்பு தன் ஆலகால விஷத்தைக் கக்கியது.
அதன் பிறகு அமுதம் வெளிப்பட்டது. அந்த அமுதத்தை அசுரர்களுக்குக் கொடுக்கக் கூடாது. தேவர்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் விஷ்ணு மோகினி என்ற பெண்ணாக உருக்கொண்டு வந்தார். அவர் நல்லவருக்கு உதவுகிறவர். இந்த மோகினி விரதம் இருந்தால் தீமைகள் விலகி நன்மைகள் நடக்கும்.
வைகாசி மாத தேய்பிறை காலத்தில் வரும் ஏகாதசி அன்று மேற்கொள்ளும் விரதம் வருதிணி ஏகாதசி விரதம் எனப்படும். இந்த விரதத்தால் நம்மைத் தாக்க வரும் தீய சக்திகளில் இருந்து நாம் என்று தப்பிக்கலாம். இறைவன் பில்லி, சூனியம், ஏவல், பேய் பிடித்தல் போன்றவற்றிலிருந்து பக்தர்களை காப்பார். வாழ்க்கையில் தீய ஆவிகளின் தொந்தரவு உள்ளவர்கள் தொடர்ந்து இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
ஆனி ஏகாதசி விரதங்கள்
ஆனி மாசம் வளர்பிறைக் காலத்தில் வரும் ஏகாதசி அன்று விரதம் இருப்பதை பற்றி பாண்டவர்களில் ஒருவரான பீமன் கிருஷ்ணனிடம் கேட்டு அறிந்தான். அதனால் இந்த ஏகாதேசியை பாண்டவ நிர்ஜல ஏகாதசி என்றும் அழைக்கின்றனர் சிலர் பாண்டவர் பீம ஏகாதசி என்பர் பீம சேனி ஏகாதசி என்பாரும் உளர் பெண்கள் தங்கள் தாலி பாக்கியம் நிலைப்பதற்காக நிர்ஜல ஏகாதசி விரதம் இருப்பதுண்டு. விரதம் முடிந்ததும் அன்னதானம் வஸ்திர தானம் செய்வார்கள்.
ஆனி மாதம் தேய்பிறைக் காலத்தில் இருக்கும் ஏகாதசி விரதத்திற்கு பெயர் அபர ஏகாதசி ஆகும். இதுவும் கிருஷ்ணர் பாண்டவர்களுக்குக் கற்றுக் கொடுத்த ஏகாதசி விரதம் ஆகும். ஆனால் இந்த விரதத்தின் மகிமையை கிருஷ்ணர் தர்மருக்குக் கற்றுக் கொடுத்தார்.
ஆடி ஏகாதசி விரதங்கள்
ஆடி மாதத்தில் வளர்பிறைக் காலத்தில் வரும் ஏகாதசி விரதத்துக்குப் தேவசயணி விரதம், அசதி ஏகாதசி விரதம், பத்ம ஏகாதசி விரதம் எனப் பல பெயர்கள் உண்டு. ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று பெருமாள் தனது ஆயிரம் நாவும் ஆயிரம் தலையும் உடைய ஆதிசேஷனில் அறி துயில் கொள்ளப் போகிறார். எனவே இந்நாளுக்கு தேவ சயன ஏகாதசி என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்நாளை அசதி ஏகாதசி என்றும் அழைப்பார்கள் மகாராஷ்டிரா பந்தர்பூரில் ஆயிரக்கணக்கான பெருமாள் பக்தர்கள் அன்று கோவிலுக்குப் போய் இறைவனை வணங்குவர். நம்மூர் வைகுண்ட ஏகாசி போல் இங்கு தேவ சயன ஏகாதசியை கொண்டாடுவர். இந்த ஏகாதசி விரதத்தன்று பயறு பச்சை, தானியங்கள், தேன், இறைச்சி மற்றும் வெங்காயம், பூண்டு சாப்பிடக் கூடாது. மறுநாள் துவாதசி காலையில் விரதம் விடும் போது பால், தேன், சர்க்கரை மற்றும் மாவு பண்டங்களைச் சாப்பிட்டு விரதம் விடலாம்.
இம்மாதத்தை தொடர்ந்து வரும் அடுத்த நான்கு மாதங்களும் சதுர் மாதங்கள் எனப்படும். இந்நான்கு மாதங்களிலும் எவ்வித நல்ல காரியங்களையும் செய்யக்கூடாது. ஏனெனில் இன்று இறைவன் உறங்கத் தொடங்குகின்றான். நான்கு மாதங்கள் கழித்து தான் அவன் விழிக்கின்றான். இறைவன் உறங்கும் போது நல்ல காரியங்கள் செய்யக் கூடாது.
ஆடி ஏகாதசி விரதங்கள்
ஆடி மாதம் தேய்பிறை நாட்களில் வரும் ஏகாதசியை யோகினி ஏகாதசி என்பர். யோகினி ஏகாதசி விரதம் என்பது ஆயிரம் அந்தணர்களுக்கு அன்னதானம் செய்த பலனை அளிக்கும். ஆடி மாதம் தேய்பிறை காலத்தில் வரும் ஏகாதசி அசல ஏகாதசி ஆகும். இதனை அபர ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசியில் விரதம் இருந்தால் பாவம் விலகும்.
ஆவணி ஏகாதசி விரதங்கள்
காமிக ஏகாதசி ஆவணி மாதம் தேய்பிறை காலத்தில் வரும் ஏகாதசிஆகும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களிலும் தேய்பிறை காலத்தில் வரும் ஏகாதசிகளில் விரதம் இருந்தால் பித்ரு தோஷம் நீங்கும். அவரவர் ஆசைப்பட்டது கிடைக்கும். பவித்ரோபன ஏகாதசி, ஷ்ரவண புத்திரத ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசி விரதங்கள் ஆவணி மாத வளர்பிறை அன்று மேற்கொள்ளப்படும். இந்த நாட்களில் விரதம் இருப்பவர்களுக்கு குழந்தைப் பேறு சித்தி ஆகும்.
புரட்டாசி மாத ஏகாதசிவிரதங்கள்
புரட்டாசி மாத வளர்பிறை நாட்களில்வரும் ஏகாதசியைப் பார்சுவ ஏகாதசி, என்பர். இதனை வாமன ஏகாதசி என்றும் ஜெயந்தி ஏகாதசி என்றும் அழைப்பர். விஷ்ணு இன்று இடது புறம் இருந்து வலது புறம் திரும்பிப் படுப்பார் என்பது ஒரு நம்பிக்கை.
பார்சுவ பரிவர்த்தனி ஏகாதசி என்றும் இந்த நாள் அழைக்கப்படுகின்றது. இவ் விரதத்தை மேற்கொள்வோருக்கு மகிழ்ச்சியும் சமாதானமும் கிடைக்கும். புரட்டாசி மாதம் தேய்பிறை காலத்தில் வரும் ஏகாதசி அன்னதா ஏகாதசி விரதம் ஆகும். அஜா ஏகாதசி என்றும் அழைப்பர். இந்த விரதம் இருந்தால் ஆயுள் காலம் முழுக்க நல்ல உணவு கிடைக்கும். பசி பட்டினி என்ற நிலை வராது.
ஐப்பசி ஏகாதசி விரதங்கள்
ஐப்பசி மாத வளர்பிறை நாட்களில் வரும் ஏகாதசியை பாசாங்குச ஏகாதசி பாபங்குச ஏகாதசி என்று பல பெயர்களால் அழைப்பர். இவ்விரதம் இருந்தால் ஐம்புலன்களையும் அடக்கி ஆளும் திறம் கிடைக்கும். அன்றைக்கு பத்மநாபன் வடிவில் உள்ள பெருமாளை வணங்க வேண்டும்.
தேய்பிறை நாட்களில் வரும் ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படும்.அன்று விரதம் இருந்தால் பித்ருக்கள் மோட்சம் அடைவார்கள். ஆனால் இவ்விரதத்தோடு கண்டிப்பாக தான தர்மங்கள் செய்ய வேண்டும்.
கார்த்திகை ஏகாதசி விரதங்கள்
கார்த்திகை மாதம் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசியை பிரபோதனை ஏகாதசி விரதம் மேற்கொள்ளப்படுகிறது இதனை தேவ வதனி ஏகாதசி. கார்த்திகி ஏகாதசி என்பர் அன்று யோக நித்திரையிலிருந்து பெருமாள் கண் விழிக்கும் நாளாகும். ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் யோக நித்திரையில் இருக்கும் பெருமாள் கார்த்திகை மாச ஏகாதசி அன்று கண் விழிப்பார். எனவே தேவ வதனி ஏகாதசி என்றும் இந்த ஏகாதசியை அழைக்கின்றனர்.
