வினைபதிவு என்றால் என்ன? கர்மா எவ்வாறு பிரதிபலிக்கிறது?
வினைப் போமேயொரு தேகங் கண்டாய்
வினை தானொழிந்தால் தினைப் போதளவும் நில்லாது கண்டாய்...
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.
இந்த வினை என்றால் என்ன அது எப்படி பதிவாகிறது, எப்படி செயல்படுகின்றது என்பதை தான் இந்த பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.
எல்லாம் விதிப்படி தான் நடக்கும் என்று சொல்கிறார்கள் சிலர், உனது கர்மாவின் படி தான் உனக்கு நல்லது கெட்டது அனைத்தும் நடக்கும் என்று சொல்கிறார்கள் சிலர், கடவுள் நமக்கு அனுக்கிரகம் செய்யும் படி தான் வாழ்க்கை நடக்கும் என்று சொல்கிறார்கள் சிலர்.
உங்கள் ஜாதகத்தில் கட்டம் சரி இல்லை, பரிகாரங்கள் செய்ய வேண்டும், குறிப்பிட்ட சில ஆலயங்களுக்கு செல்ல வேண்டும், அப்போது தான் உங்கள் துன்பங்கள் சரியாகும் என்கிறது ஒரு கூட்டம், இது எல்லாம் ஒரு புறம் இருக்க விதியை மதியால் வெல்லாம் என கூறும் கூட்டமும் இருக்கிறது.
துன்பம் மறைய வழி கேட்டால் இவர்கள் சொல்லும் பதில்களே நமக்கு பாதி துன்பத்தை வரவழைக்கிறது..!!
சரி உண்மையை அறிவோம்.. உண்மையில் நமக்கு துன்பம் வருவதற்கு காரணம் நாம் மட்டும் தான், இயற்கை அற்புதமான ஒரு விதியை கொண்டுள்ளது, அது தான் செயலுக்கு ஏற்ற விளைவை ஏற்படுத்தி நம்மை குறிப்பிட்ட சூழ்நிலையை சந்திக்க வைத்து இன்ப துன்ப அனுபவமாக மாற்றம் அடைகின்றது.
இன்னும் தெளிவாக ஒரு உதாரணத்துடன் பார்ப்போம், மழைக்கு ஒதுங்கி சிலர் கடையின் ஒரு பகுதியில் இரவு நேரத்தில் தஞ்சம் அடைகிறார்கள் என வைத்துக்கொள்வோம்.
மழை அதிகரிக்கின்றது கூட்டமும் அதிகமாகிறது, நெரிசல் அதிகமானதால் ஒருவர் காலை ஒருவர் மிதித்து விடுகிறார், வலியால் மிதிப்பட்டவன் கத்தினாலும், இருட்டு தானே யாருக்கு தெரிய போகிறது என, மிதித்தவன் நினைத்து அமைதியாக இருப்பானேயானால் இந்த செயல் அவனுக்கு விளைவை தரும் பதிவாக Record செய்யப்படுகின்றது.
அது எப்படி Record ஆகும் என்றால்.... அந்த செயல் 5 இடங்களில் Record ஆகும்.
1. மிதித்தவனின் - மிதி வாங்கியவனின் உணர்வுகள் அவர்கள் கருவியாக பயன்படுத்தப்பட்ட புலன் அதாவது அவர்களின் காலில் இருக்கும் செல்களில் பதிவாகும்.
2. அந்த நேரத்தில் இருவரின் மூளைகளிலும் அந்த உணர்வு பதிவாகும்.
3. அந்த நேரத்தில் விண்ணில் சுற்றிக்கொண்டு இருக்கும் கோள்களின் அலைகளில் பதிவாகும்.
4. இருவரின் உடலில் உயிர் உள்ளது அல்லவா அந்த உயிர் இருக்கும் கருமையத்தில் பதிவாகும்.
5. அவர்கள் நிற்கும் இடத்தில் இருக்கும் காந்த களத்தில் - Frequency ல் பதிவாகும்.
இந்த பதிவுகள் வலி ஏற்படடவனின் வேதனை அதை கொடுத்தவனுக்கு அதே மாதிரியான உணர்வை கொடுத்து சமன் செய்யும்.
இதற்கு இந்த பிரபஞ்சம் சரியான காலம் அதற்கு ஏற்ற சரியான சூழ்நிலை அதை செய்வதற்கு ஏற்ற மாதிரியான ஆள் என அனைத்து கணக்கையும் அந்த நொடியே முடிவு செய்து வைத்து விடுகிறது.
அது உடனேவும் ஏற்படலாம் தாமதமாகவும் ஏற்படலாம், நமக்கு நடக்காமல் நன் பிறவி தொடராய் இருக்கும் குழந்தைகளுக்கும் ஏற்படலாம், ஆனால் எப்படியும் நடந்ததே தீரும் என்பது கட்டாயம்.
இப்படித்தான் நாம் செய்த அனைத்து செயல்களும் பதிவாகி நாம் பிறந்தது முதல் இறக்கும் வரை அவ்விளைவுகளாக அனுபவித்து வருகிறோம்.
ஒரு குழந்தை பிறந்து அது நினைவு தெரியும் காலம் தொட்டு அதாவது 5 வயதில் இருந்து இந்த பதிவுகள் செயல்பட தொடங்கும்.
மீண்டும் செய்யும் செயல்கள் பதிவுகளாகவும் மாறும் இதை தான் சித்தர்கள் வினை பதிவுகள் என கூறுகின்றனர்.
இதை எப்படி சரி செய்வது வினை பதிவை அழிக்க முடியுமா இதனை அடுத்த பதிவில் காண்போம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |