கடலில் மூழ்கி மீண்டும் தோன்றும் அமானுஷ்ய சிவன் கோயில்
அமானுஷ்ய சிவன் கோயில் குறித்து இத்தொகுப்பில் பார்ப்போம்.
நிஷ்கலங்க் மகாதேவ்
குஜராத், பாவ்நகர் மாவட்டம், கோலியாக் கிராமத்தில் நிஷ்கலங்க் மகாதேவ் என்ற கோயில் அமைந்துள்ளது. இங்கு 5 சுயம்பு லிங்கங்கள் உள்ளது. 5 சிவலிங்கங்களும் ஒரு சதுர மேடையில் அமைந்துள்ளன..
ஒவ்வொரு லிங்கத்திற்கும் ஒரு நந்தி உள்ளது. குறிப்பாக இந்த கோயிலின் அதிசயம் என்னவென்றால், கடலுக்கு அடியில் அமைந்துள்ளது. இதற்கு செல்லும் பாதை நள்ளிரவு முதல் மதியம் வரை தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. கோயிலின் 20 அடி தூண் மட்டுமே தெரியும்.
அந்த சமயத்தில் கடல் நீர் மட்டம் கோயில் கொடிமரத்தின் உச்சி வரை இருக்கும். தொடர்ந்து மதியம் 1:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை பக்தர்கள் நடந்தே கோயிலுக்கு செல்கிறார்கள். மறுபடியும் இரவு 10 மணிக்கு நீர்வரத்து அதிகரித்து, கோயில் கடல் நீரில் மூழ்கும்.
கடலில் மூழ்கும் அதிசயம்!
பிறகு மறுநாள் மதியம் தோன்றும். இது பாண்டவர்களால் கட்டப்பட்டுள்ளது. பாண்டவர்கள் தங்கள் உறவினர்களை போரில் கொன்றதால், அவர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாண்டவர்கள் கிருஷ்ணரை சந்தித்து, தங்களது பாவங்களை போக்க என்ன வழி என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் ஒரு கருப்பு கொடியையும் ஒரு கறுப்பு பசுவையும் தந்து அதனை பின்பற்றும்படியும், கொடியும் பசுவும் வெள்ளையாக மாறும்போது பாவங்கள் நீங்கும். பின் மன்னிப்பு கிடைத்ததும் சிவனை நினைத்து தவம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, கோலியாக் கடற்கரைக்கு வந்ததும்தான், அவை இரண்டும் வெள்ளை நிறத்திற்கு மாறியுள்ளது.
உடனே, சிவனை நினைத்து தியானம் செய்துள்ளனர். இதனையடுத்து சிவபெருமான், சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும் சிவலிங்கம் வடிவில் காட்சியளித்துள்ளார். அவ்வாறுதான் 5 சுயம்பு லிங்கங்கள் தோன்றியதாக வரலாறு. இதன் மூலம் முன்னோர்களின் சாம்பலை இந்த நீரில் கரைத்தால், முக்தி அல்லது மோட்சத்தை அடைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.