கைசிக புராணம்
கைசிக ஏகாதசி என்றும் கார்த்திகை வளர்பிறை ஏகாதசியை அழைப்பார்கள். அன்றைக்கு விஷ்ணுவின் மீது பாடப்பட்ட கைசிகப் புராணத்தை விரதம் இருப்போர் பாட வேண்டும் , நம்பாடுவான் என்ற பக்தரின் பக்தியை நினைவு கூரும் வகையில் இவ்விரதம் மேற்கொள்ளப்படுகிறது. திருக்குறுங்குடி என்னும் ஊரில் உதித்த திருக் குறுங்குடி நம்பி கைசிகப் பண் பாடினார்.
அன்று வரத பெருமாள் கைசிகப் புராணத்தை உபதேசித்தார் என்றும் கூறுவர். பூ தேவியார் வராகப் பெருமானிடம் 'உலக மக்கள் உய்வதற்கு என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டதற்கு பெருமாள் கைசிகப்புராணத்தை உபதேசித்து கைசிக விரதம் இருக்கும் படி கூறினார் என்றும் கதை உண்டு. கைசிகி புராணம் ரணியாட்சனுடன் போர் நடந்த பின்பு பெருமாள் அமைதியாக எழுந்தருளியிருந்த நிலையில் உருவானதாகும்.
பிரம்ம ராட்சனின் கதை
கார்த்திகை மாசம் வளர்பிறை ஏகாதசி அன்று தாழ்த்தப்பட்ட பாணர் குலத்தில் சேர்ந்த பெருமாள் அடியார் ஒருவர் இறைவனைத் தரிசிக்க இரவில் கோவிலுக்கு வந்து கொண்டிருந்தபோது ஒரு பிரம்ம ராட்சசன் அவரை மறித்து 'நான் 10 நாட்களாக பசியோடு இருக்கிறேன் இப்போது உன்னை உண்ணப்போகிறேன்' என்றான் அதற்கு அந்த அடியார் 'நான் பெருமாளை சேவிக்க போகின்றேன்.
இன்றைக்கு ஏகாதசி விரதம் இருக்கின்றேன். நான் போய் அவரை சேவித்து விட்டு வந்ததும் என்னை நீ உணவாக ஏற்றுக் கொள்' என்றார். அவர் சொல்வதை பொய் என்று சொல்லி ராட்சசன் நம்ப மறுத்தான். ஆனால் பாணரோ 'நான் பொய் சொல்ல மாட்டேன். கண்டிப்பாக இவ்வழியே நான் திரும்பி வருவேன். எனக்காகக் காத்திரு' என்று சொல்லிவிட்டு சென்றார்.
அவர் பெருமாளைத் தரிசித்து விட்டுத் திரும்பி வரும்பொழுது பெருமாளே ஒரு கிழவர் வேடத்தில் தோன்றி 'இந்த வழியில் போகாதே, ராட்சசன் ஒருவன் பசியோடு காத்திருக்கிறான்' என்றார். அதற்கு பாணர் 'அவன் எனக்காகத் தான் காத்திருக்கின்றான். நான் அவனுக்கு உணவாகத்தான் போகின்றேன்' என்று சொல்லிச் சென்றார்.
பாணர் திரும்பி வந்ததைப் பார்த்ததும் அந்த ராட்சசனுக்கு நம்ப இயலவில்லை.' ஐயா உன் பக்தியின் பலனை எனக்குக் கொடு' என்றார். 'நான் பலனைக் கருதி பக்தி செலுத்தவில்லை. என் பக்தியின் பலன் என்னவென்று எனக்குத் தெரியாது' என்றார்.
அப்போது அந்த ராட்சசன் நான் முற்பிறை பிறவியில் சோம சர்மா என்ற பிராமணராகப் பிறந்தேன். சாபத்தால் இப்படி பிரம்ம ராட்சசன் ஆகத் திரிகிறேன். என்னை இந்த சாபத்திலிருந்து விடுவிக்க நீ பாடிய பாடலின் பலனை எனக்குக் கொடு. என்று கேட்க பாணர் கைசிக ராகத்தில் வரும் பாடலைப் பாடி அதன் பலனை அவனுக்குக் கொடுத்தார். அவன் சாப விமோசனம் பெற்றான்.
365 சால்வை சாற்றுபடி திருக்குறுங்குடியில் கைசிக ஏகாதசி அன்று இரவு 9 மணிக்கு மேல் திருமஞ்சனமாகி பெருமாளுக்கு 365 சால்வைகள் சாற்றப்படுகின்றன. ஒரு வஸ்திரத்துக்கு மேல் இன்னொன்று என சாற்றுவதால் நம்பருமாள் ஒரு வஸ்திர மலை மேல் நிற்பது போல காட்சி அளிப்பார். இரவு 12 மணிக்கு மேல் பராசர பட்டர் வம்சத்தில் வந்த ஆச்சாரிய சுவாமிகள் அவரவர் முறைப்படி பராசர பட்டர் அருளி செய்த வியாக்கியானத்துடன் கைசிகப்புராணத்தை அங்கு வாசிப்பார்கள்.
ஓராண்டு தங்கியிருந்த மன்னன்
ஒருமுறை ஸ்ரீரங்கத்திற்கு கைசிக ஏகாதசி அன்று வந்துசேர்ந்து விட வேண்டும் என்று கருதி மன்னன் ஒருவன் விரைவாக தன் படை பரிவாரங்களுடன் வந்தான். ஆனால் அவன் வருவதற்குள் கைசிக ஏகாதசி முடிந்து விட்டது. என்ன செய்வது என்று தோன்றாமல் அவன் ஸ்ரீரங்கத்திலேயே தங்கிவிட்டான்.
ஓராண்டு இங்கேயே தங்கி இருந்து மற்ற ஏகாதசி விரதங்களை எல்லாம் சிறப்பாக முடித்துக் கொண்டு, பிறகு மறுஆண்டில் கார்த்திகை வளர்பிறையில் வரும் கைசிக ஏகாதசி விரதத்தை முடித்துவிட்டு மறு மாதம் வரும் வைகுண்ட ஏகாதசி விரதத்தையும் முடித்துவிட்டு பின்பு இங்கிருந்து புறப்பட்டுப் போனான் என்று ஒரு கதை உண்டு.
கார்த்திகை மாசம் தேய்பிறைக் காலத்தில் வரும் ஏகாதசி
பிரமோதனி ஏகாதசி எனப்படும். இது மிகவும் சிறப்பு வாய்ந்த விரதம் ஆகும். ரமா ஏகாதசி விரதம் என்றும் அழைக்கப்படும். தீபாவளிக்கு முன்பு வரும் ஏகாதசி அன்று இவ்விரதம் மேற்கொள்ளப்படும். ரமா ஏகாதசி விரதம் இருப்பவர்களுக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும், அல்லது 100 ராஜசூயம் வேட்ட பலன் கிடைக்கும். மறுமைக்கு மோட்சமும் கிட்டும்.
மார்கழி வளர்பிறை வைகுண்ட ஏகாதசி
மார்கழி மாதம் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசியை வைகுண்ட ஏகாதசி, முக்தி ஏகாதசி மோட்சதா ஏகாதசி, சொர்க்கவாசல் ஏகாதசி (கேரளா) என்று பலவாறாக அழைப்பார்கள். ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து வரும் மக்களுக்கு வைகுந்தம் தானாக திறந்து வழிபடும் என்பது ஒரு நம்பிக்கை.
மற்ற ஏகாதசி விரதங்கள் வைக்காதவர்கள் கூட வைகுண்ட ஏகாதசி என்று உண்ணா நோன்பு இருந்து மறுநாள் துவாதசி அன்று விரதம் விடுவது உண்டு . .சாமானியரும் வைகுண்ட ஏகாதசி விரதம் இருந்து வருகின்றனர். மார்கழி மாதம் தேய்பிறை காலத்தில் வரும் ஏகாதசி உத்பண்ண ஏகாதசி எனப்படும்.
இந் நன்னாளில் விஷ்ணுவை அசுரனிடம் இருந்து காப்பற்றிய ஏகாதசி என்பவள் பிறந்தாள். அவள் பெயரால் எல்லா ஏகாதசி விரதங்களும் மேற்கொள்ளப் படுகின்றன.
தை ஏகாதசி விரதங்கள்
தைமாசம் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி விரதம் பவுச புத்திரதா ஏகாதசி விரதம் என்றும் கவச புத்திரதா ஏகாதசி என்றும் அழைக்கப்படும். குழந்தை இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை மேற்கொண்டால் நல்ல ஆரோக்கியமான குழந்தை பிறக்கும்.
