பாண்டவர்களின் அஸ்வமேத யாகத்தையே மிஞ்சிய ஏழை குடும்பத்தின் தியாகம்
மகாபாரதத்தில் போருக்கு பிறகு பாண்டவர்கள் அஸ்வமேத யாகம் நடத்த முடிவு செய்தார்கள். அப்படியாக, அஸ்வமேத யாகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. யாகத்திற்கு நாடெங்கிலும் இருந்து மன்னர்கள், முனிவர்கள், அந்தணர்கள் என ஆயிரக்கணக்கான நபர்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானமும், தான தர்மமும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இந்த யாகத்திற்கு வந்தவர்கள் எல்லோரும் இவ்வளவு சிறப்பான யாகம் செய்ததே இல்லை. தர்ம புத்திரனின் புகழ் உலகம் முழுவதும் பரவட்டும் என்று பாராட்டினார். அந்த நேரத்தில் திடீரென ஒரு விசித்திரமான கீரிப்பிள்ளை யாகசாலைக்குள் வந்துவிட்டது.

அதன் உடலில் ஒரு பக்கம் முழுவதும் தங்க நிறமாக இருக்க, மற்றொரு பக்கம் சாதாரணமாகவே இருந்தது. அது யாகசாலையின் தரையில் புரண்டு எழுந்து வந்து, இல்லை இந்த யாகம் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை என்று கூறியது.
அது பேசுவதை கேட்ட எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். தர்மபுத்திரன் அந்த கீரிப்பிள்ளையிடம் நீ எப்படி இப்படி கூறுகிறாய் என்று கேட்கிறார்? அப்போது ஒரு பழைய நிகழ்வை அந்த கீரிப்பிள்ளை பேச தொடங்கியது. ஒரு காலத்தில் சிறிய கிராமத்தில் மிகவும் ஏழ்மையான ஒரு பிராமண குடும்பம் வாழ்ந்து வந்த வந்தார்களாம்.
அவர்கள் பல நாட்களாக உணவு உண்ணாமல் பட்டினியாக இருந்திருக்கின்றார்கள். ஒரு நாள் மிகவும் கஷ்டப்பட்டு சிறிதளவு மாவைப் பெற்று அதை நால்வரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்போது அவர்கள் சாப்பிட அமர்ந்த பொழுது வாசலில் ஒரு விருந்தினர் வந்து எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு ஏதேனும் உணவு கிடைக்குமா என்று கேட்டிருக்கிறார்.
உடனே அந்த பிராமணர் அவருடைய பங்கை அவருக்கு கொடுத்திருக்கிறார். இருப்பினும் விருந்தினரின் பசி அடங்கவில்லை. அதன் பிறகு அவரது மனைவியும் மகனும் மருமகளும் தங்களுடைய பங்கை ஒன்றன்பின் ஒன்றாக கொடுத்திருக்கிறார்கள்.
இறுதியில் அவர்கள் நால்வரும் பட்டினியாக இருந்தாலும் விருந்தினர் முழு வயிற்றுடன் சென்றார்கள் என்று மனத்திருப்தி அடைந்திருக்கிறார்கள். அந்த விருந்தாளியாக வந்தவர் சாதாரண மனிதர் அல்ல தர்ம தேவன். அவர்களின் தியாகத்தை சோதிக்க வந்திருக்கிறார்.
அந்த குடும்பத்தின் தன்னலமற்ற அன்பை கண்டு மகிழ்ந்த அவர் அந்த குடும்பத்திற்கு மோட்சம் அருளினார். அப்பொழுது நான் அந்த வீட்டில் தரையிலிருந்து உணவு துகள்களில் புரண்டு போது என் உடலின் ஒரு பக்கம் தங்கமாக மாறியது.

அதன் பிறகு அதே அளவுக்கு உயர்ந்த தானம் எங்காவது நடந்தால் என் உடல் முழுவதும் தங்கம் ஆகிவிடும் என்று எண்ணி பல யாகங்களுக்கு சென்றேன். ஆனால், எந்த யாகமும் தங்களின் கடைசி உணவை கூட பிறருக்காக தியாகம் செய்த அந்த ஏழை குடும்பத்தின் தியாகத்திற்கும் ஈடாக வரவில்லை.
அதனால், தான் என் உடலின் மீதி பகுதி தங்கமாக மாறவில்லை என்று அந்த கீரிப்பிள்ளை சொல்லியது. இதை கேட்டதும் யுதிஷ்டிரன் தலைகுனிந்தார். செல்வங்களை வழங்குவது மட்டுமே உயர்ந்த தானம் என்று ஆகிவிடாது. தன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் பிறருக்காக தானம் செய்யக்கூடிய மனமே உண்மையான தர்மம் என்று அவர் உணர்கிறார்.
அப்போது கிருஷ்ண பகவான் புன்னகையுடன் தானத்தின் மதிப்பு அதன் அளவில் இல்லை, நாம் வழங்கக்கூடிய மனத்தூய்மையில் தான் இருக்கிறது என்று கூறுகிறார். ஆக, இந்த நிகழ்வு நமக்கு ஒரு மிகப்பெரிய உண்மையை எடுத்துக்காட்டுகிறது.
இறைவன் நம்மை எப்பொழுதும் நம்மிடம் உள்ள செல்வத்தையும் பார்ப்பது இல்லை. நம்மிடம் இருக்கக்கூடிய அன்பு, தியாகம், தூய மனம் இவற்றை மட்டுமே பார்த்து நமக்கு அருளாசி வழங்குகிறார்.
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |