சுக்கிர தோஷம் போக்கும் கஞ்சனூர் அக்கினீஸ்வரர் கோயில்
காவிரி வடகரையில் சோழவள நாட்டில் அமைந்துள்ள தேவார பாடல் பெற்ற சிவ தலங்களில் 36-வது தலம் ஆகும். நவகிரக தலங்களில் சுக்கிரனுக்குரிய பரிகார தலமாகவும் அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில் விளங்குகிறது. இத்தலம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து வடகிழக்கு சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
தல பெயர்கள்:
கஞ்சனூர் என்றால் தாமரை. தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மதேவன் சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் கஞ்சனூர் என பெயர் பெற்றது.
அக்னி தலம்:
அக்னி தேவன் வழிபட்ட தலம் என்பதால் இப்பெயர் உண்டானது. பல்லாச வனம்: இத்தலத்தின் தலவிருட்சம் பலாசம் என்பதால் இப்பெயரும் வழங்கப்பட்டு வருகிறது.
பிரம்மபுரி:
பிரம்மன் வழிபட்டதால் பிரம்மபுரி என்றும் அழைக்கப்படுகிறது.
நவகிரக சிறப்பு:
நவகிரக தலங்களில் இத்தலம் சுக்கிரனுக்கு உரிய தலமாக போற்றப்படுகிறது. ஆனால் மற்ற நவகிரக தலங்களைப் போல இங்கு சுக்கிரனுக்கு என்று தனி சன்னதி இல்லை. மூலவரான அக்னீஸ்வரரே லிங்க வடிவில் சுக்கிரனின் அம்சமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார் என்பது தனிச்சிறப்பு.
சிவபெருமான், சுக்கிரனின் தோஷத்தை போக்க அவருக்கு அருள் புரியும் விதமாக தாமே சுக்கிரனின் வடிவமாக இங்கு காட்சி தருகிறார் என்பது ஐதீகம். திருமண தடை நீங்க, செல்வ வளம் பெற, கலைகளில் சிறந்து விளங்க சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். வெள்ளிக்கிழமைகள் சுக்கிர வழிபாட்டிற்கு உகந்த நாளாகும்.
தல வரலாறு:
பிரம்மனுக்கு திருமண காட்சியளித்த தலம் இது. சிவபெருமான் அம்பிகை கற்பகாம்பிகையுடன் தனது திருமண கோலத்தை பிரம்மனுக்கு இங்கு காட்டி அருளினார் என்பது நம்பிக்கை. இதனால் திருமணத்தடை நீங்கும், இல்வாழ்க்கை சிறக்கவும் இங்குள்ள மூலவரையும் அம்பாளையும் பக்தர்கள் வழிபாடு செய்கின்றனர்.
பிரம்மனுக்கு திருமணக் காட்சி தந்தருளியதால் அம்பாள் சன்னதி மூலவர் சன்னதி வலது புறம் தனி சன்னதியில் அமைந்துள்ளது. பராசர முனிவர் இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு தான் அடைந்த சித்தபிரம்மை நீங்க பெற்றார். அப்போது சிவபெருமான் அவருக்கு முக்தி தாண்டவம் ஆடி காட்சியளித்த திருத்தலம் இதுவாகும்.
முக்தி மண்டபம் என்று அழைக்கப்படும் நடராஜ சபையில் நடராஜர் மற்றும் சிவகாமி ஆகிய தெய்வங்களின் திரு உருவச் சிலைகள் அமைந்துள்ளன. அக்னி தேவன் இங்கு சிவபெருமானை வழிபட்டு தனக்கிருந்த சோகை நோயை தீர்த்துக் கொண்டான். இதன் காரணமாகவே இறைவன் அக்னீஸ்வரர் என்ற திருநாமம் பெற்றார்.
கல் நந்தி புல் தின்ற அதிசயம்:
இத்தலத்தின் மிகவும் குறிப்பிடத்தக்க வரலாறு நிகழ்ந்த இடம் ஆகும். கஞ்சனூரில் வாழ்ந்த தேவசம்பு என்ற முதியவர் தவறுதலாக தன் பசுவின் கன்றின் மீது கனமான புல்லுக்கட்டை போட்டு விட கன்று உயிரிழந்தது. இதனால் ஏற்பட்ட பசு தோஷம் நீங்க காசிக்கு சென்று நீராட வேண்டும் என்று சிலர் கூறினர்.
அப்போது சிவனடியார் ஹரதத்த சிவாச்சாரியார் என்பவரிடம் முதியவர் ஆலோசனை கேட்க, அவர் நீங்கள் சிவனின் மீது பக்தி கொண்டவர், நடந்த பிழை பாவத்தில் சேராது என்று கூறி அதை நிரூபிக்க அக்னீஸ்வரர் கோயிலில் உள்ள கல் நந்திக்கு புல் கொடுத்து பார்க்கச் சொன்னார்.