இதனை சிரம புத்திரதா ஏகாதசி என்றும் அழைப்பார்கள் வடநாட்டில் நிறைய பேர் இந்த விரதத்தை இருந்து தங்கள் குழந்தைகளின் நன்மைக்காக இவ்விரதம் மேற்கொள்வர். தை மாதம் தேய்பிறை நாட்களில் வரும் ஏகாதசி ஸஃபல் ஏகாதசி, திலதா ஏகாதசி என்றும் அழைப்பர். எனப்படும். விஷ்ணு வழிபாட்டில் ஆறு முறைகளில் எள்ளை பயன்படுத்த வேண்டும். இது பித்ருக்களின் தோஷம் போக்கும் விரதமாகும்.
மாசி ஏகாதசி விரதங்கள்
மாசி மாதம் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசி விரதம் ஜெய ஏகாதசி எனப்படும். இந்த விரதத்தைக் கடைப் பிடித்தால் பேய், பில்லி, சூனியங்கள் இருப்பவருக்கு அவை எதுவும் தாக்காது. மாசி மாசம் தேய்பிறை காலத்தில் வரும் ஏகாதசியை திலத ஏகாதசி என்றும் ஷட்டில் ஏகாதசி என்றும் அழைப்பார்கள். அன்று விஷ்ணு வழிபாட்டில் எள் ஆறு வகையில் பயன்படுத்தப்படும் . இது முக்தியை வழங்கும் விரதமாகும். இம்மைக்கு செல்வத்தையும் மறுமைக்கு முத்தியையும் வழங்கும்.
பங்குனி ஏகாதசி விரதங்கள்
பங்குனி மாதம் வளர்பிறை காலத்தில் வரும் ஏகாதசியை விஜய ஏகாதசி, அமலாகா ஏகாதசி என்பர். அன்று விரதம் இருந்தால் அதிர்ஷ்டமும் செல்வமும் கூடி வரும். அன்றைக்கு அமலா எனப்படும் நெல்லிக்காய் மரத்திற்கு சிறப்பு வழிபாடுகள் செய்யவேண்டும். பங்குனி மாசம் தேய்பிறைக் காலத்தில் வரும் ஏகாதசியை விஜய ஏகாதசி என்று அழைக்கின்றனர். அன்று விரதம் இருந்தால் சகல விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும்.
கூடுதல் ஏகாதசி
சில மாதங்களில் நாட்களின் எண்ணிக்கை கூடுவதால் ஓரிரண்டு ஏகாதசிகள் கூடுதலாக வரும். இதனை அதிகமாச ஏகாதசி என்பர். ஆண்டுக்கு 12 மாதங்கள் இருப்பதால் மாதத்திற்கு இரண்டு ஏகாதசி வீதம் 24 ஏகாதசிகள் வரும் சில சமயம் ஓர் இரண்டு ஏகாதசி நாட்கள் கூடிவிடும். அதனை அதிக மகா ஏகாதசி என்பர்.
வசந்த காலத்தில் வரும் அதிகமகா ஏகாதசியை பத்மினி விசுத்த ஏகாதசி என்பர். இது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருவதாகும். குறிப்பாக தேய்பிறைக் காலத்தில் வரும் ஏகாதசியை பத்மினி விசுத்த ஏகாதசி என்பர். பழைய பாவங்களை தீர்ப்பதற்கு இந்த ஏகாதசி விரதம் உதவும். பரம சுத்த ஏகாதசி அல்லது புருஷோத்தம கமல ஏகாதசியும் அதிகமாசம் காலத்தில் தேய்பிறை நாட்களில் வரும் ஏகாதசி ஆகும். இந்த ஏகாதசி விரதமும் பழைய பாவங்கள் தீர உதவும்.
கடந்த 500 ஆண்டுகளாக வைணவ சம்பிரதாயத்தில் சிறப்பிடம் பெற்றுள்ள ஏகாதசி விரதத்தை வைதிக வைணவர்கள், தெலுங்கு மொழிக்காரர்கள், யாதவர்கள் போன்றோர் குடும்பங்களில் வாழும் மூத்த குடியினர் தொடர்ந்து கடைப்படிக்கின்றனர். இளைய சமுதாயத்தினர் கோயில்களுக்கு போகின்றனர் ஆனால் விரதங்களை மேற்கொள்வதில்லை. இவர்களும்.பட்டினி விரதங்களைப் பழகிக் கொள்ள வேண்டும். அதனால் அவர்களின் உடலும் மனமும் உரமும் ஊக்கமும் பெறும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |