வாழ்க்கையின் துன்ப சிறையில் இருந்து தப்பிப்பது எப்படி?
மனிதன் அவன் கேட்டு பிறப்பு நடக்கவில்லை.விதியின் பயணமும் அவன் கையில் இல்லை.இதற்கு நடுவில் நடக்கும் போராட்டம் மிக சவாலானது தான்.அப்படியாக இன்பம் வந்தால் யாரும் ஏன் கடவுள் மகிழ்ச்சி கொடுத்தார்?இன்று நான் ஏன் இதை அனுபவிக்கிறேன் என்று வினா எழுப்புவதில்லை.
அதே துன்பம் நேர்ந்தால் இருக்கும் அனைத்து கடவுளையும் மண்டியிட்டு வேண்டி கதறுவார்கள்.இவ்வாறு நாம் செய்வதறியாது மாட்டி கொள்ளும் துன்பத்திற்கும் பெயர் தான் கர்ம வினை.நாம் வேண்டுமானால் முற்பிறவியில் செய்த பாவம் புண்ணியத்தை மறந்திருக்கலாம் ஆனால் அவை நம்மை மறப்பது இல்லை.
அப்படியாக இந்த துன்பத்தில் இருந்து விடுபட வழியே இல்லை என்றால் நிச்சயம் இருக்கிறது.அதை ஒரு சிறுகதையாக பார்ப்போம்.
ஒரு நாள் ஒரு நபர் நல்ல அனுபவம் கற்று தெளிந்த பெரியவரிடம் ஐயா!நான் எனது வாழ்க்கையில் துன்ப சிறையில் சிக்கி தவித்து கொண்டு இருக்கின்றேன் என்றார். அதற்கு அந்த பெரியவர் என்ன கரணம்?என்று கேட்டார்.
அந்த நபர் ஐயா எனக்கு வரும் துன்பம் எல்லாம் மற்றவர்கள் கொடுப்பதால் வருகிறது என்றார். சிரித்து கொண்டே பெரியவர்,என்ன?துன்பம் மற்றவர்களால் வருகிறதா?இல்லை துன்பம் உன் மனதால் மட்டுமே வரமுடியும் என்றார். அப்படியா சொல்கிறீர்கள்?
அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி என்று அந்த நபர் கேட்கிறார். அதற்கும் சிரித்து கொண்டே அந்த பெரியவர் வாழ்க்கையின் எதார்த்தத்தை புரிந்து கொள் அதுவே போதும் என்றார்.அதை எப்படி ஐயா புரிந்து கொள்வது என்று கேட்கிறார்? சரி இந்த கதையை கேள் என்று பெரியவர் ஒரு கதை சொல்கிறார்.
ஒருவர் ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது.காரணம் எலி அந்த மனிதனின் மனதில் எந்த ஒரு இடத்தையும் பிடித்திருக்கவில்லை.
மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.காரணம் கிளியை தான் செல்லப்பிராணியாக உணவளித்து வருகிறார்.இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது.
இப்போது அவர் மகிழவும் இல்லை,வருந்தமும் இல்லை.காரணம் அந்த குருவிக்கும் மனிதனுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.மேலும்,எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று.
அப்படியாக தனக்கு பிடிக்காத ஒன்றை பூனை பிடித்த பொழுது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை,துன்பமுமில்லை.
பெரியவர் சொன்ன கதையை கேட்ட நபர் சிந்திக்க தொடங்கினார்.அவன் மனம் கணம் இழப்பதை உணர்கின்றான்.துன்ப சிறையின் கதவுகள் திறக்க பட்டன. ஆக நாம் துன்பம் இல்லாத வாழ்க்கையை வாழ அதனின் எதார்த்தத்தை புரிந்து கொண்டாலே போதும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |