திருமண தோஷம் போக்கும் கண்ணப்பர் திருக்கோயில்
திருவண்ணாமலை கிரிவலப் பாதைக்கு அருகில் ஒரு சிறுமலையின் உச்சியில் கண்ணப்ப நாயனார் கோவில் இருக்கின்றது. 350 படிக்கட்டுகள் ஏறி இங்கே சென்று சிவபூசை செய்யலாம். 14 கிலோமீட்டர் தொலைவு உள்ள கிரிவலப் பாதையில் இந்த ஒரு இடத்தில் மட்டும் தான் இச்சிறிய குன்று காணப்படுகிறது. பெரிய மலையை அண்ணாமலையார் என்றும் இச்சிறிய மலையை உண்ணாமலை அம்மன் என்றும் அழைப்பார்கள். இம்மலை பெரிய மலைக்கு பின்னே மறைந்து இருப்பதால் பலரது கண்களில் தெரிவதில்லை.
கிரிவலப் பாதையில் சற்று ஒதுங்கியுள்ள குன்றின் மீது அல்லது ஓர் ஒற்றைப் பாறையின் மீது உள்ள கோவில் கண்ணப்ப நாயனாரர் வணங்கிய சிவன் கோயில் ஆகும். இங்கு ஒரு காலத்தில் சித்தர்கள் நிறைய பேர் வசித்தனர். காரணம், அந்த குகைக்குள் புலிகள் வருவது கிடையாது. எனவே புலி புகாக் குகை என்று அதற்கு பெயர் சூட்டினர்.
கண்ணப்பனுக்கு அருள் பாலித்த சிவலிங்கம் மலைக்கோவிலின் கருவறையில் உள்ளது. இப்பகுதியில் வாழ்ந்த சித்தர்கள் ஒரு காலத்தில் இக்கோவிலில் உள்ள கருவறை நாதரை வணங்கி வந்தனர். திருவண்ணாமலை செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு உண்ணாமுலை அம்மன் குன்றின் மீது இருக்கும் இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்து விட்டது.
நாயன்மார் கதை
12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணத்தில் கண்ணப்ப நாயனார் கதை இடம்பெற்றுள்ளது. திருத்தொண்டர் புராணம் என்பது 63 தனி அடியார்களின் சிவபக்தியை விளககும் தனித்தனி கதைகளைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல் ஆகும். இந்நூலை சேக்கிழார் பெருமான் இயற்றினார். இதனைத் தொடர்ந்து எல்லா சிவபெருமான் கோவில்களிலும் 63 நாயன்மார்களுக்கும் சிலை வைத்துப் போற்றும் மரபு தோன்றியது. சிலைகளின் கீழே அவர்கள் அவதரித்த மாதமும் திருநட்சத்திரமும் எழுதி வைக்கப்பட்டது.
64 பேர் கூத்து
சிவன் கோவில் விழாக்களில் குறிப்பாக மயிலார்ப்பூர் கபாலீச்வரர் கற்பகாம்பாள் கோயிலில் அறுபத்தி மூவர் உலா சிறப்பிடம் பெற்றுள்ளது.. கேரளாவில் அறுபத்து நால்வர் கூத்து ஒரு சிவன் கோயிலில் நடைபெறும். அறுபத்து நான்காவது சிவ பக்தராக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பாட்டனார் விளங்கினார். அவர் பங்கு பெறும் கூத்து நிகழ்வுடன் சேர்த்து 64 பேர் விழாவாக நடைபெற்றது. (செ. இராசு, செந்தமிழ்க் குல வேளிர் எம்ஜிஆர்)
தல புராணங்கள்
ஏழாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பின்பு பக்தி இயக்கக் காலத்தில் சைவ சமயக் குரவர்கள் தொடர்ந்து பல சிவத்தலங்களுக்கும் சென்று சிவபெருமானைப் பற்றி பல பதிகங்கள் பாடிப் பரவினர். இதனால் தேவாரம் பாடிய திருத்தலங்களுக்கு மதிப்பு உயர்ந்தது. உடனே உள்ளூர் கவிராயர்கள் இத்தலங்களுக்கு ஒரு தலபுராணத்தை இயற்றுவது வாடிக்கையாகி விட்டது.
சமய ஒருங்கிணைப்பு
மக்கள் ஆதிகாலம் தொட்டு வழிபட்டு வந்த நடுகல் வழிபாட்டிலும் முன்னோர் வழிபாட்டிலும் இருந்த வீர யுகத்தைச் சேர்ந்த தெய்வங்களை உள்ளூர் கவிராயர்கள் தங்களுடைய தல புராணத்தில் இணைத்துக் கொண்டனர். தலபுராணம் இயற்றுவதற்கு முன்பு அங்கிருந்த பௌத்த சமண தெய்வங்களையும் சூரியன் சந்திரர் அக்கினி போன்ற இயற்கை வழிபாட்டு அம்சங்களையும் ஸ்தல புராணத்தில் சிவ பக்தர்கள் ஆக்கினர். பௌத்த துறவிகளை முனி என்று மக்கள் அழைத்தனர். அவர்கள் ஸ்தல புராணங்களில் ரிஷிகள் ஆயினர். இவ்வாறு தன் காலத்திற்கு முன் இருந்த வழிபாட்டு முறைகளையும் தெய்வங்களையும் ஒருங்கிணைத்து சிவன் வழிபாடு என்ற ஒரு குடைக் கீழ் கொண்டு வந்தனர்.
தென்னாடுடைய சிவன்
ஒரு சிவத்தலம் என்பது தலம், மூர்த்தி, விருட்சம் என்ற மூன்று அம்சங்கள் கொண்டதாக உருவாக்கப்பட்டது. அதன் பின்பு அங்கு வழிபடு தெய்வமாக விளங்கிய சிவ பெருமானைப் பற்றிய போற்றி பாடல்கள், கதைகள் தர்க்கங்கள் வாதங்கள் ஆகியன தொடர்ந்தன. இவை மக்கள் செல்வாக்கும் பெற்றன. தென்னாட்டுக்குரிய தெய்வமாக சிவபெருமான் போற்றிப் புகழப்பட்டார்.
கண்ணப்பன் நாயனரான கதை
உடுப்பூர் என்ற ஊரில் நாகன், தத்தை என்ற இருவர் வாழ்ந்து வந்தனர். இவர்கள் மலைவாழ் மக்கள். தங்கள் குலதெய்வமான முருகன் கோவிலுக்குச் சென்று நல்ல ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று வணங்கி வர வேண்டுமென்று ஆசை இருந்தது. ஆனால் இவர்களுக்கு அதிக வயதாகிவிட்டபடியால் மலையேறி முருகன் கோவிலுக்குச் செல்ல இவர்களால் இயலவில்லை.
தத்தை கருவுற்று ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை நல்ல வலிமையானவன் ஆக விளங்க வேண்டும் என்ற ஆசையில் திண்ணன் என்று பெயர் சூட்டின் சூட்டினர். பதினாறு வயதானபோது அவன் வேடர்களின் தலைவனாக உயர்ந்து விட்டான். ஒரு நாள் ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாட விரட்டிய போது வழிதவறி காட்டிற்கு உள்ளே வெகுதூரம் சென்று விட்டான். அங்கிருந்து பார்த்தபோது சிறுமலை ஒன்று சிவபெருமானாகத் தோன்றியது.
சிவ பூஜை
கண்ணப்பன் தினமும் தன் காட்டில் சுயம்புவாக முளைத்திருந்த ஒரு சிவலிங்கத்தைத் தன் வழிபடுதெய்வமாகக் கொண்டான். தினமும் தன் வாய் நிறைய அருவி நீரைக் கொண்டு வந்து அந்த சிவலிங்கத்தின் மீது உமிழ்ந்து அதனைத் துடைத்து விடுவான். பின்பு தான் வேட்டையாடிய இறைச்சியில் சுவையான பகுதி எது என்று தின்று பார்த்து அதை சிவலிங்கத்திற்கு உணவாகப் படைப்பான். அந்தப் பகுதியில் பூத்திருந்த அழகான காட்டு மலர்களைப் பறித்து சிவலிங்கத்துக்கு பூஜை செய்வான்.
திண்ணன் சிவ பூசை செய்து வரும் வேளையில் அந்தச் சிவலிங்கத்திற்குப் பிராமணர் ஒருவர் தினமும் பூசை செய்து வந்தார். அவர் எச்சில் நீரும் எச்சில் இறைச்சியும் இருப்பதைப் பார்த்து அருவருப்பும் கோபமும் கொண்டவராக மீண்டும் சிவலிங்கத்தைத் தூய்மைப்படுத்தித் தான் கொண்டு வந்த ஒரு குவளைப் பாலை சிவலிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார். வாசனை மிக்க மலர்களை வைத்துப் பூசித்து ஆராதனை செய்வார். அவர் கோபமும் ஆத்திரமும் அடைந்தபோது சிவபெருமான் அசரீரியாக அவனை கோபிக்காதே அவன் என் சிறந்த பக்தன் என்றார்.
திண்ணன் தினமும் தன்னுடைய முறைப்படியே பூஜைகளை செய்து கொண்டு வந்தான். ஒரு நாள் சிவலிங்கத்தின் கண்ணில் இருந்து இரத்தம் வடிவதைக் கண்டான் கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பது மலைவாழ் மக்களின் தத்துவமாக வாழ்க்கையின் தாரக மந்திரமாக இருந்ததனால் உடனே திண்ணன் தன்னிடமிருந்த கூர்மையான அம்பினை எடுத்துத் தன் ஒரு கண்ணைத் தோண்டி சிவலிங்கத்தின் இரத்தம் வடிந்து கொண்டிருந்த கண்ணின் மீது அப்பினான். இரத்தம் வடிவது நின்று விட்டது. இவனுக்குக் கண் பார்வை போய் விட்டாலும் தோண்டப்பட்ட கண் குழியிலிருந்து இரத்தம் வடிந்தாலும் இவன் அவற்றை பொருட்படுத்தாமல் சிவலிங்கத்தில் இரத்தம் வடிவது நின்று விட்டதை நினைத்து ஆனந்தக் கூத்தாடினான். ஆனால் அந்த ஆனந்தம் வெகு நேரம் நீடிக்கவில்லை
ஒரு கண்ணில் இரத்தம் வடிவது சில நிமிடங்களிலேயே மறு கண்ணில் இருந்து இரத்தம் வடிய தொடங்கியது. அதைப் பார்த்தவுடன் திண்ணன் 'அதனால் என்ன, எனக்கு இன்னொரு கண் இருக்கின்றதே` சிவபெருமானுக்கும் இரண்டு கண் மட்டும்தான் இருக்கின்றது. இந்த கண்ணைத் தோண்டி அப்பினால் அந்தக் கண்ணில் இரத்தம் வடிவது நின்றுவிடும். சிவலிங்கத்துக்கு இரண்டு கண்ணிலும் பார்வை வரும்' என்று நினைத்தான். தன்னிடம் இன்னொரு கண் இருக்கின்றதே என்ற உவகையில் பெருமகிழ்வுடன் அந்தக் கண்ணையும் தோண்டி அப்பினான். இப்போது இவனுக்கு இரண்டு கண்ணும் தெரியவில்லை. ஆனால் லிங்கத்தைத் தொட்டுப் பார்த்தான். இரத்தம் வடிவது நின்று விட்டது. உடனே மகிழ்ச்சியில் திளைத்தான். ஆனந்தக் கூத்தாடினான்.
திண்ணனைக் கையும் களவுமாகப் பிடித்து இறைச்சியை இங்குக் கொண்டு வந்து வைக்காதே என்று சொல்லித் தண்டிக்க வேண்டும் என்று நினைத்து கொஞ்சம் சீக்கிரமாகவே வந்த அந்தணர் திண்ணனின் பக்தியைப் பார்த்து வியந்து போனார். அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது. 'இப்படியும் ஒரு முரட்டு பக்தனா? கண்ணுக்கு கண் தோண்டி எடுத்து வைக்கின்றானே!' என்று அதிர்ந்து போனார். அப்போது சிவபெருமான் திண்ணனுக்குக் காட்சியளித்தார். அவன் தன்னுடைய ஊனக் கண்ணால் ஞானக் காட்சியை பார்த்தான். 'எனக்கு கண்களை அப்பிய கண்ணப்பா' என்று திண்ணனை சிவபெருமான் அழைத்தார். அன்று முதல் அவன் பெயர் கண்ணப்பர் ஆயிற்று சிவபெருமான் மீது அபரிமிதமான அன்பு கொண்டிருந்த கண்ணப்பன் 63 அடியார்களில் ஒருவராக கண்ணப்ப நாயனார் என்று போற்றப்பட்டார்.
பரிகார ஸ்தலம்
காளஹஸ்திக்குச் செல்ல முடியாதவர்களுக்குத் தோஷ நிவர்த்தி பரிகார ஸ்தலமாக கண்ணப்ப நாயனார் திருக்கோவில் விளங்குகின்றது. திருமண தோஷம் மற்றும் நாகதோஷம் உடையவர்கள் திருமணத்தடை உள்ளவர்கள் இக்கோவிலுக்கு வந்து கண்ணப்ப நாயனார் வழிபட்ட சிவபெருமானை வணங்கிச் செல்கின்றனர். எனவே இது திருமணப் பரிகார ஸ்தலமாக விளங்குகின்றது