முதியவர் புல் கொடுத்தபோது கொடிமரத்து அடுத்துள்ள கல் நந்தி தலையை திருப்பி புல்லை ஏற்றுக்கொண்டு தின்றது. இதனால் பசு தோஷம் நீங்கியது நிரூபணம் ஆனது. பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரிதத்தரின் வரலாற்று விளக்க இத்தலத்தில் இவருக்கு தனி சன்னதி உள்ளது. இன்றும் தலையை திருப்பி நிலையில் உள்ள கல்நந்தி இங்கு காணலாம்.
கோயில் அமைப்பு:
கஞ்சனூர் அக்னீஸ்வரர் திருக்கோயில் திராவிட கட்டிட கலையில், மத்திய காலச் சோழர்கள் மற்றும் விஜயநகர் மன்னர்களின் திருப்பணிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கிழக்கு நோக்கி 5 நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ராஜகோபுரம்: ஐந்து நிலைகளைக் கொண்ட உயரமான ராஜகோபுரம் கோயிலின் நுழைவாயிலாக உள்ளது.
பிரகாரங்கள்:
இக்கோயில் இரண்டு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. மூலவர் சன்னதி: மூலவரான அக்னீஸ்வரர் கிழக்கு நோக்கி சன்னதியில் சுயம்பு மூர்த்தியாக லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். இந்த லிங்கத்தின் மீது எண்ணெய் அபிஷேகம் செய்யும்போது அந்த எண்ணெய் முழுவதும் லிங்கத்தால் உறிஞ்சப்படுவது இத்தலத்தின் தனி சிறப்புகளுள் ஒன்றாகும். இவர் சுக்கிரனாகவும் வழிபடப்படுகிறார்.
அம்பாள் சன்னதி:
அம்பிகை கற்பகாம்பாள் மூலவர் சன்னதிக்கு வலது புறம் தனி சன்னதியில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். முக்தி மண்டபம்: நடராஜர் மற்றும் சிவகாமி திருவுருவச் சிலைகள் அமைந்துள்ள மண்டபம்.
கல் நந்தி:
கொடி மரத்திற்கு அருகில் தலையை திருப்பி நிலையில் கல்நந்தி அமைக்கப்பட்டுள்ளது. கற்பக விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்ரமணியர், மகாலட்சுமி, 63 நாயன்மார்கள், ஹரத சிவாச்சாரியார் மற்றும் சுரைக்காய் பக்தர் போன்றோரின் சன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன.
கல்வெட்டுகள்:
இக்கோயில் மத்திய காலச் சோழர்களால் கட்டப்பட்டு பின்னர் விஜயநகர பேரரசின் மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு விரிவாக்கப்பட்டது. இங்குள்ள கட்டிடக்கலை மற்றும் கல்வெட்டுகள் பல்வேறு வரலாற்றுக் காலங்களில் இப்பகுதியின் கலாச்சார மற்றும் மத நடைமுறைகள் பற்றிய தகவல்களை வழங்குகின்றன.
திருவிழாக்கள்:
இக்கோயிலில் சிவபெருமானுக்கு உரிய அனைத்து முக்கிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. மாசிமகம் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் சிவனடியார் ஹரதத்தர் வாழ்க்கைதொடர்புடைய விழா தை மாதத்தில் நடைபெறுகிறது. ஆடிப்பூரம், திருவாதிரை, நவராத்திரி, மகா சிவராத்திரி போன்ற விழாக்களும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.
வழிபாட்டு பலன்கள்:
இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபடுவோருக்கு கீழ்க்கண்ட நன்மைகள் கிட்டும் என நம்பப்படுகிறது. சுக்கிர தோஷம் நிவர்த்தியாகும். திருமண தடைகள் நீங்கி நல்ல துணை அமையும். செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு, வாகனம் போன்ற சுகபோக வாழ்வு கிட்டும். கலைத் திறமைகள் வளரும். நோய் மற்றும் உடல் உபாதைகள் நீங்கும்.
பூஜை முறைகள்:
இக்கோயிலில் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. சுக்கிரனுக்கு உகந்த வெள்ளைக்கமல மலர்கள், வெண்பட்டு ஆடை, நெய் தீபம், மொச்சை பயிர் போன்றவற்றை வைத்து வழிபட்டு சுக்கிர தோஷத்தில் இருந்து விடுபடலாம். சுக்கிர தோஷம் உள்ளவர்கள் சுக்கிரனுக்கு பக்கத்தில் இருக்கும் ஐம்பொன் சிவலிங்கத்தை வழிபடுவது சிறப்பு.
வழிபாட்டு நேரம்:
கோயில் பொதுவாக காலை 6 மணி முதல் மதியம் 12:30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9:00 மணி வரையிலும் திறந்திருக்கும். விசேஷ நாட்களில் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் நேரம் மாறலாம்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள். |







