21 தலைமுறைகளின் பாவங்களை போக்கும் 15 நாட்கள் மகாளய பட்சம் வழிபாடு- எப்பொழுது தெரியுமா?
மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் அவர்களுடைய தலைமுறையினர் செய்த பாவங்களையும் சுமந்து செல்ல வேண்டிய கடமை உருவாகிறது. அப்படியாக நம்முடைய 21 தலைமுறைகளில் யாரேனும் தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவத்தினால் துன்பப்படுவதை போக்கக்கூடிய ஒரு அற்புத நாளாக புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையிலான பதினைந்து நாட்கள் மகாளய பட்சம் இருக்கிறது.
மகாளய பட்சம் எனப்படும் 15 நாட்களும் பித்ருலோகத்தில் இருக்கக்கூடிய நம்முடைய முன்னோர்கள் பூமிக்கு வந்து நம்முடன் தங்கி நாம் செய்யும் வழிபாடுகள் அனைத்தையும் ஏற்று நமக்கு ஆசிர்வாதம் வழங்கி நம்முடைய சந்ததியினர் செழித்து வளர அருள் புரிகிறார்கள்.
மேலும், மனிதர்கள் வாழ்நாளில் கட்டாயம் மூன்று கடன்களை அவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதில் முக்கியமான ஒன்றும் பித்ரு கடன். அதாவது ஆவணி மாத பௌர்ணமி பிறகு வரும் பிரதமையினால் தொடங்கி அடுத்து வரும் 15 நாட்களும் மகாளய பட்சம் என சொல்லப்படுகிறது.
மகாளய பட்ச காலத்தின் நிறைவாக வருவது மகாளய அமாவாசையாகும். வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டிய முக்கிய மூன்று அமாவாசைகளில் இந்த அமாவாசையும் ஒன்று. மகாளய பட்சமான 15 நாட்களுமே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது, தான தர்மங்கள் வழங்குவது போன்ற அனைத்து காரியங்களுக்கும் மிக உகந்த நாளாக கருதப்படுகிறது.
இந்த ஆண்டு மாகாளயபட்சமானது செப்டம்பர் 8ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 21ஆம் தேதி வரை இருக்கிறது. இந்த நாட்களில் நாம் கொடுக்கும் தண்ணீர் அவர்களின் தாகத்தை போக்குகிறது, நாம் படைக்கும் எள் கலந்த அன்னம் அவர்களின் பசியையும் போக்குவதாக சொல்கிறார்கள்.
இந்த மகாளய பட்ச நாட்களில் காசி ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்கு சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்வது நம்மை எப்பேர்பட்ட தோஷத்திலிருந்து விடுவித்து நம்முடைய குடும்பத்திற்கு ஆசிர்வாதத்தை பெற்றுக் கொடுக்கிறது.
சிலருக்கு பித்ரு தோஷங்களால் குடும்பங்களில் பல தடைகள் சந்திப்பதை நாம் பார்க்கலாம். அவர்கள் இந்த மகாளய பட்ச நாட்களில் முன்னோர்களை முறையாக தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்யும் பொழுது அவர்கள் குடும்பத்தில் சந்திக்கின்ற தடைகள் யாவும் விலகி நல்ல மாற்றம் கிடைக்கிறது.
அதோடு மிக முக்கியமாக முறையாக நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாமல் எந்த கோவில்களிலும் நாம் பூஜை செய்தாலும் அந்த தெய்வங்கள் அதை முழுமையாக ஏற்றுக் கொள்வது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆக மகாளய பட்ச நாட்களை எளிதாக எடுத்துக் கொள்ளாமல் அதை முறையாக பயன்படுத்திக் கொண்டால் நம் வாழ்க்கையில் பல நன்மைகள் பெறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |







