மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
2ஆம் நாள் மயானக்கொள்ளை விழா விமரிசையாக நடந்தது. விழாவின் 5வது நாளான நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது.w
இதையொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
உற்சவர் அம்மனை பிற்பகல் 2 மணியளவில் பல்லக்கில் பூசாரிகள் அக்னி குளத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர்.
பின்பு பம்பை , மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று மாலை 4 மணியளவில் அக்னி குண்டம் முன்பு அம்மன் எழுந்தருளினார்.
பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்ததை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவின் 6வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |