கார்த்திகை தீபம் வழிபாட்டிற்கு பழைய விளக்குகளை ஏற்றலாமா?
தமிழ் மாதம் 12 மாதங்களில் கார்த்திகை மாதம் மிகவும் சிறப்பான மற்றும் ஒளிநிறைந்த மாதமாக இருக்கிறது. இந்த 2025 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நவம்பர் 17ஆம் தேதி அன்று தொடங்கிய நிலையில் பக்தர்கள் தங்கள் வீடுகளில் தினமும் தவறாமல் வாசலில் விளக்கேற்றி வழிபாடு செய்ய தொடங்கி விட்டார்கள்.
அப்படியாக இந்த கார்த்திகை மாதத்தில் நாம் வீடுகளை சுற்றி நிறைய தீபங்களை ஏற்றி வழிபாடு செய்வது வழக்கம். அவ்வாறு தீபங்கள் ஏற்றும் பொழுது பக்தர்களுக்கு பல்வேறு வகையான சந்தேகங்கள் வருவது உண்டு.
அதில் மிக முக்கியமான சந்தேகம், நம் வீடுகளில் பயன்படுத்திய பழைய விளக்குகளை மீண்டும் பயன்படுத்தலாமா? என்பதே. அந்த வகையில் கார்த்திகை மாதத்தில் நாம் பழைய விளக்குகளை பயன்படுத்தலாமா? கார்த்திகை மாதத்தில் நம்முடைய வீடுகளில் எவ்வாறு தீபம் ஏற்றிவழிபாடு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்.

கார்த்திகை மாதம் என்றாலே எல்லோருக்கும் முதலில் நினைவுக்கு வருவது திருவண்ணாமலையில் நடக்கக்கூடிய மகா தீபம் வழிபாடுதான். அன்றைய தினம் பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் சிவபெருமானை காண்பதற்காக வருகை தந்து விடுவார்கள்.
மேலும் கார்த்திகை மாதத்தில் வீடுகளில் தவறாமல் காலை மாலை வேளையில் பூஜை அறையில் மட்டும் அல்லாமல் வீடுகளை சுற்றிலும் விளக்குகள் ஏற்றி ஒளி நிறைய செய்து நம் வழிபாடுகளை மேற்கொள்வோம். அவ்வாறு விளக்கு ஏற்றும் பொழுது மறவாமல் வீட்டு வாசலில் குறைந்தது இரண்டு அகல் விளக்குகளை நாம் ஏற்ற வேண்டும்.
இவ்வாறு ஏற்றும்பொழுது நம் வீடுகளில் சூழ்ந்துள்ள இருளை நீங்கி ஒளியை சேரும். அதோடு துளசி மடம் இருந்தால் அங்கு ஒரு அகல் விளக்கு கட்டாயம் ஏற்ற வேண்டும். இந்த விளக்கு நாம் விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிக்க கூடிய ஒரு தீபமாகும். அதேபோல் பூஜை அறையில் குத்துவிளக்கு மற்றும் ஒரு அகல் விளக்கை ஏற்ற வேண்டும்.

இவை நம் குடும்பத்தில் இருக்கக்கூடியவர்களினுடைய ஆரோக்கியத்தை மேன்மைப்படுத்துவதற்காக வைக்கக் கூடிய பிரார்த்தனையாகும். இவ்வாறு கார்த்திகை மாதம் முழுவதும் நம் வீடுகளில் விளக்கேற்றி வழிபாடு செய்வது அவசியமாகும்.
மேலும், நாம் வீடுகளில் வைத்திருக்க கூடிய அகல் விளக்குகளை மீண்டும் சுத்தம் செய்து அதற்கு மஞ்சள், குங்குமம் வைத்து எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றலாம். நாம் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக விளக்கு வாங்கி தான் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும் என்பது அல்ல.
முடிந்தவர்கள் இந்த ஆண்டிற்கான புதிய வருகையான விளக்குகளை வாங்கி ஏற்றி வழிபாடு செய்யலாம். முடியாதவர்கள் பழைய விளக்குகளை நன்றாக சுத்தம் செய்து மீண்டும் விளக்கேற்றலாம்.
| ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |