ஈழத்து மாப்பிள்ளை: கதிர்காமத்தில் வள்ளியை மணமுடித்த முருகனின் சிறப்புகள்
இலங்கையின் புகழ்பெற்ற முருகன் திருத்தலம் கதிர்காமம் முருகன் திருக்கோயில், கதிர் என்றால் ஒளி, காம என்பது கிராமத்தின் திரிபு, எனவே கதிர்காமம் என பெயர்பெற்றது.
முருகன் தமிழ்நாட்டில் பிறந்திருந்தாலும், வள்ளியை மணமுடித்தது என்னவோ கதிர்காமத்தில் தான் என்கிற கூற்றும் இருக்கிறது, அதன்படி பார்த்தால் முருகன் ஈழத்து மாப்பிள்ளையாம்.
கருவறை வாசலை திரையிட்டு மூடியுள்ள அதிசய கோயிலும், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய திருத்தலமும் இதுவே.
வேட்டுவ குலப்பெண்ணான வள்ளியை முருகப்பெருமான் காதலித்து கரம்பிடித்த இடம் இதுவே எனவும் சொல்லப்படுகிறது.
தெய்வானை, வள்ளியம்மை இருவரையும் மணம்முடித்த பின்னர், தனக்கு பிடித்த இடம் கதிர்காமமே என கூறி, பக்தர்களுக்கு அருள் வழங்குகின்றார் என தட்சிண கைலாசபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அருணகிரிநாதரின் திருப்புகழிலும், சூரனை வதம் செய்ய வந்தபோது வள்ளியை சந்தித்து திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
அதாவது, வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே என பாடியிருக்கிறார்.
இக்கோயிலில் ராஜகோபுரம், மகாமண்டபம் என எதுவும் கிடையாது, வலதுபுறம் விநாயகர் சன்னிதி அமையப்பெற்றுள்ளது.
முருகன் சன்னிதியின் இடதுபுறம் தெய்வானை சன்னிதி இருக்கிறது, விக்கிரகம் இல்லை, ஓவியங்களாகத்தான் வழிபடப்படுகிறது.
விக்கிரகத்தை மகான் ஒருவர் மந்திரப்பெட்டியில் வைத்திருப்பதாக சொல்கிறார், கோயிலில் உள்ள ஏழு திரைகளுக்கு பின்னர் மந்திர பெட்டி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.
இங்கு பூஜை செய்பவர்களை “கப்புராளைமார்” என அழைக்கின்றனர், நாம் அளிக்கும் பூஜை பொருட்களை பெற்றுக்கொண்டு திரைக்கு பின்னர் அர்ச்சனை செய்துவிட்டு மறுபடியும் நம்மிடம் வழங்குவார்கள்.
யாராக இருந்தாலும் திரையை விலக்கி காணஇயலாது, திரைமீதுள்ள ஓவிய வடிவத்தை மட்டுமே தரிசிக்க முடியும்.
ஆன்மீகம்/ஜோதிடம் குறித்த தகவல்களை பெற IBC பக்தி வாட்ஸ் அப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள் |